Spread the love

மீதேன் ஒரு எரிவாயு, இன்று வீடுகளில் சாதாரணமாகப் பாவனையிலுள்ள ஒரு பண்டம். அதனாற் பெறப்படும் நன்மைகளைப் போல அதன் தீமைகளை மக்கள் அறிந்திருப்பது குறைவு.

இன்றய உலகின் இயற்கை அனர்த்தங்களுடன் இணைத்துப் பேசப்படும் வெப்பமாக்கப்படும் பூமி, வளி மண்டலம், சமுத்திரங்கள் அனைத்துக்கும் காரணமாயிருப்பதாகக் கருதப்படுவன கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (Greenhouse Gases). இதில் நீராவி, காபனீரொக்சைட் (CO2), மீதேன் (CH4), நைற்றஸ் ஒக்சைட்(nitrous oxide), ஓசோன் (ozone), குளோறோபுளோறோ கார்பன் (chlorofluorocarbons (CFCs)) ஆகியன அடங்கும்.

பூமி வெப்பமாகுதலுக்கும் இவ் வாயுக்களுக்கும் என்ன தொடர்பு?

பகலில் சூரிய வெளிச்சத்தினால் பெறப்படும் வெப்பத்தைப் பூமி தன்னைச் சூடாக்குவதன் மூலம் சேகரித்து வைக்கிறது. இரவில் இவ் வெப்பம் நிலத்திலிருந்து வளிமண்டலத்திற்குச் செல்கிறது. இவ் வேளை பூமியின் வளிமண்டலத்தை இவ்வாயுக்கள் கம்பளிப் போர்வைபோல் போர்த்தி வைத்திருப்பதால் இவ் வெப்பம் வானமண்டலத்திற்குள் செல்ல முடியாது பூமிக்கு அண்மையில் சிறைபிடிக்கப்பட்டிருக்க நேரிடுகிறது. அதனால் தரைக்கு அண்மையில் இருக்கக்கூடிய பனிப்பாறைகள், சமுத்திரங்கள், நீர் நிலைகள் எல்லாவற்றினதும் வெப்பனிலை அதிகரிக்கிறது. அதன் விளைவாக வெள்ளப் பெருக்கு, புயல், கடுமழை, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இப்படியாகப் பூமி வெப்பமாகுதலை கிரீன்ஹவுஸ் எபெக்ட் (greenhouse effect) என அழைப்பர். இவ்வாயுக்களில் பெரும்பாலானவை இயற்கையாக உருவாக்கப்படும் அதே வேளை சில செயற்கையாக மனிதரின் நடவடிக்கைகளின் மூலமும் உருவாக்கப்படுகின்றன.

மீதேன்

மீதேனில் பெரும்பங்கு நிலத்தினுள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. பல மில்லியன் வருடங்களாக நிலப்பாறைகளாலும் இறுக்கப்பட்ட மண்ணினாலும் பிடிக்கப்பட்டிருக்கும் இவ் வாயுவுக்கு மணமில்லை. சதுப்பு நிலங்களில் நீர் தேங்கி நிற்பதால் உருவாகும் வாயு, கால்நடைகளின் உணவு சமிபாடடையும்போது வெளிவருவது எல்லாமே இவ் வாயு தான். ஆனால் ஐதரசன் சல்பைட் போன்ற (அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் வாயு) வாயுக்கள் மீதேனுடன் கலந்து வெளிவரும்போது அது நாற்றமுள்ளதாக ஆக்கப்படுகிறது. வீட்டில் சமையலுக்குப் பாவிக்கப்படும் வாயுவும் இதுதான். இதற்கு மணம், நிறம் எதுவுமில்லாததால் மணம் தரும் வாயுக்களை இதனுடன் கலந்து வீடுகளுக்கு வழங்குகிறார்கள். எங்காவது வாயுக் கசிவு ஏற்பட்டால் இம்மணத்தைக் கொண்டே கசிவைக் கண்டுபிடிக்கிறார்கள். வளி மண்டலத்தில் இருக்கும்போது காபனீரொக்சைட்டை விடவும் அதைக அளவில் வெப்பத்தைச் சிறைபிடிக்கும் தன்மை இதற்கு இருக்கிறது. 100 வருடங்களில் 1 தொன் காபனீரொக்சைட் பிடித்து வைத்திருக்கும் வெப்பத்தை விட அதே அளவு மீதேன், அதே கால அளவைக்குள் 34 மடங்கு அதிக வெப்பத்தைப் பிடித்து வைத்திருக்கும். எனவே தான் மீதேன் மீது அதிக அக்கறையும் அச்சமும் கொண்டிருக்கின்றனர் சூழலியலாளர்.


