Spread the love

மிருசுவிலில் எட்டுத் தமிழர்களைப் படுகொலை செய்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்து முன்னாள் இராணுவ சேர்ஜெண்ட் சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு மிருசுவிலில் எட்டுத் தமிழர்களைப் படுகொலை செய்ததற்காக முந்திய அரசாங்கம் ஸ்டாஃப் சேர்ஜெண்ட் ஆர்.எம். சுனில் இரத்னாயக்கா வழக்குக் தொடுத்திருந்தது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் 13 வருடங்களாக நடைபெற்ற வழக்கின் இறுதியில் ஜூன் 25, 2015 அன்று, சுனில் ரத்நாயக்காவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது.

2019 ஜனாதிபதி தேர்தலின்போது கைதுசெய்யப்பட்ட பாதுகாப்பு படையினரை விடுதலை செய்வேன் என ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தார். அதன் பிரகாரம், இன்று சுனில் ரத்னநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவத்தினரான சுனில் ரத்நாயக்கா இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளாரென சிறைச்சாலை ஆணையாலர் ஜயசிறி தென்னக்கூன் தெரிவித்துள்ளார்.

சுனில் ரத்நாயக்கா உட்பட ஐந்து இராணுவத்தினர் மிருசுவில் படுகொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களில், இரண்டாவது லெப்டினண்ட் ஆர்.டபிள்யூ. சேனகா முனசிங்க, ரி.எம்.ஜயரட்ன, எஸ்.ஏ. புஷ்ப சமன் குமார மற்றும் காமினி முனசிங்க ஆகியோர் அக் கொலைகளில் குற்றமற்றவர்களென நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்திருந்தது.எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அஜித் பெரேரா, சுனில் ரத்னாயக்காவின் விடுதலையை வரவேற்றுப் பேசும்போது, ” தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கிய உறுதிமொழியையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச காப்பாற்றியிருக்கிறார். அப்படித்தான் ஒரு தலைவர் இருக்க வேண்டும். ஆகையால் நான் எனது நன்றியை ஜனாதிபதி ராஜபக்சவுக்கும், நீதி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

போர் முடிந்த பின்னர் குற்றம் புரிந்தவர்களெனக் காணப்பட்ட பாதுகாப்புப் படையினரை ‘தேசத்தின் மாவீரர்கள்’ எனத் தென்னிலங்கைச் சிங்கள இனவாத சக்திகள் போற்றிப் புகழ்வதும் அரசியல்வாதிகள் அதற்குத் தூபம் போடுவதும் இயல்பாகிவிட்ட ஒன்று.

டிசம்பர் 10, 2000 அன்று மிருசுவிலில் நடைபெற்ற படுகொலைகளின் போது, 2 குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். கொல்லப்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டிருந்த படுகுழியைத் தோண்டி மறுநாள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களின் கழுத்துக்கள் வெட்டப்பட்டிருந்தனவென மாவட்ட மரண விசாரணை அதிகாரி தெரிவித்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் 5 வயதுக் குழந்தையும் ஒருவராவார்.

இச் சம்பவத்தின்போது இராணுவத்தினரிடமிருந்து தப்பியோடிய பொன்னுத்துரை மஹேஸ்வரன் வழக்கில் சாட்சியமளித்ததுடன், கொலையுடன் சம்பந்தப்பட்ட 5 இராணுவத்திரை அடையாளம் காட்டியிருந்தார். 13 வருட நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் 2015 இல் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்த (Long Range Reconnaissance Patrol (LRRP)) ஸ்டாஃப் சேர்ஜெண்ட் சுனில் ரத்நாயக்கா குற்றவாளியாகக் கண்டு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தார். மற்றவர்களுக்கெதிரான வழக்குகள் மீளப்பெறப்பட்டது.

Related:  Sri Lanka | Road to Dictatorship Paved With Three Triumphs - Kumar David / Colombo Telegraph


ஐ.நா.சபையின் தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையிலான ஒரு நிகழ்வாக அப்போதைய அரசினால் சர்வதேசங்களுக்குக் காட்டப்பட்டிருந்தது.

சுனில் ரத்நாயக்காவின் பொது மன்னிப்பு மூலம், ஐ.நா. சபையின் இணைப் பிரகடனத்தைத் தாம் நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்பதை கோதாபய அரசு நிரூபித்துள்ளது.

மிருசுவில் படுகொலையின்போது உயிரிழந்தவர்கள் விபரம், பின்வருமாறு:

  1. கதிரன் ஞானச்சந்திரன் (35),
  2. ஞானச்சந்திரன் சாந்தன்
  3. பாஸ்கர் ஞானபாஸ்கரன் (19)
  4. செல்லமுத்து தெஇய்வகுலசிஙகம் (31)
  5. வில்வராஜா பிரதீபன் (15)
  6. சின்னையா வில்வராஜா (41)
  7. நடேசு ஜெயச்சந்திரன் (21)
  8. வில்வராஜா பிரசாத் (5)

(நன்றி: தமிழ் கார்டியன், டெய்லி மிரர்-லங்கா)

Print Friendly, PDF & Email