Sri Lanka

மீண்டும் தலையெடுக்கும் சிங்கள பெளத்த இனவாதம்

“தமிழர்களோடு ஒப்பந்தமொன்றைச் செய்து எங்கள் தாய்நாட்டைத் தாரைவார்த்துக் கொடுத்துமிருக்கலாம்” – டாக்டர் சுடத் குணசேகரா
டாக்டர் சுடத் குணசேகர

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதர பங்காளிக் கட்சிகளும் இறுதியாகத் தமது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்குக் கொடுப்பதாக அறிவித்தவுடன் தென்னிலங்கையின் இனவாதப் பூதங்கள் மீண்டும் குகைகளிலிருந்து ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.

நாங்கள் நேசிக்கும் எமது தாய்நாட்டைக் காக்கவேண்டுமாயின், வரும் 16ம் திகதி, சிங்கள மக்கள் சரியானவருக்கு வாக்களிக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்

டாக்டர் சுடத் குணசேகர

டாக்டர் சுடத் குணசேகரா என்பவர் மறைந்த முன்னாள் பிரதமர் சிறீமவோ பண்டாரநாயக்காவுக்குக்கு செயலாளராக இருந்தவர். அவர் ‘லங்காவெப்’ என்ற இணையப் பத்திரிகையில், சஜித் பிரேமதாசவின் பின்னால் அணி திரளும் சில துரோகிகள், தமிழர்களுடன் சேர்ந்து 2500 வருடம் பழைமை வாய்ந்த சிங்கள பெளத்த நாகரீகத்தை அழிக்கப் போகிறார்கள் என்ற தொனியில் இனவாதம் தொனிக்கும் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 23 கோரிக்கைகள் பற்றி (13 என்பது ‘பெரிதாக்கப்பட்டதா அல்லது அச்சுப் பிழையா என்பது தெரியாது) சஜித் பிரேமதாச இதுவரை எதையுமே சொல்லவில்லை என்பதிலிருந்து இரு தரப்புக்குமிடையே மர்ம ஒப்பந்தமொன்று இருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது. ரணில், ராஜித சேனாரத்ன போன்றோர் கடந்த ஒரு வாரமாக அங்கே (வடக்கில்) தங்கியிருந்து தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து பிரேமதாசவுக்குத் தமிழர்களை வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்கள். அவர்கள் எப்போதும் செய்வது போலவே தமிழர்களோடு ஒப்பந்தமொன்றைச் செய்து எங்கள் தாய்நாட்டைத் தாரைவார்த்துக் கொடுத்துமிருக்கலாம்.

சிங்கள தேசத்தையும் எங்கள் தாய்நாட்டையும் பாதுகாக்க வேண்டுமானால், ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் மிகவும் ஆழமாகச் சிந்தித்து, சஜித்துக்கு வாக்களிக்காது விட வேண்டும். சஜித் வென்றால் உங்கள் குழந்தைகளுக்கென்று ஒரு நாடு இருக்காது. இது சிறீலங்கா சுதந்திரக்கட்சியா, ஐக்கிய தேசியக் கட்சியா என்பதோ அல்லது ராஜபக்சவா, பிரேமதாசவா என்ற பிரச்சினை இல்லை. இது சிங்கள மக்களின் தேசத்துக்கான வாழ்வா அல்லது சாவா என்னும் பிரச்சினை. எனவே நீங்கள் வாழ்வதற்கு நாடொன்று வேண்டுமென்றால், அரசியல் வேறுபாடுகளை மறந்து, வரும் 16ம் திகதி கோதபாயவுக்கு வாக்களியுங்கள்

கீழே தரப்படும் பட்டியலிலுள்ளவர்கள் தமிழ்ச் சதிகாரர்களுடன் சேர்ந்து சிங்கள தேசத்தையும் புத்த சமயத்தையும் பூமியிலிருந்தே துடைத்தெறிய முயல்கிறார்கள் என சுடத் குணசேகர இன் நீண்ட கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

பட்டியலில் சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, விக்கிரமபாகு கருணாரட்ண, ராஜித சேனாரத்ன, சத்துர சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ராவுப் ஹக்கிம், றிசாட் பதியுதீன், பேரா. சந்திரகுப்த தேனுவர, சமன் ரட்ணப்பிரிய, தம்பர அமில தேரர், அசாட் சாலி ஆகியோரது பெயர்கள் உள்ளன.

சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரப்பற்றித் தனித் தனியாக, மிகவும் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

முழுமையான கட்டுரையை வாசிக்க: http://www.lankaweb.com/news/items/2019/11/03/all-traitors-and-anti-sinhala-anti-buddhist-elements-getting-together-under-sajit-premadasa-for-the-final-assault-on-the-sinhala-buddhist-nation-to-wipe-out-the-2500-year-old-sinhala-buddhist-civi/