மியன்மாரில் இராணுவத்தினால் இரு தமிழர்கள் சுட்டுக் கொலை
மணிப்பூரைச் சேர்ந்த சேர்ந்த பி.மோகன் (27) மற்றும் எம்.ஐயனார் (28) ஆகிய இரு தமிழர்கள் மியன்மார் இராணுவத்தினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக மோறே தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது. போர்ச்சூழல் காரணமாக இந்தியாவின் அஸ்ஸாம் மாநில எல்லை மூடப்பட்ட நிலையில் இவ்விருவரும் மியன்மார் நகரமான ராமுவிற்குள் நுழைந்தார்கள் எனவும் அங்கு அவர்கள் இருவரும் எல்லைக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
செவ்வாய் (5) அன்று ராமுவில் கண்டெடுக்கப்பட்ட இருவரின் உடல்களிலும் – ஒருவரது நெற்றியிலும் மற்றவரது தலையில் கன்னப் பக்கமாகவும் – சூட்டுக் காயங்கள் இருந்தனவெனக் கூறப்படுகிறது. இருவரின் உடல்களை மீளவும் இந்தியாவுக்குக் கொண்டுவர அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இவ்விருவரது கொலைகளையும் கண்டித்து மணிப்பூர் நகரமான மோறேயில் இரண்டுநாள் கடையடைப்பு நடத்தப்பட்டது. மணிப்பூர் தலைநகர் இம்ஃபாலிலிருந்து 110 கி.மீ. தூரத்தில் இருக்கும் மோறே நகரில் சுமார் 3000 தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழருடன் மெயிற்றி, கூக்கி, பஞ்சாபி உடபடப் பல மொழி பேசுபவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.
இறந்த இருவரும் மோறேயில் ஆட்டோ சாரதிகளாகப் பணியாற்றுபவர்கள் எனவும், சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் எல்லையைக் கடந்து ராமுவுக்குள் சென்றிருந்தார்கள் எனவும் அங்கு அவர்கள் மியன்மார் இராணுவத்தின் துணைப்படை உறுப்பினர்களினால் நிறுத்தப்பட்டு அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என மோறே தமிழ்ச் சங்கச் செயலாளர் கே.பி.எம். மணியம் தெரிவித்தார்.
இந்திய-மியன்மார் எல்லை பொதுவாக இரு நாட்டவரும் விசா அனுமதியேதுமின்றி இரு பக்கமும் 16 கி.மீ. தூரம் சென்றுவருவதற்கு அனுமதியுண்டு. ஆனாலும் கோவிட் பெருந்தொற்று மற்றும் மியன்மார் இராணுவச் சதி ஆகிய காரணங்களினால் கடந்த சில வருடங்களாக இவ்வெல்லையினூடு மக்கள் பயணம் செய்வது குறைந்திருந்தது எனப்படுகிறது.
மியன்மார் இராணுவச் சதியைத் தொடர்ந்து பொது மக்கள் எதிர்ப்ணிகள் ஆயுதமேந்தி இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வருகின்றனர். குறிப்பாக இந்திய – மியன்மார் எல்லையில் இப் போராட்டாங்கள் அடிக்கடி நிகழ்வதால் இவ்வெல்லையில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தின் துணைக்குழுக்கள் காவல் புரிவதுண்டு.
இறந்தவர்களில் மோகன் என்பவர் ஜூன் 9 ம் திகதியே திருமணமாகியிருந்தார் எனவும் ஐயனாரும் திருமணம் முடித்து ஒரு வயதுக் குழந்தைக்குத் தந்தை எனவும் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.
மோறெயில் வாழும் தமிழர்கள் இரண்டு கட்டங்களாக அங்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தார்கள். முதலாவதாக, இரண்டாம் உலகப் போரின்போது யப்பானியரின் படையெடுப்புக்குப் பயந்து அப்போதைய பர்மாவில் வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் எல்லையைக் கடந்து மணிப்பூருக்குள் குடியேறினார்கள். இரண்டாவது கட்டம், 1960 களில் பர்மாவில் பர்மியர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையில் எழுந்த இனப் போரைத் தொடர்ந்து ஏற்பட்டது. பிரித்தானிய காலனி ஆட்சியின்போது பெரும்பாலான தமிழர்கள் பர்மாவிற்குப் பணி மற்றும் வியாபார நிமித்தம் சென்றிருந்தார்கள். பிரச்சினைகள் முடிந்ததும் பர்மாவுக்குத் திர்ம்பிச் செல்லும் நோக்குடன் இவர்கள் தற்காலிகமாக மோறேயில் வாழத் தொடங்கியிருந்தார்கள்.