Spread the love
கனடா மூர்த்தி
கனடா மூர்த்தியுடன் மிஸ்கின்
கனடா மூர்த்தியுடன் மிஸ்கின்

மிஷ்கினின் இயக்கத்தில் வந்திருக்கும் புதிய திரைப்படம் ‘சைக்கோ’.
படம் தொடங்கும்போதே படத்தை ஹிட்ச்காக்கிற்கு சமர்ப்பித்துவிடுகிறார் மிஷ்கின். அடுத்த காட்சிகளில், நொங்கு சீவுவதைப்போல தலையை ஒரே வெட்டாக வெட்டி தொடர்கொலை செய்யும் ஒரு ‘சைக்கோ’ அறிமுகமாகிறது. பிறகு ‘அது’ இன்னுமொரு பெண்ணைக் கடத்திவிடுகிறது. சரி.. இனி படத்தை அலசலாமா?

கண்தெரியாத ஒரு பாத்திரம் (குருடு – ஆனால் நடக்க முடியும்.) நடக்க முடியாத பாத்திரம் (முடம் – ஆனால் பார்க்க முடியும்.) இந்த இரண்டு பாத்திரங்களும் சேர்ந்து அந்த ‘நொங்கு வெட்டி’ சைக்கோவை தேடுகின்றன. ஏன்? என்பதுதான் படம்.

என்னதான் சமாதானம் (முடச்) சமாதானம் சொன்னாலும், நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கிளப்பிக்கொண்டே இருக்கும்வகையில் போகும்படி இருக்கும் திரைக்கதை.

போதாக்குறைக்குக் கழுத்தை வெட்டித் தலையைச் சேகரிக்கும் சைக்கோ வேறு. சுவாரஸ்யமாகத் தனது ரசிகர்கள் ஏற்கும் வகையில் முழுப் படத்தையும் நகர்த்தியிருப்பது மிஷ்கினின் திறமை.

மிஸ்கினின் 'சைக்கோ' | திரை அலசல் 1

சிங்கம்புலியை வில்லன் கொன்றதற்குப் பிறகு வரும் காட்சிகளில் கொட்டாவி வருகிறது. ஆரம்பம் தந்த விறுவிறுப்பு பிறகு இல்லை. இடையிடையே சில தத்துவார்த்த வசனங்கள் உரத்து வருகின்றன. அதுதான் மிஷ்கின்.

பெற்றோர் கனடாவில் வசிப்பதால், ஒரு தனி ஆளாக இசைக் கலைஞனாக வாழும் உதயநிதி ஸ்ராலின். பணக்கார ஹீரோ. அவருக்கு ஒரு காதல். இது கதையில் முதல் முடிச்சு. வில்லன் சுய இன்பம் அனுபவித்ததிலிருந்து (கை) ஒரு பெரும் மனப்பிறழ்வு ஆரம்பமானதென்கிறது பிளாஷ்பாக். அந்த இடம் வரும்போது படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து உட்கார்கிறார்கள். ‘புணர்வு ‘என்பதற்கான ஆங்கில நாலெழுத்துச் சொற்பிரயோகம் வரும்போது பீப் சத்தம் போட்டு அழிக்காமல் விட்டதற்குப் பாராட்டுக்கள். சில இடங்களில் வசனம் வெட்டப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

படத்தில் உதயநிதிக்கு இணையாக அதிதி ராவ், நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இருவருமே உதய நிதியைவிட நன்றாக மனதில் பதிகிறார்கள். அரசியல்வாதி + இளைஞரணித் தலைவர் உதய நிதியின் அரசியல் தொண்டர்கள் படம் பார்த்தாலே படம் வெற்றி!!!

இந்தப் படத்திற்கு முதலில் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. பிறகு ஏனோ தன்வீர் என்பவர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவை செய்திருக்கும் தன்வீர் பிசி ஸ்ரீராமின் சீடர். குருவின் பெயரைக் காப்பாற்றச் சிரமப்பட்டிருக்கிறார். (பிசி ஸ்ரீராம் பிலிமில் ஒளிப்பதிவு செய்தவர்) சீடரின் டிஜிட்டல் ஒளிப்பதிவில் மாஜிக் நடந்திருக்கிறது. பல இடங்களில் ‘வாவ்’ எனச் சொல்ல வைக்கின்றது ஒளிப்பதிவு. (தியேட்டருக்கு சென்று பார்த்தால்தான் அது புரியும். கள்ளக் கொப்பிகளில், உடைசல் ரிவிக்களில் படத்தைப் பார்த்துவிட்டு, “படம் சரியில்லை.. ஒளிப்பதிவு சரியில்லை” என்று சொல்பவர்களை அமுக்கி யாராவது சைக்கோக்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்).

இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பதாலேயே அதை பார்க்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். மிஷ்கின் போன்ற இன்றைய காலகட்டத்து இயக்குனர் எடுத்திருக்கும் ‘ஹொரர்’ மூவிக்கு ‘இவர்’ எப்படி இசையமைக்கிறார் என்று தெரியவேண்டுமன்றோ.

