மீரிஹன சம்பவங்கள்: இரும்புக் கம்பிகள், ஆயுதங்களுடன் வந்தவர்களைப் பொலிசார் தாக்கவில்லை – ஊடகவியலாளர்

இரும்புக்கம்பிகள் மற்றும் கூரான ஆயுதங்களுடன் தாமதமாக அங்கு வந்து சேர்ந்தவர்களைப் பொலிசார் தாக்கவில்லை

ஊடகவியலாளர்கள்

மார்ச் 31 அன்று மீரிஹனவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அதைப் பதிவுசெய்துகொண்டிருந்த ஊடகவியலாளர்களின் வாக்குமூலங்களின்படி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தபோது அமைதியாகவே அவை நடைபெற்றன எனவும் பின்னர் அதில் கலந்துகொண்ட ஆயுதங்களைத் தாங்கிய குழுவினரே கலகத்தை ஆரம்பித்து வைத்தார்கள் எனவும் தெரியவருகிறது. இதே வேளை பொலிசாருடன் கூடவே சீருடை தாங்கிய இராணுவத்தினரும், சிவில் உடை தரித்த பாதுகாப்பு படையினரும் அங்குநின்றிருந்ததாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவங்களின்போது பல ஊடகவியலாளர்களுட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு படைகளினால் தாக்கப்பட்டதனால் காயமுற்றிருந்தார்கள் எனவும் ஆனால் ஆச்சரியமாக இரும்புக்கம்பிகள் மற்றும் கூரான ஆயுதங்களுடன் தாமதமாக அங்கு வந்து சேர்ந்தவர்களைப் பொலிசார் தாக்கவில்லை எனவும் இவ்வூடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவங்களைப் பதிவுசெய்துகொண்டிருந்த ஊடகவியலாளர்களில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் அவர்களில் சுமேத சஞ்சீவ என்பவர் இராணுவச் சீருடை தரித்தவர்களாலும், சிவிலுடை தரித்தவர்களாலும் தாக்க்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் கரப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இன்னுமொரு ஊடகவியலாளர் விசேட படையணியினால் தாக்குதலுக்குட்பட்டுக்கொண்டிருந்தபோது தொடர்பிலிருந்த கைத்தொலைபேசியில் “உனது கணவரை ஏன் இங்கு அனுப்பினாய்” என்று பொலிசார் அவரது மனைவியிடம் கேட்டதாக அம் மனைவி தெரிவித்துள்ளார்.

அப்படியிருந்த்தும் இச் சம்பவங்களின்போது “கற்களை எறிந்தவரென காணொளி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரேயொரு ஊடகவியலாளர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளார்” என பொலிஸ் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். “ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே நின்ற ப்டியாலதான் அவர்கள் காயமடைந்தார்கள். ஆனால் கற்களை எறிந்தமைக்காக ஒரேயொரு ஊடகவியலாளரே கைதுசெய்யப்பட்டுள்ளார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவங்களின் பின்னால் தீவிரவாதிகள் உள்ளனர் – ஜனாதிபதி ஊடகம்

இதே வேளை, இச் சம்பவங்களின்போது ஒரு ஏ.எஸ்.பி., 18 பொலிஸ் கொமாண்டோக்கள் உட்பட மொத்தம் 24 பொலிஸ் அதிகாரிகள் காயமுற்றுள்ளனர் எனவும் இசம்பவங்கள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் தீவிரவாதிகள் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுடேவா ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். “‘அரபு வசந்தம்’ என்ற துனீசியாவில் 2010 இல் ஆரம்பித்த மக்கள் எழுச்சியைப் போல் இங்கும் ஆரம்பிக்கும் நோக்குடன் ஒரு தீவிரவாதக் குழு, இரும்புக் கம்பிகள் மற்ரும் கூரிய ஆயுதங்களுடன் நுகேகொடவிலுள்ள ஜூபிளி சந்தியில் ஆரம்பித்து ஜனாதிபதி இல்லத்தை நோக்கி நகர்ந்தது” என ஜனாதிபதி ஊடக மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இசம்பவங்களின்போது ஒரு பெண் உட்பட 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலோர் தீவிரவாதிகள் என உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதை ஊக்குவிக்குமுகமாக அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்களும் ‘தீவிரவாதக்’ குற்றச்சாட்டை முனவைத்துள்ளனர். “அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வன்முறையானதாக்த் தீவிரவாதிகள் மாற்றிவிட்டனர். 1980 களிலும் ஜே.வி.பி., யூ.என்.பி. கட்சிகளின் தீவிரவாதிகள் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே இருந்தார்கள்” எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

“இவ்வார்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை நாம் ‘தீவிரவாதிகள்’ என்று அழைக்க முடியாது. அவர்களை உண்மையில் ‘பயங்கரவாதிகள்’ எனவே அழைக்கவேண்டும்” என போக்குவரத்து அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். “பயங்கரவாதிகள் தான் ஒழிக்கப்பட்டுவிட்டார்களே” எனக் கேட்கப்பட்டதற்கு “மேலும் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள், அவர்களையும் ஒழிக்க வேண்டும்” என அமௌனுகம தெரிவித்துள்ளார்.

இச் சம்பவங்களின்போது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட இளம் ஊடகவியலாளரான அனுருத்த பண்டாரவைக் காணவில்லை என அவரது தந்தையார் முறைப்பாடு செய்துள்ளார். மோடற பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டதை அப்பிரிவு உறுதிசெய்திருந்தும் கூட நிலையத்தின் பொறுப்பதிகாரி அதை மறுத்துள்ளார். இதுகுறித்து இளம் ஊடகவியலாளர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் சபையிடம் முறையிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய முடியாது – இலங்கை மனித உரிமைகள் சபை

இதே வேளை, மீரிஹன சம்பவத்தின்போது கைது செய்யப்பட்டவர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியாது எனவும் அவர்கள் மீது பொது உடமைகள் சட்டத்தின்கீழ் மட்டுமே வழக்குப்பதிய முடியும் என இலங்கை மனித உரிமைகள் சபையின் தலைவர் நீதிபதி றோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்களைத் தடுப்புக்காவல் நிலையங்களில் சென்று பார்க்க மனித உரிமைகள் சபை தயாராகிவருவதாகக் கூறியிருக்கிறது.

ஊரடங்குச் சட்டம்

மீரிஹன சம்பவங்கள் தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர்களை அவசரம் அவசரமாகக் கூட்டி ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. 150 உறுப்பினர்களில் 75 பேர் மட்டும் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் 11-கட்சிக் குழப்பவாதிகள், அழைப்புவிடப்பட்டிருந்தும், கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. கலந்துகொண்டவர்கள் தாம் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என்ற காரணத்தினால் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டமொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியதாகவும் அதற்கு மறுப்புத் தெரிவித்த ஜனாதிபதி மேற்கு மாகாணத்தில் மட்டும் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளார். இதற்குக் காரணம் எதிர்க்கட்சிகளால் நாளை (03) ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பாரிய ஊர்வலங்களை நடைபெறாமல் செய்யவே என அக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.