Science & Technologyசிவதாசன்

மின்வாகனத்தின் எதிர்காலம் இருள்கிறதா?

எண்ணை நிறுவனங்களின் அசுரப்பிடியில் இருந்து இலான் மஸ்க் போன்றோர் விடுவித்த மின்வாகனத் தயாரிப்பு மீண்டும் இருண்ட காலத்திற்குள் தள்ளப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்தத் தடவை எண்ணை நிறுவனங்களல்ல என்பது மட்டும் சற்று ஆறுதல்.

எண்ணை நிறுவனங்களின் ஆதிக்கம் ஏறத்தாழ 150 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. “கடவுளே எனக்குக் காசைத் தந்தவர்” எனத் திமிரோடு கூறிய ஜோன் டி. றொக்கெஃபெல்லெர் தான் இதற்குக் காரணம். இவரது வழித்தோன்றல்களே இஸ்ரேலின் உருவாக்கத்தின் முன்னோடிகள். உலகின் பெரும்பாலான சமூக, பொருளாதார, கலாச்சாரப் பிரச்சினைகளுக்கு இவர்களே காரணமென்று இப்போதும் பலர் அடித்துச் சத்தியம் செய்வார்கள்.

1863 இல் ஜோன் டி. அமெரிக்காவிலுள்ள கிளீவ்லாந்து மாநிலத்தில் எண்ணை சுத்திகரிப்பு நிலையமொன்றை ஆரம்பித்தார். இது தொடங்கி சில தசாப்தங்களுக்குள் அமெரிக்காவிலுள்ள 90% மான பெற்றோலிய உற்பத்தி இவர் கைகளில் சென்றுவிட்டது. 1937 இல் அவர் இறக்கும்போது கடவுள் அவரை உலகின் அதி பணக்காரராக ஆக்கிவிட்டிருந்தார்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அறம் எப்போதுமே குறுக்கே நிற்கும் என்பதை இவரும் இவர் சார்ந்த குலமும் தீர்க்கமாக நம்புகிறது. இன்று காசாவில் நடைபெறும் இனவழிப்பை இவரது குலம் ஆடிப்பாடி வரவேற்கிறார்களென்றால் ஜோன் டி. போன்றவர்களை இலகுவாக எடைபோட்டுக் கொள்ளலாம்.

கிளீவ்லாந்தில் ஜோன் டி. ஆரம்பித்த ஸ்ராண்டர்ட் ஒயில் என்ற நிறுவனம் முதல் செய்த காரியம் அம்மாநிலத்தில் வெற்றிகரமாக இயங்கிவந்த மின்சார ட்றாம் வண்டி நிறுவனத்தை வாங்கியது மட்டுமல்ல அதை முற்றாக நிர்மூலம் செய்ததும். அமெரிக்கா முழுவதும் மக்கள் பாவித்த பொதுப்போக்குவரத்துச் சாதனம் அது ஒன்றுதான். ட்றாம் வண்டிகளைத் தெருக்களிலிருந்து அகற்றிவிட்டு அவற்றை மாற்றீடு செய்தது பெற்றோலியம் எண்ணையில் இயங்கும் வாகனங்கள். ஃபோர்ட் வாகனத் தயாரிப்பாளரும் ஜோன் டி. யும் இதற்காக உடன்பாடொன்றைச் செய்துகொண்டார்கள் என்பதும் ஒரு கதை. இவர்களது அழுங்குப்பிடிகளில் இருக்கும் அரசியல்வாதிகள் இவர்களின் கனவுகள் மெய்ப்பட மாடுகளாய் உழைத்தார்கள். இப்போது அது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இன்றும் அமெரிக்காவின் பல கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சாதனங்களோ அல்லது மக்கள் நடந்து செல்வதற்கான நடைபாதைகளோ இல்லாமல் இருப்பதற்கு ஜோன் டி. போன்றோரே காரணம்.

இதே வேளை இதே காலகட்டத்தில் யூகோஸ்லேவியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தவர் நிக்கொலா ரெஸ்லா என்றொரு மேதாவி. இவர்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனெறேட்டரைக் கண்டுபிடித்தவர். அவரது முதலாவது கண்டுபிடிப்பான ஜெனெறேட்டர் இப்போதும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கருகில் இருக்கிறது. இந்த மேதாவியின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றிலொன்று கம்பியில்லாமல் மின்சாரத்தை அனுப்புவது. மடிசன் சதுக்கத்தில் அவர் இதை நிரூபித்துக்காட்டியபோது அவரது பங்காளியான எடிசன் சொன்னது “கம்பிக்குள்ளால் போகாத மின்சாரத்தால் நான் எப்படிப் பணம் பண்ண முடியும்?”. அதாவது மீட்டருக்குள்ளால் அனுப்பும் மின்சாரத்திற்கே பணம் அறவிடலாம். அத்தோடு ரெஸ்லாவின் ஆய்வுகூடம் எரிக்கப்பட்டது. தெருவில் பிச்சைக்காரராக விடப்பட்ட ரெஸ்லா ஈற்றில் மரணமானார். இப்படியாக அறத்தை மீறிய முதலாளிகளின் வசப்பட்டு இன்றுவரை அல்லல் படுகிறது மனித இனம்.

