India

மும்மொழித் திட்டத்தைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது – முதலமைச்சர் எடப்பாடி உறுதி


தேசிய கல்வித் திட்டம் 2020 இன் கீழ் இந்திய மாநிலங்களில் மூன்று மொழிகளில் கல்வி போதிக்கப்படவேண்டுமென்ற மத்திய அரசின் திட்டத்தை அமுல்படுத்த தமிழ்நாடு அனுமதியாது எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட மும்மொழிக் கொள்கை ஏமாற்றம் தருவதாகவும், தற்போதுள்ள இரு மொழிக் கொள்கையையே தமிழ்நாடு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் எனவும் இக் கொள்கையை மறுபரிசீலனை செய்யும்படி பிரதமரைக் கேட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இரு மொழிக் கொள்கை தொடர்பாக கடந்த பல அரசுகளினாலும், முதலமைச்சர்களினாலும் எடுத்த காத்திரமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார். 1965 இல், அப்போதைய காங்கிரஸ் அரசு, இந்தியை உத்தியோகபூர்வ தொடர்பு மொழியாக்குவதற்கு முயற்சித்தபோது அதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, 1968 ம் ஆண்டு, தமிழ்நாட்டின் பாடசாலைகள் அனைத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே போதனைகள் இடம்பெறலாம் என்ற இருமொழித் திட்டத்தைச் சட்டமாக்கினார். அதற்குப் பின்னர் இருந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகியோரும் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை வலுவாக எதிர்த்திருந்தார்கள்.

“இப்படியான சிறந்த தலைவர்களைப் பின்பற்றும் தற்போதைய அரசு, தேசிய கல்வித் திடாம் 2020 இன் நகல் தயாரிக்கப்படும்போதும் அதைக் கடுமையாக எதிர்த்திருந்தது. அத்தோடு, தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், நாங்கள் இரு மொழிக் கொள்கையை மட்டுமே நடைமுறைப்படுத்துவோம் என 26.6.2019 இல் நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்” என பழனிச்சாமி மேலும் தெரிவித்தார். 2019 சுதந்திர திநப் பேச்சின்போதும், சட்ட சபையின் பல்வேறு விவாதங்களின் போதும் இவ்விடயம் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

“தேசிய கல்வித் திட்டம் 2020 இல் மும்மொழிக் கொள்கை பற்றிப் பேசப்பட்டிருந்தாலும், மாட்சிமை தங்கிய அம்மாவின் பெயரில் இயங்கும் இந்த அரசு தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதியாது, தொடர்ந்தும் இரு மொழிக் கொள்கையையே கடைப்பிடிக்கும்” என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.



அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்படத் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள் மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மாநில அரசுகளே மொழிவழிக் கல்வித் திட்டத்தை வகுக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் பிரதமரைக் கேட்டுள்ளார்.

தேசிய கல்வித் திட்டத்தின் கீழ், நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் அதே வேளை பல்மொழிப் பாவனையை முன்னெடுக்க, மாநில அரசின் கல்விக்கூடங்களில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படவேண்டுமெனவும், அவற்றில் இரண்டு இந்திய தேசிய மொழிகளாக இருந்தால் போதும், எந்த மொழிகள் என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

2019 இல் இத் திட்டம் முன்மொழியப்பட்டபோது இந்தி கட்டாய மொழியாகக் கற்பிக்கப்படவேண்டுமென்று கூறப்பட்டது. இதற்குத் தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது இந்த மும்மொழிக் கொள்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது.