மீண்டும் சுமந்திரன்
ஒரு அலசல் | சிவதாசன்
இலங்கை அரசியல், தேர்தல்கள் என்றதும் ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் என்ற கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.
இந்தக் கதையைத் தெரியாதவர்களுக்காக ஒரு re-run. இதில் பல வகையறாக்களுண்டு. நாட்டுக்கு நாடு, கிராமத்துக்குக் கிராமம் இது வித்தியாசமாகச் சொல்லப்பட்டாலும், moral of the story ஒன்று தான்.
எனக்குக் தெரிந்தது இப்படித்தான்.
ஒருவர் கிராமத்துக் குட்டையில் ஆமை பிடித்துக் கொண்டிருந்தார். அவர் பிடிக்கும் ஆமைகளை அவர் கரையில் வைத்துவிட்டு மேலும் ஆமைகளைப் பிடிக்கப் போகும்போது கரையில் இருந்த ஆமைகள் மீண்டும் குட்டையில் இறங்கி விடும். இப்படி நடந்து கொண்டிருப்பதை கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் முனிவர் ஒருவர். பிடிப்பவருக்குப் புத்திமதி சொல்ல வேண்டும் அதே வேளை ஆமைகள் பாவம் என்பதையும் அவர் உணர்ந்தார். அப் புத்திமதியை அவர் சமயோசிதமாகச் சொன்னார். “ஆமை பிடிப்பார் மல்லாத்துவார், அதை நான் சொன்னாற் பாவம்” (மல்லாத்துதல் என்பது புரட்டிப் போடுதல்).
நம்ம அரசியலிலும் இப்படிப் பல சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஊடக தர்மத்துக்காக selective ஆக அரசியல்வாதிகளை விமர்சிப்பதைத் தவிர்க்கலாமென நினைத்திருக்கிறேன். அதனால் கொஞ்ச நாளைக்கு ஊடக முனிவராகத் தவம் செய்வது நல்லது என நினைத்திருந்தேன். இப்போது சுமந்திரன் வடிவத்தில் ஆமை வந்து தொலைத்திருக்கிறது.
*****
சமுதித்தவின் சிங்கள ஊடகப் பேட்டி விடயத்தில் கூட்டமைப்பின் எதிரணியினருக்குக் கொஞ்ச நாள் field days. ஆமை (சுமந்திரன்) பிடிபட்டது குறித்து தொடர் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆமை அக் குட்டையில் கொஞ்சம் குளப்படிக்காரராக (bully) ஆக இருந்திருக்கலாம். ஏனெனில் இந்த ஆமை பிடிபட்டது குறித்து அக்குட்டையில் இருந்த வேறு சில ஆமைகளும் மகிழ்ச்சியுற்றன. ஆனால் சில நாட்களில் இக் கொண்டாட்டங்கள் எல்லாம் பிசுபிசுத்துப் போய்விட்டன. ஆமை குட்டைக்குள் மீண்டும் இறங்கி விட்டது. So far so good.
****
சில வாரங்கள் / மாதங்களுக்கு முன்னால் எனது நண்பர்கள் சிலருக்கும் எனக்கும் பல விவாதங்கள் நடைபெற்றன. விடயம் சுமந்திரன் / கூட்டமைப்பு. சுமந்திரன் என்னத்தைப் புடுங்கினார், கிழிச்சார், ஒட்டினார் என்று எங்கள் பாஷையில் தொலைபேசிகளின் மைக்குகள் கிழியச் சண்டை பிடித்தோம். சுமந்திரனைக் கூட்டமைப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
இன்றைக்கு இருக்கும் தமிழர்களது அரசியல் வீட்டைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் முக்கிய தூண்களில் சுமந்திரன் ஒன்று. அதை அகற்றுவதில் எனக்கொரு பிரச்சினையும் இல்லை அதற்கு இணையான பலமான இன்னுமொரு தூணை முதலில் எழுப்புங்கள், அதன் பிறகு பார்க்கலாம் என்றேன். இல்லை முதலில் தூணை அகற்ற வேண்டும் என்றார்கள். அதற்காகத் தாம் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்வோம் என்றார்கள். இந்தத் தடவை தேர்தலில் சுமந்திரனைத் தோற்கடிப்போம் என்றார்கள். ஜனநாயக வழியில் அதைச் செய்யுங்கள். அப்படி உங்களால் செய்ய முடிந்தால், நான் அரசியல் பேசுவதையோ, எழுதுவதையோ அன்றிலிருந்து விட்டு விடுகிறேன் என்று கூறியதோடு எங்கள் பரஸ்பர வாக்குவாதங்கள் நிறைவுக்கு வந்தன. இது சமுதித்த பேட்டிக்கு முன்னால்.
இப்போது நான் ஒரு சுமந்திரன் ஆள் என brand பண்ணுப்பட்டிருக்கிறேன். நிலைமை அதுவல்ல என்பது சுமந்திரன் ஆட்களுக்குத் தெரியும். சமூக வலைத் தளங்களில் சுமந்திரன் ஆதரவு, எதிர்ப்பு சுவர்ப் பதிவுகளில், விவாதங்களில் கலந்து கொள்வதில்லை. 13 வயதில் தமிழரசுக் கொடி பிடித்து, நிஜமான சுவர்களில் பதிவுகள் போட்டுக் களைத்துப் போன கரங்கள். எது pragmatic என்பது இப்போது புரிகிறது. இவரை யார் care பண்ணுகிறார்கள் எனச் சிலர் நினைக்கலாம். உண்மைதான். Fake news, cut, manipulate and paste வகையான செய்திகளைச் செய்பவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். அந்தப் பாதை என்னுடையதல்ல.
சுமந்திரன் விடயத்தில் என்னுடைய அபிப்பிராயம் இதுதான். அரசியல்வாதிகளுக்குரிய பண்புகள் பல அவரிடமில்லை. அரசியல்வாதிகளுக்கே உரிய ‘இரட்டை நாக்கு’ அவரிடம் இல்லவே இல்லை. படம் காட்டுவதற்காக அவர் செயற்படுவதில்லை. உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக இனியதை மட்டுமே சொல்வதில்லை. தன்னோடு உரையாடுபவரின் விவேகத்தை அவர் இலகுவாக எடைபோட்டுவிடுகிறார். தலைவர் சம்பந்தனும் அப்படித்தான் (கஜேந்திரகுமார், சரவணபவன், சிறீதரன் ஈறாகப் பல அரசியல்வாதிகளை நான் செவ்வி கண்டிருக்கிறேன்). உங்கள் சம்பாஷணை எரிச்சலூட்டும் வகையில் இருந்தால் அவர் உரையாடலைக் குறைத்துக்கொள்வார். இது எனது அவதானிப்பு.
கூட்டமைப்பில் இருப்பவர்களில் பலரது விவேகங்கள் பற்றி எனக்குச் சந்தேகங்களுண்டு. ஆனாலும் ஜனநாயகம் என்ற போரில் எண்ணிக்கை தான் ஆயுதம். கூட்டமைப்பில் பலருக்கு சுமந்திரனைப் பிடிக்காது. சிரிப்போடு அவர்களையும் அணைத்துப்போகும் அரசியல்வாதியின் பண்பு அவரிடம் இல்லை (இதுவரை). எனவே கூட்டமைப்புக்குத் தலைமைதாங்கும் தகமை அவருக்கு இல்லை என்பதை சுமந்திரன் பாஷையிலேயே நானும் கூறுவேன். ஆனால் அவர் ஒரு சிறந்த தளபதி. கட்சிக்குக் கிடைத்த ஒரு சொத்து.
தமிழரசுக் கட்சியில் ஒரு பெரிய குறைபாடு, வாலிப வயதுகளில் இளைஞர்களை எடுத்துப் பயிற்றுவித்து எதிர்காலத் தலைவர்களாக்கும் நடைமுறை இல்லை எனக் கம்பவாரிதி ஒரு கூட்டத்தில் முழங்கியிருந்தார். கம்பராமாயணத்தில் அவரது அறிவை மெச்சுகிறேன். அவ்வளவுதான். மாவை சேனாதிராஜா போன்றோர் இளைஞர் பேரவை மூலம் பல தசாப்தங்களாகப் பயிற்றப்பட்டவர்தான்.
இன்னுமொரு உப கதை.
ஒரு பண்ணையில் இரண்டு எருதுகள் இருந்தன. அவற்றைச் சோடியாக வண்டில்களில் பூட்டி இன்னுமொரு இடத்துக்குச் செல்ல வேண்டும். வண்டில்காரர் எருதுகளை நுகங்களில் கட்டும் கயிறுகளில் ஒன்றை மட்டுமே கொண்டு வந்திருந்தார். சரி ஒரு எருதை மட்டும் கயிற்றால் பிணைக்காமல் விட்டு விட்டார். அதன் சோடியான மாடு இழுக்கும்போது இதுவும் நகரும் என்ற நம்பிக்கை அவருக்கு. ஆனால் அந்த மாடு நகர மறுத்துவிட்டது. மாட்டின் சொந்தக்காரருக்கு உடனே ஒரு யோசனை வந்தது. கயிறில்லாத மாட்டிற்கு அருகே போய் அதன் கழுத்தைச் சுற்றிக் கயிறொன்றால் கட்டுவது போலப் பாசாங்கு செய்தார். அதன் பிறகுதான் மாடு நகர்ந்தது.
இது தான் பயிற்சியின் இரகசியம்.
தமிழரசுக் கட்சியில் அல்லது கூட்டமைப்பில் இப்படிப் பலருண்டு. கம்பவாரிதிக்கும் இது தெரியும். அவரது பிரசங்கப் பயிற்சியில் இதுவெல்லாம் இட்டு நிரப்பப் பாவிக்கப்படும் மொழித் துண்டுகள் மட்டுமே. யதார்த்தம் அதுவல்ல என்பது அவருக்கும் தெரியும்.
*****
பல தமிழ்த் தலைவர்கள் வடக்கிலோ கிழக்கிலோ இருக்கும்போது தலைவர்களாகவே கணிக்கப்படுவதில்லை. அவர்கள் எல்லோரும் சிங்களவர்களாலோ அல்லது வெளிநாட்டு பிரதானிகளாலோதான் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். முதலைகளுக்குத் தண்ணீரில் தான் பலம். அதனால் எமது தலைவர்கள் பலர் தமது பலங்களைக் காட்டவல்ல தண்ணீரைத் தேடிப் போவது இயல்பு. இப்படித்தான் புலம் பெயர்ந்தோர் பலர் புதிய சூழல்களில் தமது பலங்களைக் கண்டுகொண்டார்கள்.
அருணாசலம், ராமநாதன், சிற்றம்பலம் கார்டினர், திருச்செல்வம், செல்வநாயகம், பொன்னம்பலம் என எல்லோரையும் இனம் கண்டவர்கள் சிங்களவர்கள். சிங்களக் கல்விமான்கள் அவர்களை மதித்தார்கள். இன்றுள்ள தலைவர்களில் சுமந்திரனையும், இரா சம்பந்தனையும் தவிர வேறெவரைச் சிங்களவரோ, வெளிநாட்டவரோ மதிக்கிறார்கள்? இவர்களில் எவரும் தொண்டர்களாகச் சேர்ந்து முன்னேறியவர்களல்லர்.
*****
முன்னாள் யாழ்ப்பாணத்து அரசாங்க அதிபர் நெவில் ஜயவீரவை நினைவுகூர்ந்து சமீபத்தில் எஸ்.சிவதாசன், கொழும்புப் பத்திரிகை ஒன்றில் கருத்தொன்றைப் பதிவிட்டிருந்தார். ஜயவீரவின் நினைவுக் குறிப்புகளில் இருப்பதாகக் குறிப்பிட்ட ஒரு சம்பவம் இங்கு மீட்கப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
1960 பதுகளில் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி பல அஹிம்சை வழிப் போராட்டங்களை முன்னெடுத்தது. அப்போது பிரதமராக சிறீமாவோ பண்டாரநாயக்கா இருந்தார். யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமாகலாம் எனவும், படைகளைக் கொண்டு முறியடிக்க வேண்டுமெனவும் அவரது ஆலோசகர் என்.கியூ.டயஸ் பரிந்துரைத்தார். சிறிமாவோவுக்கு அது சிறந்த ஆலோசனையாகப் படவில்லை. அவருக்குத் தெரிந்த இளம் செயல்வீரரான நெவில் ஜயவீரவை அழைத்தார். ஜயவீரவுக்கு அப்போது 32 வயது. நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியெய்தி இருந்தார். அவரை அழைத்து ஆலோசனை கேட்டதுமல்லாது யாழ்ப்பாணத்துக்கு அரசாங்க அதிபராகவும் நியமித்தார்.
