முற்றிவரும் வடமாகாண மீனவர் விவகாரம்: அமைச்சர் தேவாநந்தாவுடன் மீனவர் வாய்த் தர்க்கம்
இந்தியப் படகுகளைப் பிடித்து வடமாகாண மீனவர்களுக்கு கொடுக்கும்படி அமைச்சர் உத்தரவு
அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் வரும் இந்திய படகுகளைப் பிடித்து வைக்கும்படி இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உத்தரவிட்டிருக்கிறார். பருத்தித்துறை சுப்பர்மடத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் “இனிமேல் அத்துமீறும் இந்தியப்படகுகளைப் பறிமுதல் செய்து வடமாகாண மீனவர்களுக்குக் கொடுப்பேன்” என அவர் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
கடந்த பல வருடங்களாக நடைபெற்றுவரும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களின் காரணமாக இலங்கைக் கடல்பிரதேசத்துக்குள் மீன்வளம் அருகிப்போவதனால் வடமாகாண மீனவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதுடன் அவர்களது வலைகள் மற்றும் உபகரணங்களும் இப் படகுகளால் சீரziக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு இப் பிரதேசத்திலுள்ள கடல்வாழ் உயிரினம் மற்றும் பவளப்பாறைகள் வாரியெடுக்கப்படுவதனால் சூழல் சமநிலை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களையும் இதன் காரணமாக ஏற்பட்ட இரணடு மீனவர்களின் உயிரிழப்புக்களையும் கண்டித்து கடந்த 5 நாட்களாக வடமாகாண மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வெள்ளியன்று (4) அமைச்சர் தேவாநந்தா கலந்துகொண்ட கூட்டத்தில் சுமார் 500 பேர்வரை கலந்துகொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். இதன்போது அமைச்சருக்கும் மீனவர்களுக்குமிடையில் எழுந்த வாக்குவாதத்தின்போது “இது தொடர்பான உத்தரவாதத்தை அமைச்சர் எழுத்துமூளம் தரவேண்டும்” என மீனவர்கள் குரலெழுப்பியபோது ஆத்திரமடைந்த அமைச்சர் “என்னை நம்புங்கள். இந்த அத்துமீறல்கள் இனிமேல் நடைபெறாது. என்னைத் திட்டுவதை நிறுத்துங்கள்” எனக் கூறியிருந்ததாகத் தெரிகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகளும் தமது அரசியல் நலன்களுக்காக மீனவர்களைப் பிளவுபடுத்திப் பாவித்து வருகின்றன என அமைச்சர் தேவாநந்தா குற்றஞ்சாட்டியுளார். கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் இப் போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பா.உ. எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பா.உ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
“என்ன இருந்தாலும் இவ்விவகாரம் இரு நாடுகளினதும் பாதுகாப்பு, எல்லைகள் தொடர்பானது. அதை ராஜதந்திர முறையிலேயே தீர்த்துக்கொள்ள முடியும். இதற்கு நான் எழுத்தில் உத்தரவாதம் கொடுக்க முடியாது. இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் மீனவர்களைத் தூண்டிவிடுவது தவறு” என அமைச்சர் தேவாநந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
இதே வேளை, இவ் விவகாரத்துக்கு ராஜதந்திர முறையில் தீர்வு காணும்வரை, இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பிடித்து அவற்றை இலங்கை மீனவர்களிடம் கையளிப்பதே இப்போதைக்கு செய்யக்கூடியது என அமைச்சர் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
“இந்திய இழுவைப்படகுகளைப் பிடித்து எமது நீதிமன்றங்களின் இலங்கை மீனவர்களுக்கு அவற்றைக் கொடுப்பதன் மூலம் இரு தரப்பினரும் இந்திய இழுவைப்படகுகளுடன் ஒரே பிரதேசத்தில் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது இந்திய படகுகள் இவற்றைக் கண்டு இப்பிரதேசத்துக்குள் நுழைவதற்கு தயங்குவார்கள்” எனத் தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாகக் கவனிப்பாரற்று, தொடர்ந்துவரும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத்தரும்படி தாம் கேட்டுவந்ததாகவும் ஆனால் அரசாங்கம் இதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை எனவும் எனவே தான் தாம் இந்த தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், இதில் எந்த அரசியல் கட்சிகளினதும் தலையீடு இல்லையெனவும் போராடும் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இரண்டு மீனவர்களின் மரணம் தொடர்பாக கொழும்பு நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இரு தரப்புகளிடையே எழுந்த மோதலின்போது இவ்விரு இலங்கை மீனவர்களும் கொல்லப்பட்டிருக்கலாமெனத் தான் நம்புவதாகவும் அமைச்சர் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
இதே வேளை மீனவர்களின் இத் தொடர் போராட்டத்தினால் போக்குவரத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன, பொதுமக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படுகிறது, கோவிட் 19 தொற்றாபத்து இருக்கிறது என்ற காரணங்களை முன்வைத்து இப்போராட்டத்தைத் தடைசெய்யும்ப்டி பருத்தித்துறை பொலிசார் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் வெள்ளியன்று (04) அனுமதியளித்திருக்கிறது.
ஜனவரி 27 அன்று வட கடலில் இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலின்போது இரண்டு இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 31, 2022 அன்று, பருத்தித்துறை-பொன்னாலை வீதியில் மீனவர்களின் இப்போராட்டம் ஆரம்பித்திருந்தது. (சிலோன்ருடே)