முகாபே மரணமானார்!

Spread the love

சிம்பாப்வே நாட்டின் தந்தை எனத் தற்போதய ஜனாதிபதி புகழாரம்

சிம்பாப்வே நாட்டின் முதலாவது தலைவர் றொபேர்ட் முகாபே இன்று மரணமானார். இறக்கும்போது அவருக்கு வயது 95.

சுதந்திரம் பெற்றவுடன், எலிசபெத் மகாராணியுடன்

சுகவீனம் காரணமாக அவர் சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னர் றொடீசியா என அழைக்கப்பட்ட வெள்ளையர்களால் ஆளப்பட்ட நாட்டின் விடுதலைக்காகப் போராடி வெற்றி பெற்றவர் டாக்டர். றொபேர்ட் முகாபே. நாடு விடுதலை பெற்ற பின்னர் 1980 இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுப் பிரதமாராகப் பதவியேற்றார். 1987 இல் அரசியலமைப்பை மாற்றி ஜனாதிபதியானார். மூன்று தசாப்தங்களாக ஆட்சியிலிருந்த அவர் இராணுவப் புரட்சி மூலம் 2017 இல் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.


முகாபே ZAPU அமைப்பின் தல்வர் Nkomo வுடன் பேச்சுவார்த்தை காலத்தில்

விடுதலை கிடைத்த ஆரம்ப வருடங்களில் அவர் தனது மக்களுக்காக உண்மையில் பாடுபட்டார். கல்வி, மருத்துவம் ஆகியன சகல மக்களுக்கும் கிடைக்க வழிசெய்தார். இருப்பினும் நிலச் சீர்திருத்த விடயங்களில் அவர் தனது வாக்குறுதிகளைக் காப்பாற முடியவில்லை.

சுதந்திரத்துக்கு முன்னர் நாட்டின் பெரும்பாலான வளமுள்ள நிலங்களையெல்லாம் வெள்ளையின மக்களே வைத்துக்கொண்டிருந்தனர். கறுப்பின மக்கள் அவர்களின் பண்ணைகளில் வேலை செய்ய முடிந்ததே தவிர நிலங்களின் உரிமையாளர்களாக ஆக முடியவில்லை. சுதந்திரம் கிடைத்ததும் வெள்ளையரின் நிலங்களைப் பறித்து நிலமில்லாத கறுப்பின மக்களுக்குப் பங்கிட்டுத் தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் பிரித்தானியா போன்ற வெள்ளை நாடுகள், குறிப்பாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரோணி பிளையர் போன்றவர்கள் அவரது சீர்திருத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டனர். நாட்டின் பொரூலாதாரத்தைச் சீர்குலைத்தனர். இதனால் அவர் சீனா போன்ற நாடுகளுடன் உறவிப் பலப்படுத்தினார். சீனா பல அபிவிருத்தித் திட்டங்களை சிம்பாப்வேயில் மேற்கொண்டது. 2017 இல் இராணுவச் சதி மூலம் அவர் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

இறுதிக் காலங்களில் அவரது ஆட்சியில் ஊழல் மிக அதிகமாக இருந்தது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமடைந்தது. மேற்கு நாடுகளுடன் தீராத பகையை வளர்த்துக் கொண்டார். இதனால் மக்கள் விரக்தியடைந்தனர். தேர்தல்களிலும் இவர் ஊழல் முறைகளில்தான் வேற்றி பெற்றார் எனப் புகார்கள் குவிந்தன. மக்களிடையே செல்வாக்கு சரிந்தது.

தற்போதய ஜனாதிபதி, எமேர்சன் மினங்காக்வா, முகாபேயின் மரணத்திற்கு தன் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்திருக்கிறார். ‘விடுதலையின் சின்னம்’, ‘நாட்டின் தந்தை’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

முகாபே 21 பெப்ரவரி 1924 இல் அப்போதய றொடீசியா (தற்போதய சிம்பாப்வே) வில் பிறந்தார். சிம்பாப்வே ஆபிரிக்கத் தேசிய கூட்டணி (Zimbabwe African National Union (ZANU) என்ற விடுதலை அமைப்பின் தலைவராக இருந்து வெள்ளையரின் ஆட்சியிலிருந்து நாட்டை மீட்பதற்காகப் போராடினார். இதன் காரணமாக 1964 இல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தசாப்தமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதே அவர் 1973ல் விடுதலை அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ZANU அமைப்பின் ஆரம்பகாலம் முதலே அவர் அதன் அங்கத்தவராக இருந்தார். சிறையிலிருந்த போதே அவர் கல்வி கற்றுப் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

Print Friendly, PDF & Email
Related:  தென்னாபிரிக்கா விஞ்ஞானி கீதா ராம்ஜி கொரோனாவைரசுக்குப் பலி
>/center>