Sri Lanka

முன்னாள் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஜனாதிபதி ஆணைக்குழு ஆணையாளாராக நியமனம்


இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக யாழ். முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நியமனம் பற்றிய வர்த்தமானி அறிவிப்பு நேற்று, ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைவாழ் சமூகங்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவும், பால் சமத்துவத்தை நிலைநாட்டும் விதமாகவும், விசாரணை ஆணையங்கள் சட்டத்தின் 3 வது பிரிவின் கீழ், திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவை ஜனாதிபதி ஆணைக்குழு ஆணையாளராக, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச நியமிக்கிறார் என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்றதாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை மேற்கொள்வதற்கென, ஜனவரி 20, 2021 அன்று மனித உரிமை மீறல்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் இவ்வாணையத்தின் தலைவராகவும், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா ஃபெர்ணாண்டோ, ஓய்வுபெற்ற பிரதேச செயலர் நிமால் அபயசிறி ஆகியோர் ஆணையர்களாகவும் தற்போது உள்ளனர்.

ஆணையம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் அதன் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவேண்டுமென்பது அதற்கு இடப்பட்டுள்ள ஆணையாகும்.

ராஜபக்ச ஆட்சியாளருக்கு மிக நெருக்கமான திருமதி பற்குணராஜா, யாழ் நகரின் 26 வது மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.