முதுகெலும்புள்ள ஒருவரையே ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளாராக நியமிக்கும் – ரணில்

Spread the love
நான் கோதாவை ஒருபோதும் நம்பமாட்டேன் – ரணில் விக்கிரமசிங்க
‘எவருமே பயமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவேன்’ என்று சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்ச கூறியிருப்பது தொடர்பாக கருத்துக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க “முன்னாள் ஆட்சியாளர் காலத்தில் நடைபெற்ற ‘சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எகனிலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, ஹவ்லொக் றக்பி கப்டன் வாசிம் தஜுடீன் கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் உபாலி தென்னக்கூன் கீத் நொயாஹர் போன்றவர்கள் தாக்கப்பட்டமை போன்ற பல சம்பவங்கள் தொடர்பாக கோதா மன்னிப்புக் கேட்பாரா?” என்று கேள்வியெழுப்பினார்.
மக்கள் பயமின்றி வாழக்கூடிய நாடொன்றை சி.ல.பொ.பெ. கட்சி அரசாங்கத்தினால் உருவாக்கவே முடியும் என்பதைத் தான் ஒரு போதும் நம்பமாட்டேன் எனப் பிரதமர் விக்கிரமசிங்க கூறினார்.
“நாங்கள் தினமும் ஊடகங்களால் விமர்சிக்கப்படுகிறோம். அந்த நாட்களில் ஆட்சியாளரை விமர்விமர்சிப்பவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டுவிடுவார்கள். இன்று நாங்கள் அப்படியான விடயங்களைக் கேள்விப்படுவதில்லை. தற்போதய அரசாங்கம் தரும் சுதந்திரத்தை மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.” என அவர் தெரிவித்தார்.
நடுத்தர சம்பாத்தியம் உள்ளவர்களின் தேவைகளுக்காக ‘கிறீன் வலி’ தொடர்மாடிக் குடியிருப்புக் கட்டிடத் தொகுதியொன்று கடுவெலவிலுள்ள றாணலவில என்னுமிடத்தில் நேற்று பிரதமரால் திறந்துவைக்கப்பட்டபோது பேசும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அப்போது, “வீடமைப்பு மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் சஜித் பிரேமதாச நாடு முழுவதிலும் நடுத்தர வருமானமுள்ளவர்களுக்காக குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்து வருகின்றார். அவரது தந்தையைப் போலவே அவரும் 24 மணி நேரமும் உழைப்பவர்” என சஜித் பிரேமதாசவைப் புகழ்ந்து பேசினார்.
அதே வேளை “ஜனாதிபதி வேட்பாளராக ஒரு முதுகெலும்புள்ளவரையே நியமிக்க வேண்டுமெனக் கூக்குரலிடுபவர்களுக்குச் சொல்வது என்னவென்றால் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள தலைவர்கள் அனைவருமே முதுகெலும்பு உள்ளவர்கள் தான். ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்தும் வேட்பாளர் அப்படியான ஒருவராகவே இருப்பார்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Print Friendly, PDF & Email
>/center>