HealthScience & Technology

முதுமையைத் தவிர்ப்பதர்க்கும் ‘தடுப்பு மருந்து’

எலிகளில் இப்பரிசோதனை வெற்றிபெற்றிருக்கிறது!

மனித உடலில் வயது முதிர்வுக்குக் காரணமான கலங்களை அவற்றின் செயற்திறனைத் தக்கவைப்பதன் மூலம் ஆயுளை அதிகரிக்கமுடியுமா என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். எலிகளில் இப் பரிசோதனை வெற்றிபெற்றிருப்பதால் மனிதரில் மரணமில்லா வாழ்வு ஓரளவு சாத்தியமாகுமென்கிறார்கள் இவ் விஞ்ஞானிகள்.

யப்பானைச் சேர்ந்த இவ்விஞ்ஞானிகள் எலிகளில் செய்த பரிசோதனையில், உடலில் வயது முதிர்வுக்குக் காரணமான கலங்களை இனம் கண்டு அவற்றுக்கு தடுப்பு மருந்தை ஏற்றுவதன் மூலம் முதிர்வைத் தாமதிக்க முடியுமென நிரூபித்திருக்கிறார்கள்.செனிசெண்ட் (senescent cells) எனப்படும் கலங்கள் குறிப்பிட்ட வயதை எய்தியதும் தம் கலப் பெருக்கத்தை நிறுத்திவிடுவதே வயது முதிர்வுக்குக் காரணம். இதற்குக் காரணமான கலப் புரதத்தை தடுப்பு மருந்தைப் பாவித்து உசார் நிலையில் வைத்திருப்பதன் மூலம் புதிய கலங்களை உருவாக்கமுடியுமென அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

சகல உயிரினங்களிலும் ஒவ்வொரு உடலுறுப்புக்களும் அதன் சிற்றுறுப்புக்களான இழையங்களும் கலங்களினால் உருவாக்கப்பட்டவை. இக் கலங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வாழக்கூடியவை. அவை இறக்கும்போது அவற்றை மாற்றீடு செய்யவென, அதே ரகமான கலங்கள் உற்பத்தியாகின்றன. கலப்பிரிவு எனப்படும் முறையில் இப்புதிய கலங்கள் உற்பத்தியாகின்றன. ஆனால் வயது முதிரும்போது ஒருவரின் உடலிலுள்ள கலங்களின் பிரிவடையும் செயற்திறனும் படிபடியாகக் குறைந்துகொண்டே போகிறது. அது மட்டுமல்லாது வீரியம் குறைந்த கலங்கள் தொடர்ந்து பிரியும்போது பிறழ்வுகள் ஏற்பட்டு அதனால் புற்றுநோய் போன்ற வியாதிகளும் உருவாகின்றன.

ரோக்கியோவிலுள்ள ஜுன்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவ் விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியின்படி முதிர்ச்சியடைந்த எலிகளில் கலங்கள் காணப்பட்ட வீரியம் குறைந்த கலங்களுக்கு இம் மருந்தைக் கொடுக்கும்போது அவை புத்துணர்ச்சி பெற்றதை அவர்களால் அவதானிக்க முடிந்தது.

அதுமட்டுமல்லாது கொழுப்பு படிவுகள், இரத்தக்குழாய்களின் சுவர்கள் ஆகியவற்றிலுள்ள செனிசெண்ட் கலங்களில் இத் தடுப்பு மருந்தை ஏற்றும் போது அவை இலகுவாக்கப்படுவதால் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளைக் குறைக்கவும் இம் மருந்து பயன்படுமென தாங்கள் எதிர்பார்ப்பதாக ஜுன்ரெண்டோ பேராசிரியர் ரோறு மினமினோ தெரிவித்துள்ளார்.கலங்கள் முதுமையடைதல்

கலங்கள் தாமாகவே பிரிவடைவதை நிறுத்திக்கொள்ளும்போது அவை முதுமையடைந்துவிட்டன (senescent) எனக் கூறுவார்கள். இதற்குக் காரணம் ஒவ்வொரு கலமும் இரண்டு, நான்கு எட்டு எனத் தொடர்ந்து பிரிவடையும்போது அதனுள் இருக்கும் மரபணுக்களும் (DNA) முதற் கலத்தில் இருந்தவாறே பிர்ந்துபோன கலத்திலும் இருக்கவேண்டுமென்பது நியதி. ஆனால் வயது முதிரும்போது இம் மரபணுக்களில் ஏற்படும் பலவீனம் காரணமாக தாய்க் கலத்தில் இருந்தவாறு இல்லாமல் சில மாற்றங்களோடு சேய்க்கலத்தில் தங்கிவிடுகின்றன. இவற்றையே திரிபுகள் என்கிறார்கள். இப்படியே தொடர்ந்து பலவீனப்பட்டுப்போய் இறுதியில் கலப்பிரிவே முற்றாக நிறுத்தப்பட்டு விடுகிறது. இத் திரிபுகளால், புற்றுநோய், மறதி வியாதிகள், உறுப்புகள், தசைகள் பலவீனமடைதல் ஆகியவற்றுக்கு நாம் உள்ளாகிறோம்.

‘முதுமைக் கலங்கள்’ சுரக்கும் சில சுரப்புக்களால் கலங்களினதும் இழையங்களினதும் தொழிற்பாடுகள் சில தடைப்படுகின்றன இக் கலங்களின் அழைப்பை ஏற்று உடலின் ‘நோயெதிர்ப்பு சக்தி’ மிகையாக ஊக்குவிக்கப்பட்டு அதன் மூலம் உடலில் அழற்சி (inflammation) ஏற்படக் காரணமாகிறது. இதனால் உடலின் பல உறுப்புக்களும் பாதிப்புக்குள்ளாகின்றன என்கிறார் லெய்ஸெஸ்டெர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சல்வடோர் மக்கிப்.

முதுமைக் கலங்களில் பேராசிரியர் மக்கிப், இதர விஞ்ஞானிகளுடன் செய்த ஆராய்ச்சியின்படி ஆய்வுகூட எலிகளின் ஆயுளை 15 வீதம் முதல் 35 வீதம் வரை அதிகரிக்க முடிந்தது எனத் தெரிவித்துள்ளார். ஆனாலும் முதுமைக்கு, இக் கலங்களை விட வேறு பல காரணங்களும் இருக்கலாம். இருப்பினும் இவ்வாராய்ச்சி நிச்சயமாக ஆயுளை நீடிக்க்கும் மருந்துகளைத் தயாரிக்க உதவும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.