LIFE

முதியோரின் நிலை தடுமாற்றமும் வீழ்கையும்: சில வழிகாட்டல் குறிப்புகள்

கனடிய தமிழர்களின் பெருமதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் பிறையான் மல்றோனி சில மாதங்களுக்கு முன்னர் மரணமானார். மரணிக்கும்போது இவருக்கு பல்வகைப்பட்ட ‘முதியோர்’ நோய்கள் இருந்தனவெனினும் அவரது இறப்பின் காரணம் தடுமாறி வீழ்ந்தது எனக் கூறப்பட்டது. இது பற்றி அமெரிக்காவிலுள்ள அனைத்துலக மருத்துவ நல அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கனக சேனா மற்றும் டாக்டர் ரகு சின்னராஜா அவர்களிடம் பேசியதன் பலனாய் அவர்களின் ஆலோசனைகளுடன் எழுந்ததே இக்கட்டுரை. தமிழ் மக்களிடையே, குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையேயும் பல முதியோர்களின் மரணங்களுக்கு வீழ்கை காரணமாக இருந்திருக்கிறது. இதைத் தவிர்ப்பதற்கு அல்லது முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு என்ன செய்யலாம் என்ற எனது கேள்விகளுக்கு இம்மருத்துவர்கள் தந்த பதில்களைக் கொண்டு வரையப்படுகிறது இக்கட்டுரை.

கனடாவில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி 2007 முதல் 2019 வரை 65 வயதுக்கு மேற்பட்ட வயதினர் நிலை தடுமாறி வீழ்வது 111% த்தால் அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது 47% த்தால் அதிகரித்திருக்கிறது. இதன் வருடாந்த செலவான் $5.6 பில்லியன்கள் வரியிறுப்பாளரின் தலைகளில் தான் சுமத்தப்படுகிறது.

வீழ்வதற்கு காரணமென அறியப்பட்டவைகளாக நிலை தடுமாற்றம், விழப்போகிறோமென ஏற்படும் முற்பயம், முதுமை மறதி ஆகியவற்றைக் கூறலாம். இவற்றை விட குறைவான இரத்த அழுத்தம் (BP), குறைவான இரத்த சர்க்கரை (ஹைப்போ கிளைசீமியா) போன்ற காரணங்களினாலும் வீழ்கை ஏற்படுமெனினும் இவை எந்த வயதினருக்கும் நிகழலாம்.

வீழ்கைக்கான பல அறிகுறிகள் எங்கள் முதியோர்களில் பலருக்கு இருந்தாலும் அதை இயல்பாக ‘வயது போனா இதெல்லாம் வரும் தானே’ என்று கூறிக்கொண்டு இவ்வறிகுறிகளை உதாசீனம் செய்துவிடுவதுண்டு. ஆனாலும் பல முதியோரில், குறிப்பாகக் கீழைத்தேசக் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள், ‘பிள்ளைகளுக்கு கரைச்சல் கொடுக்கக்கூடாது’ என்பதற்காக இவ்வறிகுறிகளை மறைத்துவிடுவதுமுண்டு. ஆனால் இது வீழ்கைக்குக் காரணமாகி முடிவு மருத்துவமனைக்கோ அல்லது மரண மனைக்கோ கொண்டு செல்லுமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படப் போபவர்களும் அடுத்தவர்கள் தான்.

