Columnsசிவதாசன்

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ‘இனப்படுகொலையா’? – ஒரு வி(தண்டா)வாதம்

பாலஸ்தீனியர் மீதான இனப்படுகொலையைக் காரணம் காட்டி இஸ்ரேல் அதிபர் நெட்டன்யாஹு, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஹமாஸ் தலைவர்கள் ஆகியோரைக் கைதுசெய்யப் பிடியாணையை வழங்கப்போவதாக சென்ற வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுனர் கரிம் கான் அறிவித்திருக்கிறார். பாலஸ்தீனத்தை விட ஈழத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைச் சம்பவங்கள் பன்மடங்கு மோசமாக இருந்திருப்பினும் அவ்வினவழிப்பு திட்டமிட்ட, சர்வதேச சதியுடன் கட்டிய மறைப்புக்குப் பின்னால் நடைபெற்ற, சாட்சியமற்ற படுகொலை என்பதால், பாலஸ்தீனத்தைப் போல, உலகம் அதை முற்றாக அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனாலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்று 15 ஆவது வலி சுமக்கும் வருடத்தை பாலஸ்தீனிய படுகொலைகளின் பின்னணியில் வைத்து உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் நினைவுகூர்வது மேலும் வேதனையைத் தருவது.

இப்பின்னணியில் இஸ்ரேலிய, ஹமாஸ் தலைவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விடுத்திருக்கும் பிடியாணை தமிழர்கள் மத்தியில் சிலவேளைகளில் அவர்கள் எதிர்பார்க்கும் நீதிக்கான பொறியொன்றின் தூரத்துப் புள்ளியாகத் தென்படலாம். பாலஸ்தீனத் தட்டில் வைத்து ஈழத்தை எடைபோட முடியாதுதான் ஆனால் தராசு யார் கைகளில் இருக்கிறது என்பதை வைத்தாவது எமது எதிர்ப்பார்ப்புகளின் சாத்தியத்தன்மையைப் புரிந்துகொள்ள முடியுமென்பதற்காகவே இக் கட்டுரை.

காசாவை மையப்படுத்தி சர்வதேச நீதிக்கான நீதிமன்றமும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் மறக்கப்பட்ட தமது இருப்புக்களைக் காட்டுவதற்காக தமது சிறந்த அரசியல் ஆடைகளுடன் நடனமாடுகின்றன. இஸ்ரேல் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடிய ஆதாரங்கள் இருக்கின்றன என சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் ‘பரிந்துரைக்கின்ற’ அதே வேளை பிடியாணையை அறிவிக்கும் அளவுக்கு குற்றவியல் நீதிமன்றம் சென்றிருப்பது இந்த இரண்டில் எது வலிமையானது என ஓரளவுக்கு ஒப்பிடக்கூடியாத இருக்கும்.

இரண்டு நீதிமன்றங்களும் ஹேக், நெதெர்லாந்தில் ஒரு சுற்றுவட்டாரத்தில் தான் இருக்கின்றன. இவற்றில் 1945 இல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் ஒரு ஐ.நா. சபையின் அங்கம். இதில் பணியாற்றும் 15 நீதிபதிகளையும் ஐ.நா. பொது மற்றும் பாதுகாப்பு சபையே தெரிவுசெய்து அவர்களுக்குச் சம்பளமும் கொடுக்கிறது. ஐ.நா. சபையைப் போல, இதுவும் கையாலாகாத ஒரு அம்சம் தான். ஏறத்தாழ 80 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவொரு காத்திரமான தீர்ப்பையும் இது முன்மொழிந்ததல்ல. இத்தனைக்கும் ஒவ்வொரு நீதிபதியும் ஏறத்தாழ US$ 200,000 சம்பளம் எடுக்கிறார்கள். இதன் வியாபாரம் அரசுகளுடன் மட்டுமே. தனிப்பட்டவர்கள் மீது கைவைக்க அதிகாரம் இல்லை.

சர்வதேச நீதிக்கான நீதிமன்றத்திற்கு குற்றம் புரிந்ததெனக் கருதும் ஒரு நாட்டை ‘இழுத்து வந்து’ வழக்குப்பதிய முடியாது. சமபந்தப்பட்ட நாட்டின் ஒப்புதல் அதற்குத் தேவை. இஸ்ரேல் விடயத்தில் தென்னாபிரிக்கா குற்றம்சாட்டுமளவுக்குத் தான் இனப்படுகொலை செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்காக அது சம்மதம் தெரிவித்தது. காரணம் 1950 இல் கைச்சாத்திடப்பட்ட ‘இனப்படுகொலை ஒப்பந்தத்தில்’ (genocide convention) இஸ்ரேல் கையெழுத்திட்டிருந்தமையே. இலங்கை விடயத்தில் அதை இந்நீதிமன்றத்திற்கு எவரும் முறைப்பட்டு செய்யவுமில்லை; இலங்கை அதற்குச் சம்பதிக்கவுமில்லை. இந்நீதிமன்றம் எவ்வித தீர்ப்பை வழங்கினாலும் அதைச் செயற்படுத்தும் அதிகாரம் அதற்கில்லை. இதே வேளை குற்றவாளியெனக் கருதும் ஒருநாட்டின்மீது விசாரணைகளை நடத்தும்படி குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் அதிகாரம் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு உண்டு. டார்ஃபுர் விடயத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபை இப்படிச் செய்திருந்தது. முள்ளிவாய்க்கால் விடயத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபை இதைச் செய்யவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையர் மிஷெல் பக்லெ இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் அவருக்கு எதிராக வீசிய பலமான காற்று அம்முயற்சியை நீர்த்துப்போகச் செய்துவிட்டது.