காபனீரொக்சைட் போன்று அதிக காலத்துக்குக்கு மீதேன் வளி மண்டலத்தில் தங்கியிருக்க மாட்டாது எனினும் இக் குறுகிய காலத்தில் வெப்ப அதிகரிப்பினால் உலகில் ஏற்படும் விளைவுகள் மாற்றப்பட முடியாதவை. உதாரணமாக துருவப் பனி மூடிகள் உருகுதல் போன்ற விடயங்கள்.

Related:  வட-கிழக்கில் வீட்டுத் தோட்டம் | செல்வின் இரெனூஸுடன் ஒரு உரையாடல்

குப்பைக் கிடங்குகள், நிலக்கரிச் சுரங்கங்கள், கால்நடைக் கழிவு முகாமைத்துவம் போன்ற மனித நடவடிக்கைகளினால் உற்பத்தியாகும் மீதேன் மொத்த அளவில் 10% என அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகாமைத்துவம் கூறுகிறது. 

நன்மைகள்

மீதேன் எரிக்கப்படுவதன் மூலம் (சமையல்) உற்பத்தியாகும் கிரீன்ஹவுஸ் வாயு எண்ணை மற்றும் நிலக்கரிப் பாவனையின்போது வெளியாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை விடவும் குறைவானது. எனவே தான் உலகம் தன் எரிபொருள் தேவைக்கு எண்ணையைத் தவிர்த்து மீதேன் மீதான நாட்டத்தை அதிகரித்து வருகின்றது. வாகன எரிபொருளாகவும், எதிர்காலத்தில் மீதேனில் இயங்கும் பற்றரிகள் போன்றவற்றிலும் மீதேன் பாவிக்கப்படலாம். குப்பைக் கிடங்குகள், பன்றிப் பண்ணைகள் போன்றனவும் எதிர்காலத்தில் இலாபகரமான மீதேன் மூல வளங்களாக ஆகலாம்.

பருவநிலை மாற்றத்தில் மீதேன்
மீதேன் பிரச்சினை | எதிர்பாராத விளைவுகள் 1
வட டகோடாவில் மீதேன் கொள்ளி வாய்கள் – நாசா 2012 இல் எடுத்த விண் படம்

 

மீதேன் எரிக்கப்படும்போது வெளியாகும் காபனீரொக்சைட்டை விடவும் மீதேனை நிலத்திலிருந்து எடுக்கும் போதும், சேமித்து வைத்திருக்கும் போதும், அதை இடத்துக்கிடம் காவிச் செல்லும் போதும் வளி மண்டலத்திற்குள் அது தப்பி விடுவதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பே மிக அதிகம். ஆரம்பத்தில் மீதேனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய அறிவு அதிகம் இல்லாததனால் நில அகழ்வின்போது பெருந்தொகையான வாயு தப்பிப் போக நேர்ந்தது. தற்போது இன் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவதனால் வாயு தப்பித்துப் போதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும் மீதேன் வாயு உற்பத்தியில் அபிவிருத்தியடைந்த நாடுகள் அதிக ஆர்வம் காட்டுவதால் 2007 க்குப் பின்னர் மீதேன் தப்பிக்கும் அளவும் அதிகரித்து வருகிறது. நிலச் சிப்பிகளில் சிறைப்பட்டிருக்கும் மீதேன் வாயுவை மீட்டெடுக்கும் நடைமுறை (hydraulic fracturing) அமஎரிக்காவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அரசியல்

மீதேன் போன்ற இயற்கை வாயுக்களின் நன்மை, இலாபம் போன்றவை தெரியவந்த்ஹ பின்னர் உலகம் எண்ணையையும், நிலக்கரியஇயும் விட்டுவிட்டு இயற்கை வாயுக்களை, குறிப்பாக மீதேனை நோக்கி ஓட்டமெடுத்தது. இது வரையில் எப்படி எண்ணையைத் தன் நிலத்தின் கீழ் வைத்திருந்த நாடுகள் ‘எண்ணை நாட்டாண்மை’யைக் காட்டி வருகின்றனவோ அதே போல பெருமளவில் இயற்கை வாயு வளங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் தமது ‘நாட்டாண்மைக்’ காலத்துக்காகக் கனவுகொண்டிருக்கின்றன. ரஷ்யா ஏற்கெனவே தனது மீதேன் வாயு வியாபாரத்தில் இலாபமீட்டத் தொடங்கி விட்டது. ஐரோப்பாவின் பல நாடுகள் (கேர்மனி) தற்போது ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருவதற்கு இதுவும் ஒரு காரணம். உலகின் அறியப்பட்ட இயற்கை வாயு வளங்களில் 40% மத்திய கிழக்கில் இருக்கிறது என்பதும் அதில் 80% ஈரான், கட்டார் ஆகிய இரு நாடுகளின் நிலத்தினுள் சிறப்பட்டிருக்கிறது என்பதும் ஆச்சரியமே ஆயினும் இன்று ஏன் அமெரிக்கா ஈரானைச் சுற்றி வட்டமிடுகிறது என்பதற்கும் அங்கே தான் விடையுமிருக்கிறது.

