முதலாவது அப்பிள் கணனியின் விலை $400,000 – ஏலத்தில் விற்கப்பட்டது


தொழில்நுட்பம்

அப்பிள் நிறுவனத்தின் ஆரம்ப நிறுவனர்களான ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஸ்டீவ் வொஸ்னியாக் ஆகியவர்களால் 1976 இல் உருவாக்கப்பட்ட முதலாவது அப்பிள் கணனி சமீபத்தில் அமெரிக்காவில், $400,000 டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

தற்போதும் செயற்படக்கூடிய நிலையிலுள்ள, ‘அப்பிள்-1’ எனப் பெயரிடப்பட்ட இக் கணனி மிக அருமையாகக் கிடைக்கும் ஹவாய் கோவா மரத்தினால் தயாரிக்கப்பட்ட வெளியுறையைக் கொண்டது. 200 கணனிகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த ரகம், உதிரிப் பாகங்களாக, இணைப்பு கட்டளைகளுடன் விற்கப்பட்டன.

முதல் அப்பிள் கணனி – அப்பிள்-1

ஏலத்தில் விற்கப்பட்ட இக் குறிப்பிட்ட கணனி, கலிபோர்ணியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரால் அவரது மாணவர் ஒருவருக்கு $650 டாலர்களுக்கு விற்கப்படிருந்தது. அந்த வகையில் அதற்கு இதுவரை இரண்டு பேர்களே சொந்தக்காரர்கள் என ஏல நிறுவனமான ஜோன் மொறான் தெரிவித்துள்ளது. இக் கணனியுடன் கைநூல்கள், இரண்டு கசெட்டுகளில் அப்பிள் மென்பொருள் ஆகியன கொடுக்கப்படுகின்றன.

ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வொஸ்னியாக், றொனால்ட் வெயின் ஆகியோர், ஏப்ரல் 1, 1976 இல் கலிபோர்ணியாவிலுள்ள கராஜ் ஒன்றில் அப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார்கள். இதன் ஆரம்ப செலவுக்காக ஜொப்ஸ் தனது ஃபோக்ஸ் வாகன் மைக்றோபஸ்ஸையும், வொஸ்னியாக் தனது HP-65 கல்குலேட்டரை $500 டால்ர்களுக்கும் விற்றிருந்தார்கள்.

1976 இல் அப்பிள்-1 கணனி $666.66 இற்கு விற்கப்பட்டது. ஒரே தொடர் இலக்கத்தை வொஸ்னியாக் விரும்புபவராகையால் விலை இப்படித் தீர்மானிக்கப்பட்டது எனபப்டுகிறது. தொழிற்படும் நிலையில் இன்னும் 20 அப்பிள்-1 கணனிகள் உலகில் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனாலும், அதிக விலைக்கு விற்கப்பட்ட அப்பிள்-1 கணநி இதுவல்லவெனவும், 2014 இல் நியூ யோர்க் பொன்ஹாம்ஸ் ஏலத்தில், தொழிற்படும் நிலையிலுள்ள அப்பிள்-1 கணனியொன்று $905,000 டாலர்களுக்கு விற்கப்பட்டிருந்தது. (மூலம்: பி.பி.சி)