முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் தங்க நகைகளை அகழ்ந்தெடுக்கும் முயற்சிகள் ஆரம்பம்
நகைகளை மீட்க முயன்றதாக அமைச்சர்கள் டக்ளஸ் தேவாநந்தா, சரத் வீரசேகரா ஆகியோரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் மீது விசாரணை?
போர்க் காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்படது எனச் சந்தேகிக்கப்படும் நகைகளை நீதிமன்ற ஆணையுடன் மீட்டெடுக்கும் முயற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால் காலநிலை மற்றும் சில தொழில்நுட்பத் தவறுகள் காரணமாக அம் முயற்சி பின்போடப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு நீதவான் தலைமையில் பொலிஸ் சிறப்பு செயலணியினால் சுதந்திரபுரம் பகுதியில் இம் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப் பகுதியில் தங்க நகைகள் புதைத்துவைக்கப்பட்டிருக்கிறது எனக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிசார் இம் முயற்சியில் இறங்கியிருந்தனர்.
இப்பகுதியில் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் அதை மீட்க அமைச்சர்கள் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் சரத் வீரசேகாரா ஆகியோரின் ஒருங்கிணைப்புச் செயலாளரகள் முயற்சிகள் எடுத்தமை தொடர்பாக பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவு ஏற்கெனவே விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.