News & AnalysisSri Lanka

மீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் 2019 இல் நிறுவப்பட்டு இந்த வருடம் ஜனவரி 8ம் திகதி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா அவர்களின் பணிப்பின்பேரில் இடித்தழிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, மீள் நிர்மாணம் செய்யப்பட்டு இன்று (ஏப்ரல் 23) மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சமயம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் நினைவாக, 10 வது ஆண்டில், (2019) இத் தூபி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்தது.

இடித்தழிக்கப்பட்ட முன்னைய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

ஜனவரி 8, 2021 இல் இத் தூபியை அகற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்ததை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் அதை நிறுத்தும்படி கோரி உண்ணாவிரதமிருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணமெங்கும் இது தொடர்பாக கடையடைப்பு நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும் பாதுகாப்பு படைகளின் உதவியுடன், துணைவேந்தர் இரவோடிரவாக அதை இடித்தகற்றியிருந்தார்.

உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்களினதும், இந்தியா உட்பட்ட பல பந்நாட்டு அரசுகளும் இது தொடர்பாகத் தமது எதிர்ப்பையும், கவலையையும் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அந் நினைவுத் தூபியை மீள் நிர்மாணம் செய்து தருவதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருந்தது.

இதற்கமைய, ஜனவரி 15, 2021 இல் மீள் நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியிருந்தன. இன்று, ஏப்ரல் 23 அன்று இந் நினைவுத் தூபி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. (படங்கள்: தமிழ் கார்டியன்)