மின் வாகனம்: ரயர்கள் விரைவாகத் தேய்வது ஏன்?
மாயமான்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் Audi SUV மின் வாகனம் ஒன்றைப் புதிதாக வாங்கியிருந்தார். வாங்கிய புதிதில் அதன் performance பற்றி மிகவும் சிலாகிப்பார். சுமார் ஒரு வருடம் கழித்து “காருக்கு இன்னும் ரயர்களை மாற்றவில்லையா?” என நான் கேட்டபோது அவருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. வழக்கமாக எரிபொருளில் இயங்கும் வாகனங்களில் ரயர்களுக்கு 100,000 கி.மீ. வரையில் தயாரிப்பாளர் உத்தரவாதம் கொடுப்பது வழக்கம். அநேகமான வாகனங்கள் சராசரியாக வருடமொன்றுக்கு 20,000 கி.மீ. ஓடுவது வழக்கமாகையால் வேறேதும் மெக்கானிக்கல் காரணங்கள் இல்லாவிட்டால் புதிய ரயர்கள் சுமார் 5 வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்க வேண்டும். நண்பர் அதெப்படித் தெரியும்? நான் ஏற்கெனவே ஒரு தடவை மாற்றிவிட்டேன் என்றார். அவர் மட்டுமல்ல பல மின் வாகன உரிமையாளர்களும் வெட்கத்துடன் ஒத்துக்கொள்ளும் விடயம் இது.
சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒருவர் தனது ரெஸ்லா வாகனம் பற்றித் திட்டி எழுதியிருந்த ஒரு பத்தி நண்பருடனான எனது உரையாடலை மீட்டுத் தந்தது. இதில் ரெஸ்லா வாகனத்தைத் தனிமைப்படுத்த வேண்டிய எந்தவித காழ்ப்புணர்வும் இல்லை எனினும் ரெஸ்லா தான் இப்போதைக்கு காய்க்கும் மரம்.
இப்பதிவில் அதன் உரிமையாளர் கூறியிருந்தது: “நான் ஒரு ரெஸ்லா மொடல் Y வாகனம் வைத்திருக்கிறேன். வருடத்துக்கு 20,000 மைல்களுக்கு உள்ளேயே நான் ஓடுவது வழக்கம். ஆனாலும் வருடத்துக்கு ஒரு தடவை நான் நான்கு ரயர்களையும் மாற்றவேண்டி இருக்கிறது. இந்த ரயர்கள் 75,000 மைல்கள் warranty உடன் வருகின்றன. எனது ரயர்களை விற்ற நிறுவனத்துடன் நான் warranty குறித்து விசாரித்த போது “உனது வாகனம் ரெஸ்லா மொடல் Y ஆகையால் warranty நிராகரிக்கப்பட்டுவிட்டது” என அந்நிறுவனம் கூறியதாக அப்பாவனையாளர் பொருமிக் கொண்டார்.
ரெஸ்லா உட்படப் பல மின் வாகன உரிமையாளர்கள் இப்படி விரைவான ரயர் தேய்வனவுக்கு உள்ளாகிறார்கள். ரயரின் அகலம். தெருக்களின் தரம், ஓட்டும் திறமை, வாகனத்தின் எடை போன்ற காரணங்கள் இத் தேய்வனவுக்குக் காரணமாக அமைந்தாலும் ரயர்கள் வேகமாகத் தேய்வதற்கு முதன்மையான காரணம் மின்வாகனங்களின் உருட்டு விசை (torque) தான்.
எரிபொருளில் இயங்கினாலென்ன மின்சாரத்தில் இயங்கினாலென்ன வாகனத் தயாரிப்பாளர்களும், சாரதிகளும் உச்சமாக நேசிக்கும் ஒரு விடயம் ‘எவ்வளவு விரைவாக ஒரு வாகனம் முன்னோக்கிச் செல்கிறது என்பதே. எத்தனை செக்கண்டுகளில் ஒரு வாகனம் பூச்சியத்திலிருந்து சராசரி வேகமான 60 கி.மீ/மணி யை எட்டுகிறது என்பது வாகனத் தயாரிப்பாளர்கள் பாவிக்கும் performance சுட்டி. பல இளைஞர்கள் / இளைஞிகள் சிவப்பு விளக்கில் நிற்கும் தமது வாகனம் ஏனையவற்றை விட முதலில் பாய்ந்து செல்ல வேண்டும் என நினைப்பதற்கு இணையானது இது. இந்த வேளையில் அவர்கள் ஆழமாக மிதிப்பது அக்சிலரேட்டர் எனப்படும் வேக முடுக்கியை. இது வரை மின்வாகனமும் எரிபொருள் வாகனமும் ஓரளவுக்கு சமம். முடுக்கியில் காலை வைத்ததும் என்ன நடைபெறுகிறது என்பதே மின் வாகனத்திற்கும் எரிபொருள் வாகனத்திற்குமிடையேயுள்ள வித்தியாசம்.