உண்மையில் இளையராஜா இசை பற்றி தனித்துச் சொல்லவேண்டும். இந்தப் படத்திற்கு வேறு யாராவது பின்னணி இசையமைத்திருந்தால், “டகர..டகர..டாம்..டோம்” என்றெல்லாம் அதி பயங்கர இசையால் – அவர்கள் பின்னணி இசை தனித்துத் தெரியுமாறு – விறுவிறுப்பு ஏற்றியிருப்பார்கள். ஆனால் “இது இளையராஜா” என்பதுபோல கதையின் தன்மைக்கு ஏற்ப ஆனால் மனம் நெகிழுமாறு பின்னணி இசையை ‘ராஜாஸார்’ தந்திருப்பது கவனிக்க முடிகிறது. ‘புயல்’ அடிக்க வேண்டிய பல இடங்களிலும் ‘தென்றல்’. “ராஜா கையெவைச்சா அது ராங்கா போகாது” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்ட இளையராஜாவிற்கு சந்தர்ப்பம் தந்ததற்கு இளையராஜா மிஷ்கினுக்கு நன்றி பாராட்ட வேண்டும். (கடைசியில் தாய்ப்பாசம் பற்றி ஒரு பாடல். அதைப் பாடாமல் விட்டதற்கு இளையராஜாவிற்கு நன்றி.) இளையராஜா = Terror இல்லை. Terrific! ! கொலைகளையும் ‘உயிரோட்டமாக’ வைத்திருக்கிறார் இளையராஜா.

சைக்கோ கொலைகள் படத்தில் தாராளமாக இருப்பதால் ஒரு தரம்தான் படத்தைப் பார்க்க முடியும் – ஆனால் ரசித்துப் பார்க்க முடியும். ஆனால் என்னதான் ரசித்துப் பார்த்தாலும் “மீண்டும் ஒரு தடவை – திரும்பவும் ஒரு முறை பார்க்கத் தூண்டாத வகையான படங்களில் ஒன்று இது'”என்பதுதான் இந்தப் படத்தின் குறை என்பேன். படத்தின் கதையைவிட மேக்கிங்கிற்குத்தான் கிரெடிட்.

சுருங்கச் சொன்னால், இந்த சைக்கோ தமிழ்நாட்டு ‘மக்கள்திரளுக்காக’ எடுக்கப்படவில்லை. (1) திரையரங்கில் படம் பார்க்கும் ரசிகர்களுக்காகவும், (2) புதிய சினிமா ரசிகர்களுக்காகவும், (3) தனது ரசிகர்களுக்காகவும் இந்தப் படத்தை மிஷ்கின் எடுத்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் மேற்குலக சினிமாவில் ஒன்றி ஓடுவதற்காகக் கால்பதிக்க எடுக்கப்படும் இந்திய முயற்சிகளில் ஒன்றாகவும் இதை கருதலாம்.

மிஷ்கின் கடந்த முறை கனடாவில் வந்திருந்தபோது பிசாசு படத்தைப்பற்றி பேச்சு வந்தது. மீண்டும் அப்படியான ஹொரர் வகைப்படம் ஒன்றைச் செய்ய ஆசைப்படுவதாக சொல்லியிருந்தார். சொன்னது போலச் செய்துவிட்டார். “செய் அல்லது செத்து மடி.” (படத்திலும் செத்து மடிகிறார்கள்).

(இரவே ஆளைப் போனில் பிடித்தேன். படம் எப்படி.. பிடித்ததா? என ஒரு கலைஞனுக்கே உரிய தொனியில் குழந்தைத்தனத்துடன் கேட்டார். விரைவில் கனடா வருகிறாராம். “இந்த மாதிரிப் படங்களையும் எடுங்கோ.. எங்கட கதையையும் எதையாவது எடுத்து உங்கட ஸ்டைலில் ஒரு படமும் பண்ணுங்கோ” என்றும் சந்தடிசாக்கில் ஒரு ரிக்வெஸ்ட் விட்டேன். “ம்ம்ம்.. ” என்றது பதில். “ஒரு இராணுவ சைக்கோ பலரது கழுத்துக்களை வெட்டியிருந்தாலும், வெட்டிய சைக்கோ சிறையில் அடைக்கப்பட்டாலுங்கூட அந்த சைக்கோவை இலங்கையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துவிடுவார்” என்பதைச் சொல்லவில்லை).

படத்தில் பல இடங்களில் ‘சைக்கோ’ இருக்கிறது. பல இடங்களில் ‘லொஜிக்’ இல்லை. இருந்த போதும் படமானது ‘சைக்கோ-லொஜிக்’ என தீர்ப்பு சொல்லத்தக்கவிதமாகத் தன் படைப்பை முடித்துத் தந்திருப்பது மிஷ்கினின் சாமர்த்தியம்.

Print Friendly, PDF & Email