Spread the love

மே 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போர் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல.

முந்திய அரசு, ஓய்வு பெற்றவர்களுட்பட, இலங்கை இராணுவத்தினரை மிகவும் கொடூரமான முறையில், சர்வதேச ரீதியில் துரோகமிழைத்திருந்தது மறந்துவிட முடியாதது என விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை நினைவுகூரும் 11 வது ஆண்டு நிகழ்வில் பேசும்போது மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“முந்திய நல்லாட்சி அரசின்கீழ் அவமானத்துக்கும் இடருக்குமுள்ளான அனைவருக்கும் நீதி கிடைக்க வழி செய்வோமென உறுதி கூறுகிறோம்” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“வெல்ல முடியாத போர் எனப்பட்ட ஒன்றை வென்றதன் மூலம் நமது இராணுவத்தினரும், பொலிசாரும் சர்வ உலகத்தையுமே ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருந்தார்கள். தற்போது அவர்கள் சுகாதாரத் திணைக்களத்துடன் சேர்ந்து கோவிட்-19 இற்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

“கோவிட்-19 இற்கு எதிரான போரையும் வெல்வதற்கான சாத்தியங்களே தெரிகிறது. ஆயுதப்படைகளினாலும், பொலிசாரினாலும் பொதுமக்களோடு இணைந்து மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னணி நடவடிக்கைகள் கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் சுகாதார சேவைப்பணியாளர்களுக்கு மிகவும் உதவியாகவிருக்கிறது.


“இயற்கை அனர்த்தங்களான வெள்ளமோ, கொள்ளை நோயோ அல்லது மனிதரால் ஏவப்பட்ட பயங்கரவாதமோ, இவை எல்லாவற்றிலுமிருந்து பொது மக்களைக் காப்பாற்றும் ஆயுதப்படைகளும் பொலிசாரும் இத் தேசத்தின் காவலர்கள் என்பதை இது எங்களுக்கு நினைவூட்டுகிறது.

“இப் பின்னணியில், நல்லாட்சி அரசின் அங்கம்வகித்த அரசியல் கட்சிகள், இராணுவத்துக்கும் மக்களுக்குமிடையே பிளவை உண்டாக்க முயற்சிப்பதையிட்டு நான் எனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரி அரசாங்கத்தில் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டால் அது ‘ இராணுவமயமாக்கல்’ எனக் கூறுகிறார்கள். இராணுவத்திலிருந்து ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டால் அவர் ஒரு பொதுமகன்.

“எனவே, நாம் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அதில் ஒய்வு பெற்ற இராணுவத்தினரோ அல்லது பொலிசாரோ இருப்பர். மக்களின் ஜனநாயக உரிமையை அழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை முறியடிப்பதில் எப்போதும் ஆயுதப்படைகளினதும், பொலிசாரினதும் பங்குண்டு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்” என மஹிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | இழப்புக்களை மறைக்கும் இலங்கை அரசு