மீண்டும் கோவிட் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
புதிய ரக கோவிட் தொற்று உலகில் வேகமாகப் பரவி வருகிறதென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 27 வரையிலான காலப்பகுதியில் 1.4 மில்லியன் மக்கள் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் இவர்களில் 1,800 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சென்ற மாதம் தொற்று 38% த்தால் அதிகரித்திருப்பினும் இறப்பு வீதம் 50% த்தால் குறைந்திருக்கிறது எனவும் அது தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் 1,296,710 தொற்றுக்களும் 596 மரணங்களும், இத்தாலியிலும், பிரித்தானியாவிலும் முறையே 27,000 , 26,000 தொற்றுக்களும் நிகழ்ந்திருக்கின்றன. கிழக்கு மத்தியதரைப் பிரதேச நாடுகளில் தொற்றுக்கள் 113% மும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 52% மும், ஐரோப்பிய பிராந்தியத்தில் 39% மும் தொற்றுக்கள் அதிகரித்த அதே வேளை ஆபிரிக்கா (-76%), தென்கிழக்கு ஆசியா (-48%) ஆகிய பிராந்தியங்களில் தொற்று மிகவும் குறைந்திருக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
தற்போது மூன்று வகையான புதிய கோவிட் ரகங்கள் வலம் வருகின்றன. அவை, மிக வேகமாகப் பரவும் வகையான ‘எறிஸ்’ (Eris), ‘ஆர்ற்றூறோ’ (Arturo), ‘கிராக்கிண்’ (Kraken) (இதன் பரவல் வேகம் குறைந்து வருகிறது).
தொற்று வேகம் அதிகரித்தாலும் இது குறித்து அவசரகாலப் பிரகடனமொன்றையும் உலக சுகாதார அமைப்பு இதுவரை செய்யவில்லை. ஆனாலும் ஏற்கெனவே பாவனையிலிருந்துவந்த தடுப்பு முயற்சிகளைக் கைவிட்டுவிடக்கூடாது என இந்நிறுவனம் மே மாதம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.