முதியவர்களில் நிலை தடுமாற்றம் மற்றும் வீழ்கைக்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைப் பரீட்சிக்க அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாட்டு மையம் (Centre for Decease Control (CDC)) மருத்துவர்களுக்காக ஒரு STEADI என்றொரு கைநூலை உருவாக்கியிருக்கிறது. உதாரணத்திற்கு ஒருவர் 30 செக்கண்டுகளில் கதிரையிலிருந்து எழுந்து உறுதியாக நிற்பது மற்றும் அவரது சமநிலையைப் பரிசோதிக்க நான்கு நிலைப் பரிசோதனை மூலம் அவருக்கு அடுத்த கட்டப் பரிசோதனைகள் என்ன என்பதை அம்மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். இவற்றில் நோயாளியின் வாழும் சூழல் மற்றும் பாதுகாப்பு (அதிகமான, ஆபத்தான படிகள்; வெளிச்சக் குறைவு, சீரற்ற குளியலறைகள் போன்றன), நீரழிவு, சிறூநீரில் மணம் (mellitus), உயரழுத்தம், எலும்புப்புரை ( osteoporosis), வலி, சிறுநீர் கழிக்க அவசரம் மற்றும் மன அழுத்தம் போன்ற நீண்ட கால வியாதிகள். அதே வேளை நிலை தடுமாற்றத்திற்குக் காரணமாக அமையக்கூடிய மருந்துகளைப் பரிந்துரைப்பதைத் தவிர்ப்பதோடு பார்வை, செவிப்புலன் தேவைகள், நடையுபகரணங்கள் ஆகியவற்றையும் தேவையானால் பரிந்துரைக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணத்தின்படி வீழ்கை என்பது ஒருவர் தன்விருப்பமன்றி கீழே, தரையிலோ அல்லது படியிலோ, வீழ்வது என அழைக்கப்படுகிறது. அமெரிக்க புள்ளிவிபரப்படி 65 வயதுக்கு மேற்பட்டோரில் 27% மானோர் வீழ்வதும் இவர்களில் 10% மானோர் காயங்களுக்குள்ளாகுவதும் வழக்கம். இக்காயங்கள் தலையிலோ, இடுப்பிலோ, முள்ளந்தண்டிலோ விலா எலும்புகளிலோ அல்லது கை கால்களிலோ ஏற்பட வாய்ப்புண்டு. இடுப்பு / நாரி முறிவுகளின் காரணமாக 20%-30% மானவர்கள் மரணமடைய நேரிடுகிறது.

படுக்கையால் எழும்போது தலை சுற்று

பல முதியோருக்கு இவ்வனுபவம் இடைக்கிடை வந்துபோகும். இதையும் ஒரு ‘வயதுடன் வரும் நோய்கள்’ எனக்கூறிக் கடந்துபோகக் கூடாது. இது வயதுடன் வரும் ஒரு ‘வியாதி’ தான். ஆனால் தவிர்க்கப்படக் கூடியது. வயது முதிர்ந்தவர்கள் படுக்கையால் திடீரென்று எழுகின்றபோது அவர்களது இரத்த அழுத்தம் திடீரெனக் குறைகிறது. இதனால் மூளைக்குத் தேவையான அளவு ஒக்சிசன் கிடைப்பதில்லை ஆதலால் தலைச்சுற்று ஏற்படுகிறது. இருதய வியாதிகளுக்காய் மருந்துகளை எடுப்பவர்கள் சிலருக்கு இருதயத்திந் துடிப்பைக் குறைவாக வைத்திருக்க மருத்துவர் சில மருந்துகளைப் பரிந்துரைத்திருப்பார். இதன் விளைவாக உறங்கும்போது துடிப்பு குறைவாகவே இருக்கும். எனவே காலை எழுவதற்கு முதல் கால்களைக், கைகளை ஆட்டி ஒரு சிறு ‘மினி’ அப்பியாசத்தைச் செய்து இருதயத்தின் வேகத்தை கொஞ்சம் அதிகரிக்கச் செய்தபின் எழுவது நல்லது. அத்தோடு படுக்கையில் எழுவதையும் மிகவும் ஆறுதலாகச் செய்து, கட்டிலில் ந்மிர்ந்து அமர்ந்து அதன் பிறகு எழுந்து நடத்தல் மூலம் இப்படியான தலைச்சுற்றுக்களைத் தவிர்க்க முடியும்.

சுடு நீரில் குளிக்கும்போது தடுமாற்றம்

சில முதியவர்கள் சுடுநீரில் (shower) குளிக்கும்போது நிலை தடுமாறுவதோடு வீழவும் நேரிடுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று சுடுநீர் செவிப்பறைகளிலிருக்கும் சமநிலை பேணும் நரம்புகளைத் தற்காலிகமாக நிலைகுலையச் செய்வதனாலாக இருக்கலாம். அல்லது சுடுநீர் இரத்தக் குழாய்களை விரிவடையச் (dilate) செய்வதால் இரத்தோட்டம் இலகுவாகி அதனால் இரத்த அழுத்தக் குறைபாடு ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

மருத்துவ சமூகத்தால் அவதானிக்கப்பட்ட அறிகுறிகள்

 • தசைப் பலவீனம்
 • கட் பார்வை குறைவடைதல்
 • செவிப்புலன் தளர்வு
 • நடக்கும்போது சமநிலை பேண முடியாமை
 • நாரி, முழங்கால், கணுக்கால் அல்லது பாதத்தில் வலி
 • நடக்கும்போதும், இருக்கும்போதும், எழுகின்றபோதும் மற்றவர்களை ஆதாரமாகப் பிடிக்க முயல்தல்
 • உயர் அழுத்தம், நீரழிவு, முடக்குவாதம் அல்லது பார்க்கின்சன்ஸ் போன்ற நீண்டகால வியாதிகள்
 • புலனாட்சிக் குறைபாடு (cognitive impairment)
 • மருந்துகளின் பக்க விளைவுகள்
 • மது மற்றும் போதைப்பொருட் பாவனை

