முத்தையா முரளீதரன் உட்படப் பல பிரபலங்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்

டிசம்பர் 7, 2019

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய பலர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். பிரபல சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் உட்படப் பலர் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடவுள்ளனர் என அறியப்படுகிறது.

முத்தையா முரளீதரனுக்கு வடமாகாண ஆளுனர் பதவி வழங்கப்பட்டதெனினும் அவர் அதை ஏற்க மறுத்திருந்தததைத் தொடர்ந்து தற்போது அவருக்கு நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிட இடம் வழங்கப்பட்டிருக்கிறதெனத் தெரிய வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் வட்க்கு கிழக்கைத் தவிர நுவரேலியா மாவட்டம் ஒன்றே ஐ.தே.கட்சிக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்திருந்தது. பழனி திகாம்பரம், சிறீ ரங்கா, பெருமாள் ராஜதுரை, ராதாகிருஷ்ணன், தொண்டமான், நவீன் திசநாயக்கா, சீ.பீ.ரத்னாயக்கா ஆகியோர் தற்போது நுவரேலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

அதே வேளை, முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரும், ஆல் ரவுண்டருமான டி.எம்.டில்ஷான் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளாரெனவும் தெரிய வருகிறது.

இவர்களோடு, பல ஓய்வு பெற்ற இராணுவத்தினரும், கலை, திரையுலகப் பிரமுகர்களும் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடவுள்ளார்கள் எனவும் அறியப்படுகிறது.