கடும் வெயிலில் தமிழர் கச்சேரியை நோக்கி ஊர்வலம் வந்தனர். பெரும்திரளான சனம். அவர்களை முகமலர்ந்து வரவேற்று ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு நெவில் ஜயவீரவும் மனைவியுமாகக் குளிர்பானம் கொடுத்தார்கள். இரு தரப்பும் பேசியது, இணங்கியது. தலைவர்கள் ஊர்வலத்தில் வந்தோரைத் திரும்பிப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.
எடுக்கப்பட்ட முடிவு இதுதான். தனிச் சிங்களச் சட்டம் இலங்கை முழுவதும் நடைமுறையிலிருக்கும். ஆனால் வடக்கு மாகாணத்தில் அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஜயவீர ஆணை கொடுத்தார். “எழுத்தில் தரமாட்டோம், நடைமுறைப்படுத்தவும் போவதில்லை” என்பது ஜயவீரவின் சத்தியம். அதற்கு சிறிமாவோவும் இணங்கியிருந்தார்.
இதில் இன்னுமொரு விடயம், நெவில் ஜயவீரா அப்போது யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தார். அது அவரது Plan B. “நான் குறைந்தது ஒரு Plan B யாவது வைத்திருந்தேன். அவர்களிடம் அது இருக்கவில்லை” என அவரது நினைவுக்குறிப்புகளில் கூறுகிறார்.
தலைமைத்துவம் என்பது இதுதான். தென்னிலங்கையையும் திருப்திப்படுத்தி வடக்கையும் ஏககாலத்தில் திருப்திப்படுத்திய அந்தத் தலைவி கனவனின் இறப்போடு முன் தள்ளப்பட்டவர். பயிற்றப்பட்டவரல்ல. அவருக்கு ஆலோசகராக இருந்த டயஸ் ஒரு மலை விழுங்கி. அவரது ஆலோசனையில் தான் வடக்குக் கரையோரங்களில் கடற்படை முகாம்கள் போடப்பட்டன. அதுவும் ஆயுதப் போராட்டங்கள் முளைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பதாக. அப்படியானவரின் ஆலோசனையைத் தவிர்த்து தனது உள்ளார்ந்த வழிகாட்டலில் ஒரு குடும்பத் தலைவியான அவரால் ஒரு சிறப்பான தலைமைத்துவ முடிவை எடுக்க முடிந்தது.
*****
இப்படியான தலைவர்கள் எமது சமூகத்தில் அரிது. இப்போது இருக்கும் தலைவர்களில் சம்பந்தன், சுமந்திரன் தவிர்ந்த எவரிடமும் தென்னிலங்கை மஹாவம்ச மனநிலைக்குள் தமிழர் பிரச்சினைகளை லாவகமாகக் கொண்டுசெல்லும் திராணி இல்லை. தமிழர் பிரச்சினையைச் சிங்களத் தொண்டைகளுக்குள் திணித்துப் பேசவைத்தது ஆயுதப் போராட்டம். அதற்குப் பிறகு அரசியலமைப்பு என்ற ஆயுத உதவியுடன் தென்னிலங்கைக்குள் ஊடுருவிய ஒரு தளபதி சுமந்திரன் தான். அவரது உழைப்பின் பெறுபேறுதான் 19 வது திருத்தம். அது தமிழரை மட்டுமல்ல சிங்களவரையும் காப்பாற்றியிருக்கிறது. அப்படியான ஒருவரைக் கூட்டமைப்பில் இருந்து அகற்ற வேண்டுமென்பது நாமே நமது வீட்டை இடிப்பதற்குச் சமன்.
*****
சமுதித்த பேட்டியின் பின்னணி கபடத் தனம் கொண்டது. சமுதித்தவைத் தெரியாமல் சுமந்திரன் போகவில்லை. தன்மீதுள்ள நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டுதான் அவர் பேட்டியைக் கொடுத்தார்.