இதற்குப் பின்னர் இன்னுமொரு பொறியியலாளர் ரெஸ்லாவின் கம்பியில்லா மின்பரிவர்த்தனையை ரெலிவிசன் முன்னால் நிகழ்த்திக்காட்ட முயற்சித்து ஓரிரு வாரங்களில் காணாமலாக்கப்பட்டார். எண்ணை நிறுவனங்களின் பைகளில் கைவைக்க முயன்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை உங்களில் பலரைப் போல “ஒரு conspiracy theory என நானும் ஒருகாலத்தில் நம்பியவன் தான். இப்போது அந்த நம்பிக்கை போய்விட்டது.

நிக்கோல ரெஸ்லா

எண்ணைப் பாவனையால் சூழல் மாசுபடுகிறது என்பது பல தசாப்தங்களுக்கு முன்னரே நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆய்வுக்கு மேல் ஆய்வுகளை செய்து விஞ்ஞானிகள் தரவுகளை மேசைகளில் போட்டார்கள். மனித குலம் எதிர்நோக்கும் துயரங்களையும் அழிவுகளையும் அவர்கள் அரசியல்வாதிகளிடம் சமர்ப்பித்தார்கள். ஆனால் அரசியல்வாதிகளோ ஜோன் டி. போன்றோரின் வாசஸ்தலங்களில் தவழ்ந்துகொண்டிருந்தார்கள். காற்றாடி, நீர் வீழ்ச்சி, சூரிய ஒளித்தகடு போன்ற மாற்றுவழிச் சக்தி உருவாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டபோது அவற்றின் வினைத்திறன் குறைவு என்று பொய்யான ஆராய்ச்சிகளைக் காட்டி அவற்றைப் புறம்தள்ளினார்கள். வெற்றிகரமாக இயங்க ஆரம்பித்த மாற்றுவழி சக்தி உருவாக்க நிறுவனங்களை இவ்வெண்ணை நிறுவனங்கள் அதிக விலைகொடுத்து வாங்கிக் கிடப்பில் போட்டார்கள். இதனால் எண்ணை அரசு நெடுங்காலமாக கோலோச்சியது, எலான் மஸ்க் என்றொரு புரட்சியாளர் வரும்வரை.

எலான் மஸ்க் இன்னுமொரு மேதாவி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் ஒரு தென்னாபிரிக்க வெள்ளையர் என்பதோடு பண பலமும் உள்ளவர் என்பதால் எண்ணைக் காளைகளை அடக்கக்கூடிய வல்லமை அவரிடம் இருந்தது. இக்காலத்தில் விஞ்ஞானிகள் எதிர்வுகூறிய இயற்கை அழிவுகளும் உலகை உலுக்க ஆரபிக்க அரசியல்வாதிகளும் எண்ணை அரக்கர்கர்களின் பிடிகளிலிருந்து சிறிது சிறிதாக விடுபடத் தொடங்கினார்கள். எலான் மஸ்கின் மின் வாகனம் தெருவுக்கு வந்தது மட்டுமல்லாது சிறிது சிறிதாக எண்ணை வாகனங்களைத் தெருவோரத்திற்கு ஒதுக்கியது. விஞ்ஞானிகளுக்கும் சந்தோஷம். உலகின் பல மூத்த வாகன உற்பத்தியாளர்களும் மின்வாகனத் தயாரிப்பில் குதித்தார்கள். ஆனாலும் இவர்கள் எதிர்பார்த்தது போல பயணம் இலகுவாக இருக்கவில்லை. சிலர் மீண்டும் எண்ணை வாகனங்களுக்கோ அல்லது கலப்பு (hybrid) வாகனங்களுக்கோ போகப் புறப்பட்டார்கள். இவர்களின் சந்தேகத்தை உறுதி செய்யுமாற் போல் இன்னுமொரு மேதாவி வந்து குதித்திருக்கிறார்.

*****

கடந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு ஒருவர் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அவரை உங்களில் பலருகும் தெரிய வாய்ப்பிருக்கிறது. Mr.Bean என்ற பெயரில் வாயைத் திறவாமலேயே நகைச்சுவையால் மகிழ்விக்கும் ஆங்கிலேய நடிகர் றோவன் அற்கின்சன். இவர் ஒரு எலெக்ட்றிக்கல் எஞ்சினியர். (இவருக்கும் இலங்கைக்கும் மிகுந்த தொடர்பிருக்கிறது என்பது வேறு). ‘தி கார்டியனுக்கு’ அவர் எழுதிய கட்டுரையில் “மின் வாகனம் ஒரு ஆன்மா இல்லாதது. அதன் பாவனை பற்றி மக்கள் வைத்திருக்கும் கருத்து தப்பானது. அது நாம் எதிர்ப்பார்ப்பது போல் சூழல் மாசடைவதைத் தவிர்க்கும் என எண்ண வேண்டாம். சாதாரண எண்ணை வாகனங்களை விட அது 70% மேலதிக தீமைகளை விளைவிக்ககூடியது” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். இதனால் சூழலியளார்கள் மத்தியில் அவருக்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இடதுசாரிக் கனவுலக அரசியல்வாதிகள் அவரைப் பிடித்துத் தின்பதற்குக் காத்திருக்கிறார்கள். ஊடகக்காரரின் கேள்விகளுக்கு அவர் Mr.Bean ஆக இருந்து மெளனம் காத்து வருகிறார்.