Related:  வட-கிழக்கில் வீட்டுத் தோட்டம் | செல்வின் இரெனூஸுடன் ஒரு உரையாடல்
“நாம் எப்போது மரணிக்கப் போகிறோம்?”

இதைவிட தற்போது கிழக்கு சைபீரிய ஆர்க்டிக் தட்டு (East Siberian Arctic Shelf (“ESAS”)) என்று புதிய மீதேன் வாயு வளப் புலமொன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவே தற்போது உலகத்தின் மிகப்பெரிய மீதேன் வாயுத் தளம். இன்னும் தோண்டப்படாத இப் புலத்திலிருந்து வாயு தப்பிக்குமானால் உலகம் தலைகீழாகப் புரளவேண்டி ஏற்படும் என எச்சரிக்கிறார் இதுபற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட நடாலியா ஷக்கோவா. பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான் குழு IPCC (Intergovernmental Panel on Climate Change) வே உலக அளவில் நியமங்களையும் கட்டுப்பாடுகளையும் நாடுகளுக்குப் பரிந்துரைக்கிறது. இந்த சைபீரிய ஆர்க்டிக் வாயு வளம் அதன் கண்களில் இதுவரை படவே இல்லாத நிலையில் அதன் கணக்குகளில் இதுவும் சேர்க்கப்படும் போது நிச்சயமாக பல புதிய எச்ச்சரிக்கை மணிகள் அடிக்கத் தொடங்கும்.

இந்த வாயு வளம் ஏறத்தாழ ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா,இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மொத்த தரைப் பிரதேச அளவைக் கொண்டது. கடல் மட்டத்துக்குக் கீழ் உறைந்த படிமங்களுள் சிக்கிப் போயிருக்கும் மீதேன் வெளிப்பட நேரும்போது பூமி வெப்பமாகும் என்பதிலிருந்து பூமி அழிந்து போகும் என்னுமளவுக்கு ஆபத்தானது என்கிறார் ஷக்கோவா, (Understanding the Permafrost–Hydrate System and Associated Methane Releases in the East Siberian Arctic Shelf, Geosciences, 2019). ஆர்க்டிக் செய்திகள் என்ற சஞ்சிகை ஷக்கோவாவின் இந்த ஆய்வை முன்வைத்து “நாம் எப்போது மரணிக்கப் போகிறோம்? (“When Will We Die?”)” என்றொரு கட்டுரையை (ஜூன் 10, 2019) வரைந்திருந்தது. அதில் ‘ஒரு தடவை இந்த ஆர்க்டிக் தளம் விடுகின்ற ‘மீதேன் ஏவறை’ ஏற்கெனெவே வளிமண்டலத்தில் இருக்கும் மீதேனின் அளவை இரண்டுமடங்காக்கும்’ என ஷக்கோவவைக் காரணம் காட்டி எழுதப்பட்டிருக்கிறது.

எதிர்காலம்

பருவநிலை மாற்றம் மனித குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கப்போகிறது என்பதை உலக சமூகம் அறிந்திருக்கிறது. குழந்தைகள் கொடிபிடித்து ஊர்வலம் சென்றுதான் நாம் அதை உணர்ந்துகொள்ள வேண்டியதில்லை. பருவநிலை மாற்றம் எப்படி முடியப்போகின்றது என்பதை 100% எவராலும் எதிர்வுகூற முடியாது. ஆனால் தகர்ந்துபோகும் வனங்கள், ஒழிந்துபோகும் உயிரினங்கள், வரண்டு போகும் நிலங்கள் எங்கள் கண்முன்னே நடந்துகொண்டிருக்கின்றன. பணத்தையும், அதிகாரத்தையும் தம் கயில் வைத்திருப்பவர்களுக்கு இவை எதுவும் தெரியப்போவதில்லை. அவர்கள் தமது குறுகிய நோக்கங்களையே முன்வைத்துச் செயற்படுவர். பழமைவாதிகளுக்கு விஞ்ஞானம் பகை. அவர்கள் பருவநிலை மாற்றத்தைப் புரியுமளவுக்கு விவேகிகளல்ல. துரதிஷ்டவசமாக மக்கள் அவர்களையே ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். மரத்துப் போன மனங்கள் ஈரம் பற்றி அறிந்திருக்க வழியில்லை. இருப்பினும் சூழலைப் புரிந்த சிலர் குளங்களைத் தூர் வார்கிறார்கள், மரங்களை நாட்டுகிறார்கள்.

Related:  வட-கிழக்கில் வீட்டுத் தோட்டம் | செல்வின் இரெனூஸுடன் ஒரு உரையாடல்

மீதேன் வழிவிட்டுத்தரும் என்ற நம்பிக்கையில்.

 

 

Print Friendly, PDF & Email