யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்றிரவு முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.
மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாகப் பல்கலைக்கழக நிர்வாகமே இதைச் செய்தது எனத் துணைவேந்தர் அறிக்கை வெளியிட்டிருப்பதாகச் செய்திகள் கிடைத்துள்ளன.

முன்னாள் துணைவேந்தருக்கும் இப்படியான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என்றும் அதற்கு இணங்காமையினால் அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் எனவும், தற்போதைய துணைவேந்தரது நியமனத்துக்கு இவ்விடித்தழிப்பு ஒரு நிபந்தனையாக இருந்திருக்கலாமெனத் தான் சந்தேகிப்பதாக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி குருபரன் ருவீட் செய்துள்ளார்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரச தலைவர்களே நியமிப்பது வழக்கம்.
யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனேயே பல்கலைக் கழகத்துக்கு விரைந்ததாயும் காவலில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் அவரை அவ்விடத்திலிருந்து அகலுமாறு பணிக்க அவர் தான் வீதியில் தான் நிற்கிறேன் எனக்கூறி அகல மறுத்துவிட்டர் எனவும் காணொளிப்பதிவுகள் தெரிவிக்கின்றன.
சில மாணவர்கள், அரசியல்வாதிகள் சகிதம் வளாகத்துக்குள் நுழைந்து அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் படையினர் உள்ளேயும், வெளியேயும் ஆயுதங்களுடன் ரோந்து வந்துகொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இரவு நேரமாயினும், செய்தியறிந்த பொதுமக்களும் பல்கலைக்கழகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் எனவும் தெரியவருகிறது.