முன்னாள் அமைச்சர் ராஜித கைது!
டிசம்பர் 27, 2019
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு டிசம்பர் 30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அட்டோர்ணி ஜெனெரலின் உத்தரவின் பெயரில் கைது செய்யப்பட்ட இரண்டாவது மூத்த (முன்னாள்) அமைச்சர் இவராவார். சிகிச்சைக்காக நாரஹேன்பிட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
2016 இல் நடைபெற்ற போக்குவரத்து விபத்து சம்பந்தமாக இன்னுமொரு மூத்த முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு புத்த பிக்குகளின் தலையீடு காரணமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சேனாரத்தின மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது, தேர்தலுக்கு முன்னர் இரண்டு வெள்ளைவான் சாரதிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்சவே வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இருந்தார் எனக் கொடுக்கப்பட்ட வாக்குமூலம் தொடர்பானது. ஏனையவை, தேர்தல் சம்பந்தமான சட்ட மீறல்கள் தொடர்பானவை.
கடந்த சில நாட்களாகக் கொழும்பில் இது போன்ற பல பாசிச நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
‘வெள்ளை வான் ஊடக மாநாடு’ தொடர்பாக அமைச்சர் ராஜிதவைக் கைது செய்யும்படி, டிசம்பர் 24 அன்று அட்டோர்ணி ஜெனெரல் டப்புல டி லிவேரா குற்றவிசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்குக் கட்டளை அனுப்பியிருந்தார்.
பாட்டாளி சம்பிக்க, ராஜித சேனாரத்ன விடயங்களில் அவர்களைக் கைதுசெய்யும் உத்தரவை அட்டோர்ணி ஜெனெரல் நேரடியாக காவற்துறைக்கு அனுப்பியிருப்பது வழக்கமான நடைமுறையல்ல. பொதுவாக விசாரணைகளை மேற்கொண்டு ,தேவையேற்படின் கைதுக்கான பிடியாணையை விநியோகிக்குமாறு, காவற்துறை அட்டோர்ணி ஜெனெரலைக் கேட்டுக்கொள்வதே நடைமுறை.
இதைத் தொடர்ந்து, கொழும்பு மேலதிக நீதிபதி பண்டார நெளுந்தெனிய ராஜிதவின் கைதுக்கான பிடியாணையை அறிவித்திருந்தார். அது சட்ட விரோதமானதெனக் கூறி சேனாரத்னவின் சட்டத்தரணிகள் உடனடியாக அதை மீளப்பெறக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும், என்ன காரணங்களுக்காகவோ அவர்கள் தமது விண்ணப்பத்தை மீளப்பெற்று விட்டனர்.
முன்னாள் அமைச்சர் காணாமற் போயிருந்த போது விசேட துணைப் படையினர் குற்ற விசாரணைப் பிரிவிடன் சேர்ந்து அவரது இல்லம், அலுவலகம் ஆகியவற்றில் தேடுதல் நடத்தியிருந்தனர்.
இதைக் காரணம் காட்டி, “ராஜித பிரதமரின் வீட்டில் மறைந்திருக்கலாம், அங்கு தேடிப்பார்க்கலாம்’ என ஜே.வி.பி. தலைவர் அனுர குமார ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
சேனாரத்ன, நாரஹென் பிட்டி லங்கா மருத்துவமனையில், தீவிர இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் அங்கு சென்ற மேலதிக நீதிபதி ஷலானி பெரேராவின் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இச் சம்பவங்களினால் சேனாரத்னவின் இரத்த அமுக்கம் அதிகரித்திருப்பதாகவும், அவர் ஓய்வு எடுக்கவேண்டுமென அவரது வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரியிருக்கிறார்கள்.