பல நோயாளிகள் வீழ்ந்ததன் பின்னர் மருத்துவரோடு மேற்கொள்ளும் உரையாடலின்போது தமக்கு எங்கே வலிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கூறமுடியாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களுடைய புலனாட்சித் திறன்கள் ( cognitive skills) ஏற்கெனவே மங்கும் நிலையில் இருப்பதனாலாகவிருக்கலாம். அமெரிக்க புள்ளிவிபரங்களின்படி தலையில் அடிபட்டவர்களது வாக்குமூலங்களில் 38% தகவல்கள் பொய்யாக இருப்பதும் ( false negative) இடுப்பு, நாரிகளில் அடிபட்டவர்களின் வாக்குமூலங்கள் 80% வரை பொய்யாக இருப்பதும் பதியப்பட்ட தகவல்கள். இப்படியான தருணங்களில் முழு உடலும் ஸ்கான் செய்யப்படவேண்டுமென்பது (Whole-body CT) அவசியம்.

ஒரு முதியவரின் வீழ்கையின் பின் அவர் எவ்வளவு நேரம் தரையில் கிடந்திருக்கிறார் என்பதும் சிகிச்சைக்கான வழிமுறைகளைத் தீர்மானிக்கிறது. ஒருவரது இயங்கா நிலைக்கு தசைக் காயம் (rhabdomyolysis), வரட்சி / தாகம் (dehydration), இரத்த அழுத்தக் குறைபாடு (low blood pressure) ஆகியனவும் காரணிகளாக இருக்கலாம். நீண்ட நேரம் தேகாப்பியாசம் செய்தல் சிலரின் தசைகளைக் காயப்படுத்துகிறது. அதே போல நீர் வரட்சி காரணமாக இரத்த அழுத்தம் குறைவது வழமை. குறிப்பாக முதியோர் பலர் தமக்கு தாகம் எடுப்பதில்லை எனக்கூறியோ அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பதற்காகவோ நீர் அருந்துவதைத் தவிர்க்கிறார்கள். இது முற்றிலும் தவறு. எக்காரணத்திற்கேனும் நீர் அருந்துவதை முதியோர் தவிர்த்தால் அழுத்தக் குறைபாடு காரணமாக பல துர்விளைவுகள் ஏற்படலாம். நடையுபகரணங்களைப் (assistive devices) பாவிப்பவர்கள் அவற்றை இலகுவாகப் பாவிக்கப் பயிற்றப்பட்டிருக்க வேண்டும்.

மேற்காணும் அறிகுறிகளில் ஏதாவது ஒன்று அல்லது மேற்பட்டவை இருக்கலாமெனச் சந்தேகித்தால் வீழ்கையைத் தவிர்க்க பின்வரும் உத்திகளைக் கையாளலாம்:

 • எழும்புவதற்கு முன்னர் மேல் உடலையும் பாதங்களையும் அசைத்து தடுமாற்றம் அல்லது வலி ஏதாவது தென்படுகிறாதா என்று பாருங்கள்
 • எழும்புவதற்கு முன்னர் பக்கத்தில் ஏதாவது கைபிடிக்க சுவரோ அல்லது கைபிடிகளோ அல்லது கைத்தடியோ அல்லது இதர மனிதர்களோ இருக்கிறார்களா என்பதை அவதானித்து வைத்துக்கொள்ளுங்கள்
 • எழும்பியதும் உடனடியாக நகராது ஓரிரு அடிகளைப் பரீட்சார்த்தமாக வைத்துப் பாருங்கள்.
 • குளியலறைகளில் போதுமான கைப்பிடிகளை நிறுவுங்கள்.
 • நடக்கப் போவதானால் இன்னுமொருவரைத் துணையாக அழைத்துச் செல்லுங்கள்
 • இரத்தப் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனை ஆகியவற்றை வீடுகளில் சுயமாகச் செய்யப்பழகிக் கொள்ளுங்கள்

பொறுப்புத் துறப்பு: இது ஒரு வழிகாட்டுதலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. நோயறிகுறிகள் இருப்பின் உங்கள் குடும்ப வைத்தியர்களிடம் ஆலோசித்து முடிவுகளை எடுங்கள்.

Photo by micheile henderson on Unsplash