முள்ளிவாய்க்கால் நினைவுநாளை அனுட்டித்தமைக்காக நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது
மே 18 தினத்தைக் கனடிய அரசே தமிழினப்படுகொலை நாளாக அறிவித்த பின்னரும் தமிழ்நாடு அரசினால் அதைச் செய்ய முடியாமலிருக்கிறது
திருமுருகன் காந்தி
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த ஞாயிறன்று தமிழ்நாட்டில் நடைபெற்ற நினைவெழுச்சி நிகழ்வில் பங்குபற்றிய நூற்றுக்கணக்கான உணர்வாளர்களைத் தமிழ்நாடு காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
மே 17 இயக்கத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்வுவுகளுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்திருந்ததெனவும் அதையும் மீறி மே 17 இலக்கத்தினர் நிகழ்வுகளை அனுட்டித்தமையால் காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் இனப்படுகொலை நாளை நினைவுநாளாக அனுட்டிப்பதைத் தி.மு.க. அரசு தடைசெய்தமைக்கு எதிராக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்திருந்ததுடன் அக் கட்சியின் இரட்டை வேடம் குறித்து சாடியும் இருந்தார். இது குறித்து ‘தி இந்து’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் “மே 18 தினத்தைக் கனடிய அரசே தமிழினப்படுகொலை நாளாக அறிவித்த பின்னரும் தமிழ்நாடு அரசினால் அதைச் செய்ய முடியாமலிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபடும் அரசெனத் தம்மைக் கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு ஏன் முள்ளிவாய்க்கால் நினைவுநாளைக் கொண்டாட எம்மை அனுமதிக்கவில்லை? பா.ஜ.க. அரசுக்குப் பயந்து அ.இ.அ.தி.மு.க. அரசு இதை அனுமதிக்கவில்லை என்று கூறினாலும், தி.மு.க. அரசு ஏன் எங்களுக்குப் பயப்படவேண்டும். பெரியாரின் தோழர்கள் ஒரு மெழுகுதிரியைக்கூட ஏற்றுவதற்கு அனுமதியில்லை. விநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பார்களா?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இருப்பொஇனும், தடைகளையும் மீறி பல் நூற்றுக்கணக்கானோர் இந் நிகழ்வில் பங்குபற்றியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு காவல் துறையினர் பலரையும் கைதுசெய்ததாகத் தெரிய வருகிறது.