ராஜபக்சக்கள் மகா தந்திரசாலிகள். ஜனாதிபதி தேர்தலில் அவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு கை கொடுத்தது. ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுப்பது அவர்களது அடுத்த கனவு. அதற்குத் தடையாக இருக்கக்கூடியது கூட்டமைப்பு. இதர கட்சிகள், ஒன்று பலம் குறைந்தவை, இரண்டு வாங்கப்படக் கூடியவை. கூட்டமைப்பிடம் அது வாய்க்காது. முள்ளிவாய்க்கால், உயிர்த்த ஞாயிறு ஆகிய அச்சங்களைச் சிங்கள மக்கள் மனதில் இருந்து கொறோணாவைரஸ் துரத்தியடித்திருக்கும் இந்த நிலையில், கூட்டமைப்பைப் பயங்கரவாதத்துடன் இணைத்து தென்னிலங்கையில் பிரசாரம் செய்யும் ஒரு உத்தியின் வெளிப்பாடே சமுதித்த பேட்டி. சுமந்திரனின் வாயால் ஆயுதப்போராட்டத்தை நியாயப்படுத்த சமுதித்த பலதடவை முயன்றார். இதன் பார்வையாளர் தென்னிலங்கை மக்கள் என்பதைச் சுமந்திரன் நினைவில் இருத்திக்கொண்டே தனது பதில்களைச் சொன்னார்.
இந்த வேளையில் தமிழ்த் தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தித் தனது வாக்கு வங்கியைப் பெருப்பித்திருக்க முடியும். ஆனால் அவரது மனதில் இருந்தது the big picture, ராஜபக்சக்களின் கனவான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தடுக்க வேண்டும். இப் பேட்டியில் சுமந்திரனுக்கு hands down victory. இப் பேட்டி தென்னிலங்கை ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. மாறாக அது தமிழர் மத்தியில் பிரளயத்தை உண்டுபண்ணியிருக்கிறது என்பதும், கூட்டமைப்பின் வாக்குகளை அது சிதறடித்து விட்டது எனவும் அவை விளாசித் தள்ளின. செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, புளட் சித்தார்த்தன் எல்லோரும் சுமந்திரனைத் தூக்கி எறிய ஓடித் திரிந்தார்கள்.
இப் பேட்டியின் பகுதியை வெட்டி ஒட்டி ஒரு அரசியல்வாதியின் ஊடகம் ரகளை பண்ணியது. புலம் பெயர்ந்த சுமந்திர வெறுப்பாளர் அத் துண்டைக் கொண்டு உலகம் முழுவதும் relay ஓடினர். சுமந்திரன் வசமாக மாட்டிக்கொண்டார் என ஏகமனதாகத் தீர்மானம் போட்டார்கள். அதற்குள் ஒளித்து நின்று சில கூட்டமைப்புக் கைகளும் உயர்ந்தன. Sumanthiran was done and out எனக் குஷியாக இருந்த வேளையில் superman போன்று அவர்களின் மேடையிலேயே வந்து குதித்தார் சுமந்திரன். பல வால்கள் மீண்டும் சுருண்டன.
இதற்குள் சமுதித்தவின் சிங்களத்திலான முழுப் பேட்டியும் தமிழில் உலா வந்தது. relay ஓடியவர்கள் பலர் முட்டாக்குகளைப் போட்டுக்கொண்டனர். உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது மக்கள் முன மகாராஜனாக மாலைகள் சகிதம் வலம் வருகிறார் சுமந்திரன். நந்தவனத்து ஆண்டிகள் ஓடி முளிக்கிறார்கள். இப்போது அவர்களது வாக்குக் கடகங்களில் ஓட்டைகள் தெரிகிறது.
****
தென்னிலங்கையில் பரபரப்பு வேறுவிதமாக இருக்கிறது. அண்ணன் தம்பி ராஜபக்சவுக்களுக்குள் பிரச்சினையாம். ஆனாலும் அவர்கள் கண நேரத்தில் கட்டிப் பிடிப்பவர்கள். கொறோணாவின் இம்சையே அவர்களுக்குப் போதும். வயிறுகள் நிரம்பியிருக்கும்போதுதான் தேசியம் வேலை செய்யும். மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். பிக்குகள் அவர்களைத் தள்ளிக்கொண்டு வந்து வாக்களித்தாலே தவிர மனமுவந்து வெளிவருவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
படித்தவர்களும், ஜனநாயகவாதிகளும், அரசியலில் இராணுவத்தின் ஊடுருவலைச் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். பாராளுமன்ற அரசியலில் ஊதிப் பெருத்த ஊழல் பெருச்சாளிகளுக்கு கோதாபயவிடம் அதிகாரம் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பலமான கோதாவின் ஆட்சியை விடப் பலமான பாராளுமன்றமே அவர்களுக்கும் நல்லது.