ஒப்பீட்டளவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு வயது குறைவு. 2001 இல் ரோம் நகரில் ஒரு ஒப்பந்தத்தின் பேரில் உருவாக்கப்பட்ட நிரந்தரமான நீதிமன்றம். வயது குறைந்ததனாலோ என்னவோ இதற்கு கொஞ்சம் துடியாட்டம் அதிகம். சர்வதேச நியமங்களுடன் ஒப்பிடும்போது மோசமானதென அடையாளம் காணப்படும் குற்றச்செயல்களைச் செய்பவர்களை விசாரிக்கும் / கைதுசெய்யும் தகமை இதற்குண்டு. ஆனால் இந்த ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளால் மட்டுமே குற்றவாளிகளைக் கைதுசெய்ய முடியும். இதற்காக இந்நீதிமன்றம் ஒரு வழக்குத் தொடுநரை (prosecutor) நியமித்திருக்கிறது. சுழற்சி முறையில் இப்பதவி மாற்றப்படும். இப்போது நெட்டன்யாஹு மீது பிடியாணையை அறிவித்திருப்பவர் பிரித்தானியாவில் பிறந்த கரிம் கான் என்பவர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் தனியான பொலிஸ் சேவை கிடையாது. ஆனால் அதன் உத்தரவைக் கையெழுத்திட்ட நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்பது விதி. இதர குற்ற வழக்குகள் போன்றே இவ்வழக்குகளும் விசாரிக்கப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கான உரிமைகள், வாதாட வழக்கறிஞர்கள் ஆகியன வழங்கப்படும். நீதிபதிகளின் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொள்ளும். குற்றம்சாட்டப்பட்டவர் நேரடியாக நீதிமன்றத்தில் சமூகமளித்திருப்பது அவசியம். குற்றவாளியென ஒருவர் காணப்பட்டால் அவருக்கு மரண தண்டனையைத் தவிர்ந்த, சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது சொத்து பறிமுதல் ஆகியவற்றைப் பரிந்துரைக்க இந்நீதிபதிகளுக்கு அதிகாரமுணடு.

ரோம் விதியில் 124 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. குற்றவாளியெனக் காணப்படும் ஒருவர் இப்படியான நாடுகளில் (124) ஒன்றின் குடிமகனாக இருந்தாலோ அல்லது அக்குற்றம் இப்படியான நாடொன்றில் புரியப்பட்டிருந்தாலோ மட்டுமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அவ்வழக்கை விசாரிக்க முடியும். அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் விடயத்தில் ‘இனப்ப்டுகொலை’, ‘மனிதத்துக்கெதிரான குற்றங்கள்’, ‘போர்க்குற்றங்கள்’ மிழைத்தவர்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கெனப் போராடுபவர்களை நீங்கள் நம்பவேண்டியதில்லை.

மாறாக, சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அரசை மட்டுமே விசாரிக்க்க முடியும். சர்வதேச சட்டங்களை ஒரு நாடு / அரசு மீறியிருக்கிறதா என்பதை மட்டுமே இந்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கிறது. குற்றவாளியெனக் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நட்டஈடு வழங்குவதை இந்நீதிமன்றம் பரிந்துரைக்கலாம். ஒரு நாட்டில் அநீதி இழைக்கப்படுகிறது அல்லது மனித உரிமைகள் மீறப்படுகிறது என இன்னுமொரு நாடு சந்தேகித்தால் அந்நாட்டின் மீது விசாரணைகளை மேற்கொள்ளும்படி மூன்றாவது நாடொன்று இந்நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்கலாம். காசா விடயத்தில் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவும் பின்னர் வேறு பல நாடுகளும் இஸ்ரேல் மீது விசாரணைகளை மேற்கொள்ளும்படி விண்ணப்பித்திருந்தன. காசாவில் இனப்படுகொலை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன என்பதோடு இந்நீதிமன்றம் நிறுத்திக்கொண்டது.

பாலஸ்தீனத்திற்கும் ஈழத்திற்குமிடையே பல சமாந்தரங்கள் உண்டி. ஈழப்போரில் பங்குபற்றிய பல போராளிகளுக்கு பயிற்சிகள், ஆயுதங்கள் என வழங்கியவர்கள் பாலஸ்தீனியர்கள். ஈழத்தின் இறுதிப்போரின்போது அமெரிக்காவின் சார்பில் இஸ்ரேல் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குபற்றியிருந்தது உண்மை. யுத்த சூனியப் பிரதேசம் என நந்திக்கடலோஈரம் ஒதுக்கப்பட்டது போலவே காசாவிலும் நடைபெற்றதும் நம்பவைக்கப்பட்ட மக்கள் மீது குண்டுகள் பொழியப்பட்டு வருவதும் அதிசயப்படத் தேவையில்லாத ஒற்றுமை. இரண்டு இடங்களிலும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்பது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் கனடிய தமிழ் அரசியல்வாதிகள் பாலஸ்தீன இனப்படுகொலையை மறுத்தும் மறைத்தும் விட்டு ஈழத்து இனப்படுகொலையைப் பற்றி மட்டும் மேடைகளில் முழங்கியும், எழுதிக்குவித்தும் அட்டகாசம் புரிவது நகைப்புக்குரியது. இதனால் தமிழர்களது ‘இனப்படுகொலை’ வாதத்தை இவர்களே மழுங்கடிக்கச் செய்கிறார்கள் என்பதை இவர்கள் உணர்வதில்லை.