மீரிகம ஆர்ப்பாட்டத்தில் 200 அவான் கார்ட் ஆயுததாரிகள்? – பாராளுமன்றத்தில் அநுரகுமார திசநாயக்கா
லசந்தா விக்கிரமதுங்கவின் பட்டப் பகல் கொலை, பொட்டல ஜயந்தவின் கடத்தல், கீத் நொயாஹர் மீதான தாக்குதல், நாசிம் தாஜுடீனின் கொலை, இணையத்தள ஆசிரியர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் எனப் பல, கோதாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருக்கும்போதே நடைபெற்றன. இவற்றிற்குப் பொறுப்பான எவருமே இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை. இப்படி பாதுகாப்புச் செயலாளராகவிருந்து ஜனாதிபதியாக மாறிய ஒருவர் எப்படி நடந்துகொள்வார் என்ற அனுபவம் எனக்கிருக்கிறது.
பாராளுமன்றத்தில் அனுரகுமார திசநாயக்கா
இன்று (ஏப்ரல் 06) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்காவுக்குமிடையில் மிகவும் சூடான விவாதம் நடந்திருந்தது. திசநாயக்கா பாராளுமன்றத்துக்கு வந்தபோது அவர் வந்திறங்கிய வாடகைக் காரில் ஒரு ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் இருந்தார் எனவும் அவர் எதற்காக பாராளுமன்ற வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டார்; ஜே.வி.பி. தலைவருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன என ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் ஆக்ரோஷமாகப் பதிலளிக்கும்போது திசநாயக்கா பல விடயங்களைப் போட்டுடைத்தார்.
அமைச்சரவை ராஜினாமா, ஆளும் கட்சிக் கூட்டணி உறுப்பினர்களின் விலகல், காபந்து அரசாங்கம் அமைத்தல் போன்ற விடயங்களை விவாதிப்பதற்காக இன்று சபையில் 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் இந்த அமளி துமளி ஏறத்தாள ஒதுக்கப்பட்ட முழு நேரத்தையும் எடுத்திருந்தது.
அநுரகுமார திசநாயக்காவின் வாகனத்தில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஹெல்மெட் அணிந்த வாலிபர் தனது பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட கட்சித் தோழர் எனவும், ஏப்ரல் 5 ஆம் திகதி பாராளுமன்றம் முடிந்து தான் வீடு திரும்பும்போது ஆர்ப்பாட்டக்கார இளைஞர்களால் தனது வாகனம் நிறுத்தப்பட்டது எனவும் அதனால் இன்று தனது கட்சித் தோழர்கள் தனக்குப் பாதுகாப்புத் தந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனாலும் அவரது பேச்சை ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இடைமறித்துக் குழப்பியபோது நாட்டில் நடைபெற்ற மோசமான அரசியல் கொலைகள், பத்திரிகையாளர் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பான ஜனாதிபதி மீது திசநாயக்காவின் வசைமாரியான தாக்குதல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்வைக்கப்பட்டன. “லசந்தா விக்கிரமதுங்கவின் பட்டப் பகல் கொலை, பொட்டல ஜயந்தவின் கடத்தல், கீத் நொயாஹர் மீதான தாக்குதல், நாசிம் தாஜுடீனின் கொலை, இணையத்தள ஆசிரியர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் எனப் பல கோதாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருக்கும்போதே நடைபெற்றன. இவற்றிற்குப் பொறுப்பான ஒருவருமே இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை. இப்படி பாதுகாப்புச் செயலாளராகவிருந்து ஜனாதிபதியாக மாறிய ஒருவர் எப்படி நடந்துகொள்வார் என்ற அனுபவம் எனக்கிருக்கிறது. அதற்காகவே நாம் எமது பாதுகாப்பை நாமே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கொலைக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர் உச்சப் பதவியில் இருக்கும்போது நாங்கள் தனியே திரியவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா. நான் பயணம் செய்யும்போது எமது தோழர்கள் எப்போதுமே பாதுகாப்பு வழங்குகிறார்கள்” என திசநாயக்கா பாராளுமன்றத்தில் குரலெழுப்பியவர்களை நோக்கி மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசியிருந்தார்.
தான் பாராளுமன்றத்தை விட்டுப் புறப்படும்போது தனது தோழர்களுக்கு அறிவித்துவிட்டுப் புறப்படுவதாகவும் அப்போது பலர் தனக்காகக் காத்திருப்பதாகவும் அன்றும் தனது பாதுகாப்புக்காகவெனப் பலர் மோட்டர் சைக்கிள்களில் காத்திருந்தனரெனவும் அவர்களில் ஒருவர் தனது வாகனத்தின் பின் ஆசனத்தில் ஏறி உட்கார்ந்தார் எனவும் அதில் என்ன தவறு எனவும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.
அது மட்டுமல்லாது, மீரிஹன ஆர்ப்பாட்டங்களுக்கு முன் பாதுகாப்புக் குழு கூட்டப்பட்டது எனவும் அக்கூட்டத்தில் அவான் கார்ட் தலைவர் நிசாங்கா சேனாதிபதி அவர்கள் பங்குபற்றியிருந்ததோடு “ஆர்ப்பாட்டம் பற்றிப் பயப்பட எதுவுமில்லை ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் தான் 200 பேரை நிறுத்தியிருக்கிறேன்” என அவர் தெரிவித்திருந்ததாகவும் திசநாயக்கா சபையில் தெரிவித்தார். “பாதுகாப்புப் படைகளின் தளபதிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் நிசாங்க சேனாதிபதிக்கு என்ன வேலை?. இதை உங்கள் தலைவரிடம் கேளுங்கள்” என இடைமறித்துக் குரலெழுப்பிய ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் அவர் மேலும் கேள்வியெழுப்பினார்.
போர் முடிந்த பின்னர் கோதாபய ராஜபக்ச தனது உற்ற நண்பரும் முன்னாள் இராணுவத்தினருமான நிசாங்க சேனாதிபதியின் தலைமையில் ‘அவான் கார்ட்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி ஆயுதக் கடத்தல் மற்றும் பிற நாடுகளில் கூலிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்தல் போன்ற விடயங்களைச் செய்துவந்தார் எனவும் லசந்தா விக்கிரமதுங்க போன்றோரது கொலைகளுக்குக் காரணமானவர்கள் சேனாதிபதியின் குழுவில் பணிபுரியும் முன்னாள் இராணுவத்தினர் எனவும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. மீரிஹன சம்பவங்களில் கூரிய ஆயுதங்களுடன் நின்றவர்கள் மீது பொலிசார் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என ஒரு ஊடகவியலாளர் தெரிவித்திருந்ததும் இங்கு நினைவுகொள்ளத் தக்கது. மாலைதீவில் சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சதியின் மூலம் ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்தமைக்கு அவான் கார்ட் நிறுவனமே காரணமென்ற தகவலும் உண்டு. நிசாங்க சேனாதிபதி அவரது குடும்பத்தோடு தற்போது மாலைதீவிற்குத் தப்பியோடியுள்ளார்.