நாமலுக்கு முடி சூட்ட வேண்டுமெனபது அரசியார் ஷிராந்தியின் மகா விருப்பம். கோதாவின் இராணுவ ஆட்சியில் அது நடக்காது.
முன்னைய காலங்களில் பணம் , பதவி என்று மஹிந்தவின் ஆசைவார்த்தைகளால் கட்சி மாறியவர்களும் கூட கோதாவின் இரும்புக்கரங்களினால் தமது அதிகாரங்களும் பிடுங்கப்படும் என உணர்ந்ததால் அவர்களும் கட்சி மாறுவதற்கு யோசிப்பார்கள்.
இந்த நிலையில், ராஜபக்சக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது அபூர்வம். இப்படியான சந்தர்ப்பத்தில் பலமான தமிழர் பிரசன்னம் பாராளுமன்றத்தில் இருப்பது அவசியம்.
அதற்காகவேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவது அவசியம். தலைவர் சம்பந்தனின் கீழ் ஒரு சிறிய சன்னியம் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். கூட்டமைப்பினால் அரசியல் தீர்வு பெற்றுத் தரப்படுமென்று நான் சொல்லவில்லை. தமிழருக்கான ஆசனங்கள் அங்கு தொடர்ந்தும் இருக்கவும், பாவிக்கப்படவும் வேண்டும். தமிழரசுக்கட்சியோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தாம் தமிழ் மக்களது அபிவிருத்திக்காகப் பாராளுமன்றம் போனதென்று சொல்லவுமில்லை. அபிவிருத்தி முக்கியமானால் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸின் மிதிவண்டியை கடந்த 75 வருடங்களாக ஒருவரே ஓட்டிக்கொண்டிருக்க மாட்டார்.
இலங்கையின் தற்போதைய ஜனநாயக ஒழுங்கில் அரசியலமைப்பினால் தீர்வைக் கொண்டுவரலாமென்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. எந்த அரசாங்கமும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன், கொடுக்கலாம், கொடுத்ததைத் தட்டியும் பறிக்கலாம். எனவே நாம் செய்யவேண்டிய ஒன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டியது. அது சர்வதேச சட்ட வரையறைக்குள் அகப்பட்டிருக்கும் ஒன்று. இரண்டு நாடுகளும் இணக்கப்படாமல் அரசியலமைப்பினால் மட்டும் அதை இல்லாமல் செய்ய முடியாது. எனவே அதை நடைமுறைப்படுத்த இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பத்து கட்சிகளின் கீழ் பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் போய் அதைச் செய்ய முடியாது. எனவே தான் முழுப் பலத்துடனான கூட்டமைப்பின் அவசியம் இங்கு எழுகின்றது.
*****
கோவிட்டின் பின்னான உலக ஒழுங்கில் இலங்கையின் சீன நட்பும், இந்திய சீன எல்லைப் பூசலும், தமிழருக்கு அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. கொழும்புடனும் டெல்ஹியுடனும் பலமான பேரம் பேசுதலுக்குத் தகுதியுடையவர்கள் கூட்டமைப்பினர் மட்டுமே. அதிலும், அனுபவத்தால் நிமிர்ந்து நிற்கும் இருவர் சுமந்திரனும், இரா சம்பந்தனும் மட்டுமே. தமிழ் வாக்காளர்களுக்கு இது நன்றாகப் புரியும்.
சமுதித்த பேட்டியால் சுமந்திரன் தூக்கியெறியப்படுவார் என ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும், முகநூல் தளங்களில் சம்பந்தனுக்கு மூக்கில் பஞ்சு வைத்தவர்களதும் அறிவு நிலையில் மக்கள் இல்லை என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்துவிட்டது.
சுமந்திரனை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர் மீது போர்க்கொடி தூக்கியவர்கள் தமது நடத்தைகளினால் சுமந்திரனை மகானாக்கி விட்டார்கள். சமுதித்த பேட்டியின் துண்டைக் கொண்டோடித்திரிந்து அவருக்கு வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு hands down victory என்பது உறுதி.
சமுதித்த பேட்டியைத் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முதல் வெளியிட்டிருந்தால் சிலவேளைகளில் சுமந்திரனுக்கு கால அவகாசம் போதாமல் இருந்திருக்கலாம்.
ஆமையைப் பிடித்தவர்கள் மல்லாத்திப் போடவில்லை. பாவத்திலிருந்து தப்பிக்கொண்டேன்.