மியன்மார் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. ஓங் சான் சூ சி, இதர தலைவர்கள் தடுப்புக் காவலில்?


மியன்மார் (முந்நாள் பர்மா) நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் அதன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவரான ஓங் சான் சூ சி கைதுசெய்யப்பட்டுள்ளாரெனெவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்கு இராணுவ ஆட்சியாளரினால் ஒரு வருடத்துக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என இராணூவத் தளபதி மின் ஓங் ஹ்ளெயிங் அறிவித்துள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஓங்க் சான் சூ சி யுடன் மேலும் பல அரசியல் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டுள்ளார்களென இராணுவத்துக்குச் சொந்தமான மியவாட்டி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. தேர்தலில் மோசடிகளைச் செய்தார்கள் என இவர்கள் மீது இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.

நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஓங் சான் சூ சி யின் கட்சி அமோக வெற்றியைப் பெற்றிருந்தது என்றும் இத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றிருந்தன என இராணுவம் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், இராணுவச் சதியொன்றுக்கான சாத்தியங்கள் உண்டெனக் கடந்த வாரம் வெளிநாட்டு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்திருந்தன என ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டிருந்தது.

இச் செய்தியைத் தொடர்ந்து அச் செய்தியில் உண்மை இல்லை என இராணுவம் மறுத்திருந்தது. ஆன்னலும் அடுத்த வாரம் கூடவிருந்த பாராளுமன்றத்தில் பங்குபற்றுவதற்காக உறுப்பினர்கள் கூடியிருந்த கட்டிடத்தை இவ்வார விடுமுறையின்போது இராணுவத்தினர் சுற்றி வளைத்து அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளார்கள் என அறியப்படுகிறது.அதே வேளை, மியன்மாரின் தொலைத் தொடர்புச் சாதனங்கள், இணையத் தொழிற்பாடு ஆகியன கடந்த சில நாட்களாகத் தடைப்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் அங்குள்ள உண்மையான நிலையை அறியமுடியாதுள்ளது எனத் தெரிவிக்கின்றன.

ஓங் சான் சூ சியும் இதர தலைவர்களும் தலைநகரிலுள்ள நேய்பியிடோ என்னுமிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

பர்மிய மக்களின் சுதந்திரம், ஜனநாயகம், அமைதி, அபிவிருத்தி ஆகியவற்றின் மீதான அபிலாட்சைகளுடன் ஐக்கிய அமெரிக்கா துணை நிற்கிறது எனவும், இராணுவம் உடனடியாக ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுத்துவிடவேண்டுமெனவும் அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

“மியன்மாரில் மேற்கொள்ளப்பட்டுவந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு விழுந்த பேரிடி” என ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குத்தெரெஸ் தெரிவித்துள்ளார்.