Sri Lanka

முருங்கை இலை ஏற்றுமதியை ஊக்கப்படுத்துகிறது இலங்கை


முருங்கை விவசாயத்திற்கு அரசாங்க உதவி வழங்கப்படும் – ராஜாங்க அமைச்சர் சஷீந்திரா ராஜபக்ச

ஆகஸ்ட் 24, 2020: முருங்கை மர வளர்ப்புக்குத் தேவையான இலவச தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உபகரணங்களையும் வழங்க இலங்கை அரசின் விவசாய அமைச்சு முன்வந்துள்ளது. முருங்கை இலை ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் பெருமளவு வெளிநாட்டுச் செலாவணியைச் சம்பாதிக்க முடியுமென அது கருதுவதால் விவசாயிகளுக்கு இவிடயத்தில் உதவிகளை வழங்க அரசு முன்வந்திருக்கிறது.

தற்போது, வெள்ளவாயா மாவட்டச் செயலகப் பிரிவில் அடங்கும் திலிவேவ மற்றும் சிறிபூரகம கிராமங்களிலுள்ள விவசாயக் குடும்பங்கள் முருங்கை இலை விவசாயத்தின் மூலம் மாதமொன்றுக்கு ரூ.60,000 வரை இலாபமீட்டி வருகின்றன.

வெளிநாடுகளில் இலங்கை முருங்கைக்காய்க்கும், முருங்கை இலைகளுக்கும் நல்ல கிராக்கி இருப்பதாகவும் தற்போது அதன் விலை, கிலோ ஒன்றுக்கு ரூ.45-47 வரை போகிறதென்றும் கூறப்படுகிறது.

விவசாய அமைச்சின் தகவலின்படி, முருங்கை மரத்தை நோய்கள் தாக்குவதில்லை எனவும் அவை எத்தகைய வரண்ட வலயங்களிலும் வளரக்கூடியது எனவும் அறியமுடிகிறது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து பெரும்பாலான வெளீநாடுகளுக்கு முருங்கை மரப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நேற்று, சில முருங்கை மரத் தோட்டங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட விவசாயத்துக்கான ராஜாங்க அமைச்சர் சஷிந்திரா ராஜபக்ச இப்படியான விவசாய முயற்சிகளுக்கு அரசாங்க உதவி வழங்கப்படும் என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.