முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (FSP) – த.தே.கூட்டமைப்பு (TNA) புதிய அரசியலமைப்பு பற்றிப் பேச்சுவார்த்தை

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படவும் உத்தேசம்

அரசாங்கத்துகு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவரும் அமைப்புக்களில் முக்கியமானதாக இருக்கும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (Frontline Socialist Party) தமிழ்த் தெசியக் கூட்டமைப்பு மற்றும் சமாகி ஜன பலவேகய ஆகிய கட்சிகளுடன் தனிதனியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டுவரும் இளைஞர்களைக் காப்பாற்றுவது மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக மு.சோ.க. பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

மு.சோ.க. கல்விக்கான செயலாளர் புபுது ஜகொட டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில், நிறைவேற்று அதிகார முறைமையின் அதிகாரங்களைக் களைவதில் தமக்கு உடன்பாடில்லை எனவும் அது முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென்பதே தமது கோரிக்கை எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூட்டமைப்பின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பா.உ. சுமந்திரன் டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில், அரசாங்கத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வன்முறையற்ற போராட்டங்களே காரணமெனவும் இப்படியே வன்முறைகளில்லாது போராட்டம் தொடரவேண்டுமெனத் தான் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்தோடு, சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தமிழ் மக்களின் அபிலாட்சைகளைத் தீர்த்துவைக்கக்கூடிய அரசியலமைப்பு மாற்றமொன்றைக் தற்காலிக அரசியல் சாசனத்தையொட்டி ஏற்படுத்தவேண்டுமென்று தாம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் பா.உ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அல்லாதபோது நாட்டில் அராஜகம் வெடிக்குமெனவும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதுடன் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்ககூடிய அரசியலமைப்பு பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமெனவும் இரு தரப்பினரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

அது மட்டுமல்லாது, ஊழலுக்கு எதிரான வலுவான சட்டங்கள் உருவாக்கப்படுவதுடன், திருடப்பட்ட நாடுக்குச் சொந்தமான பணத்தை மீளப்பெறவும், அதற்குக் காரணமானவர்கள் தணிடிக்கப்படவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென இரு தரப்புக்களும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது. மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாகவும் இருதரப்பும் கலந்துரையாடியதாகவும் தெரியவருகிறது.

ச்மாகி ஜன பலவேகயவுடனான சந்திப்பில் ரஞ்சித் மட்டும பண்டார, இரான் விக்கிரமரட்ண மற்றும் காபிர் ஹாஷிம் ஆகியோர் கலந்துகொண்டதாகத் தெரியவருகிறது.