முன்னாள் விடுதலைப் புலி கைதிகள் 8 பேர் விடுதலை
சீ.வி.விக்னேஸ்வரனின் ஆதரவிற்காக விக்கிரமசிங்க அளித்த வெகுமதி
சிறையிலிருந்த முன்னாள் போராளிகளான 8 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்புக் கொடுத்து ரணில் விக்கிரமசிங்க விடுதலை செய்துள்ளார். விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஆதரவைப் பெறும்பொருட்டு விக்னேஸ்வரனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பட்டமையின்படி இக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த 8 பேரில், கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நால்வர் அக்டோபர் 21 அன்றும் மேலும் இருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர்கள் செய்த முறையீடுகளை மீளப்பெறுவதாக அறிவித்தவுடன் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் மீதி இருவரும் அவர்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சிகள் முடிவடைந்ததும் விடுதலை செய்யப்படவுள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நால்வரை விடுதலை செய்வதற்கான பரிந்துரைகள் சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரத்தினத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அறிக்கையைப் பொறுத்து இவ்விடுதலைகள் இடம்பெறுமெனவும் தெரியவருகிறது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் தாம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து அரசுடன் பேசுவதற்குத் தயார் என விக்னேஸ்வரன் கொழும்பிலிருந்து வரும் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருந்தார். சுமார் 100 தமிழ் அரசியல் கைதிகள் வரை விசாரணைகள் ஏதுமின்றி சிறைகளில் வாடுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.