முன்னாள் போராளிகளின் குடிசைகள் அழிப்பு -இலங்கை வனத் திணைக்கள அதிகாரிகள் அட்டகாசம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கைவேலி என்னுமிடத்தில் குடியமர்த்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலி போராளிகளின் குடிசைகளை பிடுங்கியெறிந்ததுடன் பெண்கள் உட்பட அங்கு வாழ்ந்த குடியானவர்களைத் தாக்கியும் வனத் திணைக்கள அதிகாரிகள் அட்டகாசம் புரிந்ததாக அறியப்படுகிறது.
2000 ஆம் ஆண்டில் சுமார் 45 விடுதலைப்புலி வீரர்களின் குடும்பங்கள் இக்குடியேற்றத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்டிருந்தனர். போர் முடிவுற்றதன் பின்னர் 2012 இல் அவர்கள் தமது இருப்பிடங்களில் மீளக்குடியமர்ந்தனர் எனவும் இதைத் தடுக்க வனத் திணைக்கள அதிகாரிகள் எல்லைக் கற்களை நட்டுவைத்தனர் எனவும் கூறப்படுகிறது. இத்தடைகளையும் மீறி 20 குடும்பங்கள் தாம் முன்னர் வாழ்ந்த இடங்களுகளில் குடியேற முயற்சித்தபோது வனத் திணைக்கள அதிகாரிகள் மண்ணெண்ணை சகிதம் அங்கு சென்று குடிசைகளைத் தீக்கிரையாக்க முயற்சித்ததுடன் அவற்றைத் தாக்கியழித்தும் தமது அடாவடித்தனங்களைக் காட்டியுள்ளனர். அதிகாரிகளைத் தடுக்க கிராமத்தவர்கள் முனைந்தபோது அவர்களை அதிகாரிகள் தாக்கியதனால் சிலர் காயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனரெனத் தெரிகிறது.
பொலிஸ் பொறுப்பதிகாரி சகிதம் சம்பவ இடத்திற்க்குச் சென்ற பிரிவுச் செயலாளர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக உறுதியளித்துள்ளார். அதே வேளை இரண்டு வனத் திணைக்கள அதிகாரிகளும் இச்சம்பவம் தொடர்பாகத் தம் கடமைகளைச் செய்யவிடாது தடுத்தனர் எனப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறையீடுகளைச் செய்துள்ளனர். (Source: Tamil Guardian)

