முள்ளிவாய்க்கால்…

தலையங்கம்

13 வருடங்கள் கடந்தும் வலி தணிவதாகவில்லை. குழுமிநின்ற மக்களின் குருதியால் நந்திக்கடல் குளிப்பாட்டப்பட்ட காட்சிகள் வரலாற்றில் தீர்க்கமாகப் பொறிக்கப்பட்டவை.

வலியின் உச்சம் இனியெந்தக் காயங்களையும் தாங்குவதற்குத் தமிழரைத் தயார்ப்படுத்தியிருக்கிறது. ஆயுதம் தாங்கிய காவலர்களது முகங்களை உரசும் தாய்மார்களது தீர்க்கம் அதன் சாட்சி. இத் தீர்க்கமே இனிமேல் தமிழரின் ஆயுதம். அந்த ஆயுதப் போராட்டத்துக்கான காலம் இனிமேல்தான் வரப் போகிறது.

12 வயதுச் சிறுவனுக்கு உணவளித்துக் கொன்றவனும், அவனை ஏவியவனும் உள்ளாக அழுகிப் புழுக்களால் புசிக்கப்படும் காலம் தான் தமிழரின் ஆத்ம ஈடேற்றத்துக்கான காலமாக அமையும். கையில் கொடுத்துக் கண்ணீருடன் அனுப்பிய மகனைத் திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு தாய் விழித்திருந்தே மரணமானாள். இன்னும் பலர் விழித்தபடியே உறங்குகிறார்கள். புசித்த பேய்கள் மட்டும் புலால் நாற்றத்துடன் இன்னமும் வலம் வருகின்றன. பார்க்க வலிக்கிறது.

சக மனிதரால் நிலங்களே இன்னும் கழுவப்படாதபோது மனங்களைக் கழுவக் கடவுள்கள் வருவரென எதிர்பார்க்க முடியாது. இயற்கை ஒன்றினாலேயே அதைச் சாதிக்க முடியும். அவர்களையும், இவர்களையும் அடையாளம் காணவும் அப்புறப்படுத்தவும் அதற்கு மட்டுமே பலமுண்டு. அது நடக்கும். வேறு வழிகளில் நம்பிக்கை தகர்ந்ததன் பின்னர் விண்ணை நோக்கியே எமது பிரார்த்தனை இருக்கும். வரும். நம்புவோம்.