மீண்டும் பரவும் கோவிட் பெருந்தொற்று – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

மார்ச் 7-13 வரை உலகில் 43,000 பேர் கோவிட் தொற்றினால் மரணம்

கடந்த ஒரு மாதமாகத் தணிந்துவந்த கோவிட் தொற்று தற்போது அதிகரித்த வேகத்துடன் மீண்டும் உலகை ஆகிரமிக்க ஆரம்பித்துள்ளது எனவும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக சீனாவின் ஜிலின் மாகாணத்தில் கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் மிகவும் கடுமையான முடக்கக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

மிகவும் வீரியத்துடன் பரவும் ஓமைக்குரோன் திரிபு மற்றும் அதன் உப திரிபான BA.2 ஆகிய வைரஸ் வகைகள் மற்றும் பல நாடுகளிலும் தளர்த்தப்பட்டுவரும் பொதுச்சுகாதார விதிமுறைகளும் இப் புதிய பரவலுக்குக் காரணமென உ.சு.நிறுவனம் கருதுகிறது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரத்தில் தொற்று 8% த்தால் அதிகரித்திருக்கிறது. மார்ச் 7-13 வரையில் 11 மில்லியன் புதிய தொற்றுக்களும் 43,000 இறப்புக்களும் உலகில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தென் கொரியா, சீனா உள்ளிட்ட மேற்குப் பசிபிக் பிராந்தியத்தில் இப் பரவல் மிகவும் வேகமாக இருப்பதாகவும் இங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 25% த்தாலும், இறப்புக்களின் எண்ணிக்கை 27% த்தாலும் அதிகரித்திருக்கிறது என உ.சு.நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே வேளை ஆபிரிக்காவில் 12% தொற்று அதிகரிப்பும், 14% இறப்புக்களின் அதிகரிப்பும், ஐரோப்பாவில் 2% தொற்று அதிகரிப்பும், இறப்புக்களில் அதிகரிப்பு எதுவும் காணப்படவில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு மத்தியதரைக்கடல் பிரதேசங்களில் தொற்று வீதம் குறைந்திருக்கிறது. இதற்கு முந்தைய காலங்களில் இப் பிரதேசத்தில் இறப்பு வீதம் 38% மாக இருந்தது. ஐரோப்பாவில் மார்ச் மாதம் முதல் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒஸ்ட்றியா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, நெதெர்லாந்து, ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகளில் தொற்றுக்கள் அதிகரித்தவண்ணமுள்ளன.

ஓமைக்குரோனின் புதிய திரிபான BA.2 அதிக வேகத்துடன் பரவி வந்தாலும் ஒப்பீட்டளவில் அதனால் நோயாளிகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகுவதில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சாளர் மரியா ஹேர்க்கோவ் தெரிவித்துள்ளார்.

“கோவிட்டை நாம் ஒழித்துவிட்டோம் என நாம் கவனமற்று இருக்க முடியாது. தொடர்ச்சியான கண்காணிப்பும், கட்டுப்பாடுகளும், தற்பாதுகாப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும்; நெருக்கமாக மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது தொடரப்படவேண்டும்” என உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.