EntertainmentIndia

முதலமைச்சர் பதவியை நான் ஏற்கப்போவதில்லை – ரஜினிகாந்த்

மார்ச் 10, 2020

‘தான் முதலைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை’ என, சமீபத்தில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் கூட்டத்தில் ரஜினிகாந்த் தெரிவித்ததாக அறியப்படுகிறது.


மார்ச் 5ம் திகதி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் விரைவில் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் கட்சி தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் முதமைச்சர் பதவியை எடுக்கமாட்டேன் எனக் கூறியதாகவும் அதற்கு மன்ற செயற்பாட்டாளர்கள் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும் அக் கூட்டத்தில் சமூகமளித்திருந்த உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

டிசம்பர் 31, 2017 இல், ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசத்துக்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தும் இன்றுவரை அதை ஆரம்பிப்பதற்கான உறுதியான திகதியொன்றைத் தேர்ந்தெடுக்கத் தயங்குகிறார். அடுத்த வருடம் (2021) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் வேளையில் அவர் வேட்பாளர்களைத் தெரிவு செய்யாதது மட்டுமல்ல, கட்சியின் பெயரைத் தானும் இன்னும் அறிவிக்காமல் இருப்பதும் அவரது மக்கள் மன்ற உறுப்பினர்களையும், ரசிகர்களையும் நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது.


இருப்பினும், “அவர் தான் முதலமைச்சர், அதையே மக்களும் விரும்புகிறார்கள். அவரை விட்டுவிட்டு வேறு யாரையாவது முதலமைச்சராக்கினால் அது பதவிக்கு உகந்ததல்ல. மாவட்டத் தலைவர்கள் சொல்வதெல்லாம் வெறும் ஊகம் மட்டுமே” என ரஜினிக்கு மிக நெருக்கமான காந்தீய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் பிறந்த ரஜினிகாந்தை ‘ஒரு வெளி மாநிலத்தவர்’ எனப் பல தடவைகள் அவரது வருகையை விமர்சிப்பவர்கள் தெரிவித்துவரும் வேளையில், கட்சி ஆரம்பம் பற்றி அவர் அறிவித்தால் விமர்சிப்பவர்களை மெளனமாக்கலாமென மணியன் கருதுகிறார்.

“ரஜினிக்குத் தமிழர் மீது அக்கறையில்லை என்பதுபோல் காட்டுவதற்குச் சிலர் முனைகிறார்கள். ஆனால் அவர் தனது வாழ்நாளில் 40 வருடங்களை இங்குதான் செலவழித்தவர். அப்படிப்பார்க்கில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கூட வேற்று மாநிலத்தவர்தான். அவரை மக்கள் ஏற்றுக்கொண்டவர்கள் தானே” என மணியன் மேலும் தெரிவித்தார்.


அதே வேளை, ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுக்குக் கூறியது போல, முதலமைச்சர் பதவியை அவர் ஏற்றுக்கொள்ளாமல், கட்சியைக் கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்தினால், அதுகூடத் தமிழ்நாட்டில் அரசியல் செய்யப்படும் வழிகளில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவர ஏதுவாக அமையலாம். “எனக்குப் பதவியோ, பணமோ அக்கறையில்லை, மக்கள் சேவைதான் முக்கியம்” என மக்களுக்குக் கூறுவது கூட, வாக்குகளைப் பெற்றுத்தரக்கூடிய தந்திரமான செயல். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் தனிப்பட்ட மனிதர்களைச் சார்ந்தே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதனால் அவர் முன்னிறுத்தும் ஒருவரால் எம்.கே.ஸ்டாலினை எதிர்த்து நின்று வெற்றியீட்ட்டிவிட முடியாது என்பதும் உண்மை” என மூத்த ஊடகவியலாளரும் அரசியல் நிபுணருமான பாரத் தெரிவித்திருக்கிறார்.