Technology & Science

முகம் மாறும் முகநூல் | விரைவில் புதிய பெயர், புதிய வடிவம்?


பாவனையாளர்களைப் பாவிக்கும் சமூகவலைத் தளங்கள்

வணிகச் செயற்பாட்டு முறைகள் தொடர்பாகப் பாரிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் முகநூல் நிறுவனம் அதைப் புதிய செயற்பாட்டு முறைகளுடனும், புதிய பெயருடனும் மீள்சந்தைப்படுத்த (re-brand) உத்தேசித்துள்ளதாக ‘தி வேர்ஜ்’ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Image Credit: Bret Jordan / Unsplash

செயற்கை விவேகத் தொழிற்பாட்டு முறையை (artificial intelligence) அடிப்படையாகக் கொண்ட இப் புதிய செயற்பாட்டு முறைப் பிரயோகத்தின்போது ‘மெற்றாவேர்ஸ்’ (metaverse) எனப்படும் கணனியால் உருவாக்கப்படும் ஒரு மாய உலகத்துடன் (virtual reality space) பாவனையாளர்கள் ஊடாட்டத்தை (interaction) ஏற்படுத்திக்கொள்ளும் அதேவேளை, நிஜமான மனிதர்களுடனும் ஊடாடிக்கொள்ள முடியும்.

அக்டோபர் 28 அன்று நடைபெறவிருக்கும் மாநாடு ஒன்றில், முகநூலின் முதன்மை நிர்வாக அதிகாரி மார்க் சுக்கர்பேர்க், முகநூலின் புதிய பெயரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2004 இல் ஸ்தாபிக்கப்பட்ட முகநூல் நிறுவனத்தின் எதிர்காலம் இனிமேல் ‘மெற்றாவேர்ஸ்’ செயற்பாட்டு முறையில்தான் தங்கியிருக்கப்போகிறது எனவும் இதன்போது பாவனையாளர் ஒரு மாய உலகத்தினால் முழுமையாக ஆட்கொள்ளப்படுவர் எனவும் அதற்குள் அவர்களால் சீவிக்கவும், தொழில்களை மேற்கொள்ளவும், தேகாப்பியாசங்களைச் செய்துகொள்ளவும் முடியுமென சூக்கர்பேர்க் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

“அடுத்து வரும் சில வருடங்களில் நாம் ஒரு சமூக வலைத்தளமாக அல்லாது ஒரு ‘மெற்றாவேர்ஸ்’ நிறுவனமாகப் பரிணமிக்கப் போவதை மக்கள் பார்ப்பார்கள்” என ஜூலை மாதம் மார்க் சூக்கர்பேர்க் தெரிவித்திருந்தார்.

பாவனையாளர்களின் ஆசைகள், போகங்கள், பொழுதுபோக்குகள், நடைமுறைகள், நண்பர் வட்டம் போன்ற பல்வேறு விடயங்களை உடனுக்குடன் கிரகித்து அவர்கள் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் ஒரு மாய உலகத்தை அவர்கள் கண்முன்னாலேயே சிருஷ்டிக்கவல்ல செயற்கை விஞ்ஞானத் தொழிற்பாட்டை நோக்கி இப்போது பல சமூக வலைத்தளங்களும் நகர்கின்றன. கடந்த சில வருடங்களில் கேம்பிறிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் உருவாக்கிய கணனி மென்பொருளைக்கொண்டு கனடிய எல்லைக் காவல் படையினர் பயணிகளுக்குத் தெரியாமல் அவர்களது முகங்களைப் படம்பிடித்து தரவுகளைச் சேகரித்து அவர்களது பின்புலங்களை அறியப்பயன்படுத்தியமை பற்றித் தெரியவந்தது. அதே போன்று கனடாவில் மிகப் பிரபலமான பெருமங்காடிகளை நிர்வகிக்கும் ‘கடிலாக் ஃபெயர்வியூ’ (Caddillac Fairview), இவ்வங்காடிகளுக்கு வருபவர்களை இரகசியமாகப் படமெடுத்து தரவுகளைச் சேகரித்து விற்றுவந்தது என வழக்கொன்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.இப்படியாகச் சேகரிக்கப்படும் தரவுகளை உப தரவுகள் (meta data) என்பார்கள். உதாரணத்துக்கு “முகநூல் உங்கள் இருப்பிடம் பற்றி அறிய விரும்புகிறது, அதற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்களா” என்று ஒரு கேள்வியை அது எழுப்பும்போது நீங்கள் ஆம் என்று அழுத்தினால் உங்கள் இடத்தை அது தானாகவே பதிந்துவிட்டு விளம்பரதாரருக்கு அத் தகவலை விற்றுக் காசாக்கிவிடும். வட்ஸப்பில் நீங்கள் அனுப்பும் தகவலின் பிரத்தியேகம் பாதுகாக்கப்படுமென்றாலும் (end to end encryption) அது எங்கிருந்து அனுப்பப்படுகிறது, யார் பெறுகிறார்கள் என்பனவற்றைத் தற்போதைய சட்டம் பாதுகாப்பதில்லை. இத் தகவல்களையே ‘உப தரவுகள்’ (meata data) என்கிறார்கள். செயற்கை விஞ்ஞானப் பொறிமுறைகள் இத் தகவல்களைக் கண்மூடுவதற்குள் திருடிக் கொண்டுவிடுகின்றன. சமூக வலைத்தளங்கள் இவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கின்றன. முகநூல் கூறும் ‘மெற்றாவேர்ஸ்’ எனப்படும் மாய உலகம், பாவனையாளருக்கு வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் இத் திருடும் முறையை விஸ்தரிக்கிறது, அவ்வளவுதான். சூதாட்ட நிலையங்கள் சொகுசு பஸ் வண்டிகள், சொகுசு ஓட்டல்கள் ஆகியவற்றை வழங்குவதுபோல் தான் இதுவும்.

இத் தொழிற்பாட்டை முகநூல் இப்போது ஆரம்பித்தாலும், விரைவில் அனைத்து சமூக வலைத் தளங்களும் பாவிக்கப் போகின்றன. அதற்கு எதிராகச் சட்டங்களை உருவாக்கப் பல அரசாங்கங்களும், செயற்பாட்டாளர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனினும் இந் நிறுவனங்கள் தமது தரகர்கள் மூலம் (lobbysts) அரசாங்க சட்டமியற்றுபவர்களையே வாங்கி விடுகின்றன் என்பதும் உண்மை.

இதையும் மீறிச் சமீபத்தில் துணிச்சலுடன் ஒரு முன்னாள் முகநூல் பணியாளர் ஃபிரான்சிஸ் ஹோகென், முகநூல் நிறுவனத்தின் பல்லாயிரக்கணக்கான ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். அதன் இன்ஸ்டாகிராம் எனப்படும் நிழற்படப் பகிர்வுச் செயலியின் (photo-sharing app) பாவனையாளர் பலர் மனநோய்க்குள்ளாகியமை பற்றிய பல ஆதாரங்கள் கிடைத்திருந்தும் முகநூல் நிறுவனம் பணம் சேர்ப்பதில் மட்டுமே குறியாகவிருக்கிறது என்று அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இப்படியான அழுத்தங்களிலிருந்து தப்புவதற்காவே முகநூல் புதிய அவதாரமெடுக்கிறது என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்.