எரிபொருள் இயக்க வாகனங்களில் (ICE) எஞ்சினிலிருந்து புறப்படும் விசையை வாகனத்தின் நான்கு ரயர்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுப்பது அச்சு / poawertrain எனப்படும் மெக்கானிக்கல் உதிரிகள். சாரதி கியரைப் போடும்போது இவ்வச்சுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சில்லுகள் அச்சுகளுடன் நிரந்தரப் பிணைப்புக்குள்ளாகும்போது அச்சுககள் உருட்டு விசையை சில்லுகளுக்குக் கொடுக்கின்றன. ஒரு வாகனத்தின் வலுவை engine size (1லீட்டர் – 6 லீட்டர்) ஐக் கொண்டோ அல்லது எஞ்சின்களின் (குதிரை) வலுவைக் கொண்டோ (50Hp -1000Hp) கூறுவார்கள். பயணிகள் செல்லும் சிறிய வாகனங்களுக்கு குறைந்த குதிரை வலுவும் பாரவண்டிகள் (trucks) அதிக குதிரை வலுக்களும் இருப்பது வழக்கம். எஞ்சினில் ஆரம்பித்து சில்லுகளில் பிரயோகிக்கப்படும் இந்த விசை தான் உருட்டு விசை (torque) எனப்படுவது.
எரிபொருளில் இயங்கும் எஞ்சின்களில் இந்த உருட்டு விசை கியர்கள் எனப்படும் பற்சில்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சில்லுகளுக்கு பிரயோகிக்கப்படுகிறது. அதாவது நிலையாக நிற்கும் ஒரு வாகனம் (0 kM/h) இலிருந்து உருளத்தொடங்கி 60 kM/h வேகத்தில் ஓடும்வரை இப்பற்சில்லுகள் வேகத்தைப் படிப்படியாக அதிகரிக்கின்றன. இதனால் சாரதி விரும்பி வேக முடுக்கியை அழுத்தினாலும் இப்பற்சில்லுகள் தமது கடமையைத் தான் செய்கின்றன. இதனால் உருள ஆரம்பிக்கும்போது சில்லுகள் (ரயர்கள்) மீது அதீத உருட்டுவிசை பிரயோகிக்கப்படுவதில்லை. இதனால் ரயர்களின் தேய்வு மட்டுப்படுத்தப்படுகிறது.
மாறாக, மின் வாகனங்களில் எஞ்சினுக்கும் பதிலாக ஒரு மோட்டர் மட்டுமே இருக்கிறது. சுவிட்சைப் போட்டு ஓட்டத்திற்கான கட்டளையைக் கொடுக்கும்போது மோட்டருக்கு வழங்கப்படும் மின்சாரமே வேகத்தைத் தீர்மானிக்கிறது. எரிபொருள் வாகனத்தில் இருப்பது போல பல கியர்கள் இங்கு வேகத்தைக் கட்டுப்படுத்துவதில்லை. மாறாக ஒரு குறிக்கப்பட்ட (fixed ratio gear) வீதத்தில் மட்டுமே மோட்டாருக்கும் அச்சுக்கும் உருட்டு வீதம் பகிரப்படுகிறது. இதனால் தான் மின் வாகனங்களில் பல கியர்கள் இருப்பதில்லை. எனவே வேக முடுக்கியை விரைவாக அழுத்தினால் அதிகரிக்கப்படும் வேகம் நேரடியாகச் சில்லுகளுக்கே பகிரப்படுகிறது. எரிபொருள் வாகனங்களில் இருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட வேக அதிகரிப்பு இங்கு இல்லை. இதனால் நிலையாக நிற்கும் சில்லுகள் மீது சடுதியான உருட்டுவிசை பிரயோகிக்கப்படும்போது (uncontrolled torque) ரயர்கள் தான் இத் துன்பத்தைத் தாங்கவேண்டி ஏற்படுகிறது.
இக்காரணத்தினால் ரெஸ்லா உட்படப் பல மின்வாகன உரிமையாளர்கள் அதிக பட்சம் 40,000 மைல்கள் / 64,000 கி.மீ. ஓடியதும் ரயர்களை மாற்றுவதற்குத் தள்ளப்படுகிறார்கள். இதைக் கட்டுப்படுத்த ஒரே வழி அக்சிலரேட்டரை / வேக முடுக்கியை மெதுவாக அழுத்தி வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதுவே. அத்தோடு அடிக்கடி ரயர்களை முன் பின்னாக மாற்றிக் கொள்வதனாலும் தேய்வைக் குறைத்துக்கொள்ளலாம். வேகக் கட்டுப்பாடு, சந்திகளீல் திரும்பும்போது வேக முடுக்கியைச் சிக்கனமாகப் பாவிப்பது பலன் தர வாய்ப்புண்டு.
இனி வரும் காலங்களில் கியர்களுடனான மின்வாகனங்கள் பாவனைக்கு வரலாம். அதுவரை ஆழ்ந்த அனுதாபம். (Image Crdit:Photo by Nikola Tasic on Unsplash)
