முகக்கவச விவகாரம்: கர்நாடகா கல்லூரியில் காவிதாரி மாணவர்களுக்கும் கவசதாரி மாணவிகளுக்குமிடையே கலகலப்பு

கர்நாடகாவிலுள்ள உடுப்பி மஹாத்மா காந்தி நினைவுக் கல்லூரியில் காவி தலைப்பாகைகள், சால்வைகள் அணிந்த இந்து மாணவர்களுக்கும் முகக்கவசம அணிந்த முஸ்லிம் மாணவர்களுக்குமிடையே இன்று (செவ்வாய்) மோதல்கள் ஏற்பட்டதாகவும் பொலிசார் மற்றும் ஆசிரியர்களது தலையீட்டால் இருபிரிவினரிடையேயான மோதல் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

முகக்கவசங்களை அணிந்த 6 மாணவிகள் வகுப்புகளுக்குச் செல்வதைத் தடை செய்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் இப் பிரச்சினை ஆரம்பித்திருந்தது. கர்நாடக கல்விச்சட்டத்தின் பிரகாரம் அனைத்து மாணவர்களும் சீருடைகளை மட்டுமே அணியவேண்டும் என்று கர்நாடக அரசு சமீபத்தில் சட்டம் கொண்டுவந்திருந்ததையடுத்து இப்பிரச்சினை ஆரம்பமாகியிருந்தது. நேற்று (திங்கள்) கல்லூரி நிர்வாகம், முகக்கவசம் அணிந்த மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதித்திருந்த போதிலும், அவர்கள் தனியான வகுப்பறைகளில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

இப்பிரச்சினை முற்றியதன் காரணமாக கர்நாடக மாநிலத்தின் இதர பகுதிகளிலுமிருந்து, திங்களன்று, முக, தலைக் கவசங்களுடன் முஸ்லிம் மாணவிகளும், சால்வை, தலைப்பாகைகளுடன் இந்து மாணவர்களும் உடுப்பி கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது இரு சாராருக்க்மிடையே ஏற்பட்ட மோதல் பொலிசார் மற்றும் ஆசிரியர்களது தலையீட்டால் தஹ்டுக்கப்பட்டது.

17-21 வயதுகளையுடைய சுமார் 30 மாணவர்கள் காவித் தலைப்பாகைகளையும் சால்வைகளையும் அணிந்துகொண்டு கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முயற்சித்ததாகவும் நிர்வாகம் அவர்களை அனுமதிக்க மறுத்ததையடுத்து அவர்கள் அத்துமீறி நுழைந்தார்கள் எனவும் தெரிய வருகிறது. “முகக்கவசங்களுடன் ஏற்கெனவே மாணவிகளை உள்ளே போக அனுமதித்திருக்கும்போது எங்களை ஏன் அனுமதிக்கக்கூடாது” எனக் கூறிக்கொண்டு இக் காவிதாரி மாணவர்கள் “எங்களுக்கு நீதி வேண்டும்”, “ஜாய் ஷிறீ ராம்” எனக் கூச்சலிட்டபடி பாடசாலையின் படலையைத் தாண்டிப் பாய்ந்து உள்ளே சென்றனரெனக் கூறப்படுகிறது. “இது தவறு. சட்டம் எல்லோருக்கும் சமாமாகப் பாவிக்கப்பட வேண்டும்” என ஒரு இந்து மாணவர் இது தொடர்பாகக் கூறியதாகவும் அறிய முடிகிறது.

இந்து தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளைகளான பார்ஜாங்க் தளம், இந்து ஜகரண வேதிக ஆகியவை தமக்கு காவி அணிகளைத் தந்தார்கள் என இம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசத் தடை தொடர்பாக கல்லூரியால் விதிக்கப்பட்ட தடை தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவிருக்கிறது.