முதுமை மறதி (Dementia) | தவிர்க்கப்பட அல்லது தாமதப்படுத்தக்கூடிய நோய்

முதுமை மறதி (Dementia) | தவிர்க்கப்பட அல்லது தாமதப்படுத்தக்கூடிய நோய்

Spread the love

Dr. Kanaga Sena, MD

Neuroligist, Yale School of Medicine, Bridgeport, CT. USA

Dr. Kanaga Sena MD
Dr. Kanaga Sena MD

முதுமை மறதி எமது சமூகங்களிடையே விரைந்து பரவி வரும் ஒரு வியாதி. பெரும்பாலும், நடு வயதிலிருந்து ஆரம்பிக்கும் இவ் வியாதி ஒருவரது வாழ்வியல் சார்ந்தது எனவும், நாம் மேற்கொள்ளும் பல்விதமான நடவடிக்கைகள் மூலம் இது தவிர்க்கப்பட அல்லது தாமதப்படுத்தக்கூடி ஒன்று என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முதுமை மறதிக்கான சில காரணிகளைக் கட்டுப்படுத்தினாலோ அல்லது முற்றாக இல்லாதொழித்தாலோ, 40% மானோரில் இவ் வியாதியைத் தாமதப்படுத்தவோ அல்லது முற்றாகத் தவிர்க்கவோ முடியுமெனெ, சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதுமை மறதி தவிர்ப்பு சம்பந்தமாக லான்செட் சஞ்சிகை செய்த ஆய்வின் விளைவாக 2017 இல் வெளியிட்ட அறிக்கையில், முதுமை மறதிக்குக் காரணமான ஆனால் தவிர்க்கப்படக்கூடிய காரணிகளாக 9 விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அவை:

  1. அற்ப கல்வி அல்லது கல்வி கற்காமை (little or no education)
  2. உயரழுத்தம் (hypertension)
  3. கவனிக்கப்படாத செவிப்புலன் பிரச்சினை (untreated hearing impairment)
  4. புகைத்தல் (smoking)
  5. உடற் பருமன் (obesity)
  6. மனஅழுத்தம் (depression)
  7. உடற்பயிற்சியின்மை (physical inactivity)
  8. நீரிழிவு (diabetes)
  9. குறைந்த சமூக ஊடாடல் (low social interaction)

இந்த அறிக்கை வெளியிட்டதன் பின்னர், மேலும் மூன்று தவிர்க்கப்படக்கூடிய காரணிகளை லான்செட் குழு கண்டறிந்தது. அவை:

  1. தலையில் காயம் ஏற்படுதல் (head injuries)
  2. நடுவயதில் அதிக மதுப் பாவனை (excessive alcohol consumption in midlife)
  3. முதுவயதில் மாசடைந்த வளியைச் சுவாசித்தல் (air pollution exposure in later life)


தவிர்க்கும் அல்லது தாமதப்படுத்தும் வழிகள்

மேற்குறிப்பிட்ட ஆய்வைத் தொடர்ந்து, லான்செட் குழு, முதுமை மறதியைத் தவிர்க்கவோ அல்லது தாமதப்படுத்தவோ செய்யவேண்டிய சில காரியங்களைப் பரிந்துரைத்திருக்கிறது.

  1. சகல குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வியை வழங்கவேண்டும்
  2. உடற்பருமன் மற்றும் நீரிழிவைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
  3. வளி மாசடைதலைத் தவிர்க்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்
  4. புகைக்க ஆரம்பிப்பதைத் தடுத்தல், புகைப்பதை நிறுத்துதல், இரண்டாம்தர புகைப் பாதிப்பைத் தவிர்க்க வழிசெய்தல் ஆகிய செயற்பாடுகளை எடுக்கவேண்டும்
  5. செவிப்புலக் குறைபாடுடையவர்களை செவிப்புலச் சாதனப் பாவனைக்கு ஊக்கப்படுத்த வேண்டும்
  6. தலையில் காயமேற்படுதலைத் தவிர்க்கவும், அப்படி ஏற்படின் உடனடி சிகிச்சைக்கான வழிகளைப் பேணவும் வழிகள் மேற்கொள்ளப்படவேண்டும்
  7. நடுவயதில், இரத்த அழுத்தம் 130mm Hg இற்கு உள்ளே இருக்கக்கூடியதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்
  8. வாரமொன்றுக்கு 21 அளவுகள் மதுவுக்கு மேல் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
  9. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய வாழ்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்

வருமானம் குறைந்த சமுதாயங்களிலும், கறுப்பின, ஆசிய மக்கள் குழுமங்களிலும் இக் காரணிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்த வல்லன என்பதால் இச் சமூகங்களிடையே தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என இக்குழுவின் தலைவரும் , லண்ட யூனிவேர்சிட்டிக் கல்லூரியில், முதியவர்களுக்கான மனோதத்துவப் பேராசிரியராகப் பணிபுரிபவருமான, கில் லிவிங்ஸ்டன் பரிந்துரைக்கிறார்.

“பெரும்பான்மைச் சமூகங்களுக்கும் இச் சமூகங்களுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்படும்போதே இச் சமூகங்கள் தம் வாழ்வை மேம்படுத்தக்கூடிய சூழல் உருவாகும்” என அவர் தெரிவிக்கிறார்.

Print Friendly, PDF & Email