நுகர்வோர் உரிமைகள் செயற்பாட்டாளர் (Consumer rights activist) அசேல சம்பத் பிலியந்தலயில் நேற்று (25) இரவு கடத்தப்பட்டது தொடர்பாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பாக அவரைத் தாமே கைதுசெய்ததாக குற்ற விசாரணைப் பிரிவு இப்போது ஒத்துக்கொண்டுள்ளது.
நேற்று இரவு 8:30 மணியளவில், குற்ற விசாரணைப் பிரிவினர் என்று சொல்லிக்கொண்டு வான் ஒன்றில் வந்த சுமார் 20 பேர் அசேல சம்பத்தைக் கைதுசெய்துகொண்டு சென்றார்கள் என சம்பத்தின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால், அஸ்ட்றா செனிக்கா தடுப்பூசியைப் பற்றித் தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பினார் என்பதற்காக குற்ற விசாரணைப் பிரிவு அவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சளர் அஜித் ரோஹண தற்போது தெரிவித்துள்ளார்.
அஸ்ட்றா செனிக்கா பற்றி சமூக வலைத் தளங்களில் வெளியான ‘போலிச் செய்தி’ ஒன்று குறித்து, இலங்கையின் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் (National Medicine Regulatory Authority (NMRA)) பொது முகாமையாளர், சில நாட்களின் முன்னர் பொலிசில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து சம்பத் கைதுசெய்யப்பட்டதாக இப்போது தெரியவந்துள்ளது.
இம் முறைப்பாட்டையடுத்து சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்ட கருத்துக்கள், காணொளிகளை விசாரித்தறிந்த பின்னரே சம்பத் கைது செய்யப்பட்டாரென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (26) சம்பத்தை நீதிமன்றத்தில் பாரப்படுத்தவுள்ளதாக ஊடகப் பேச்ச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அசேல சம்பத், இலங்கையின் உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், நுகர்வோர் உரிமை, பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமாவார்.