****

எலான் மஸ்கின் மின்வாகன வெற்றிக்குப் பின்னாலும் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால் அவர் ஒரு நவீன ஜோன் டி. றொக்கெஃபெல்லெர் தான். ஆனாலும் அவரின் பின்னால் குலமோ கோத்திரமோ இல்லை. அவர் ஒரு தனி மனிதன். பணமே அவரது உறவு. அவரது சந்தைப்படுத்தும் திறனால் அவர் தன்மீது வீசப்படும் அழுக்குகளை அகற்றுகிறார். ஆனாலும் சில ஒட்டிக்கொண்டுவிட்டன.

அவரது செல்லப்பிள்ளையான ரெஸ்லா மின்வாகனம் ஏறத்தாழ ஒரு spoiled child தான். பல வாகனங்கள் பாதை தப்பி மோதி எரியுண்டிருக்கின்றன. பலவற்றில் மின்கலம் தீப்பற்றி வாகனம் முழுவதையுமே கபளீகரம் செய்திருக்கிறது. விலையோ பன்மடங்கு. இப்பிரச்சினைகளையெல்லாம் மறைப்பதற்காக அவர் பல உத்திகளைக் கையாள்கிறார் என்கிறார்கள். இதற்காகவே அவர் X ஐ (ருவிட்டர்) வாங்கினார் என்கிறார்கள். பேச்சுச் சுதந்திரத்தின் காவலன் என்ற தற்பெருமையை அவரே சுமந்து திரிகிறார். சூழலியலாளர்களோ விஞ்ஞானிகளோ கூறுமளவுக்கு எந்தவொரு மின்வாகனமும் சூழலைப் பாதுகாக்கப்போவதில்லை என்பது இதையெல்லாம் விட மர்மமானது . அற்கின்சன் சொல்வதைப்போல் எண்ணை வாகனங்களை விட மின்வாகனம் 70% மோசாமானது போலவே தெரிகிறது. காரணங்களில் சில:

மின்வாகனங்களில் பாவிக்கப்படும் மின்கலங்களின் பிரதான மூலப்பொருள் லிதியம் எனப்படும் உலோகம். இதர உலோகங்களைப் போலவே லிதியம் உலோகமும் சுரங்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. பாறைகள், தரைகள், காடுகள், நீர்நிலைகள் அழிக்கப்படுவதன் மூலமே இது சாத்தியமாகிறது. மின்கலத்திற்குள் அது புகும்வரை அதற்கான செலவும், ஏற்படும் ஸுழல் பாதிப்பும் எண்ணை வாகனங்களினால் ஏற்படும் செலவையும் சூழல் பாதிப்பையும்விட 70 மடங்கு அதிகம் என அற்கின்சன் கூறுகிறார். அவர் ஒரு பொறியியலாளர் மாத்திரமல்ல மிக நீண்ட கால மின்வாகனப் பாவனையாளரும்கூட. இதனால் அவர் கூற்றை மக்கள் இலகுவாக நம்புகிறார்கள். லித்திய சேர்ப்பிற்காக தோண்டப்படும் நிலமும் அதன் சூழலும் உயிரினங்களின் நிரந்தர அழிவிற்குக் காரணம் எனப்படுகிறது. லித்தியத்தைப் பிரித்தெடுக்க அவர்கள் உப்புக்களம் போன்று பெரிய நீர்நிலைகளைப் பாவிக்கிறார்கள். இதனால் நீர் மாசடைகிறது. லிதியத்தைத் தோண்டி எடுக்கப் பாவிக்கும் இயந்திரங்கள் பாரிய சக்தி விரயத்திற்கும் காபனீரொட்சைட் உருவாக்கத்திற்கும் காரணமாகிறது. ஒட்டு மொத்தத்தில் இதற்கான செலவு, விரயம், சூழல் பாதிப்பு ஆகியன மின்வாகனத்தினால் கிடைக்கும் நன்மைகளை விட அதிகம். உதாரணத்திற்கு: ஒரு விறகுவெட்டி காடுகளில் மரங்களை வெட்டி விற்று மாதம் ரூ.5000 சம்பாதிக்கிறாரென வைத்துக்கொள்வோம். அவர் காடுகளை அழிப்பதாக சூழலியலாளர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதைச் சமரசம் செய்யவென ஒரு தனவந்தர் வருகிறார். “உனக்கு மாதம் 10,000 ரூபா தந்தால் மரங்களை வெட்டுவதை நிறுத்துவாயா?” எனக் கேட்கிறார். விறகுவெட்டிக்கு இலாபம் எனவே அவர் உடன்படுகிறார். ஆனால் 10,000 ரூபாக்களைக் கொடுத்த பிரமுகர் கடற்கரையில் மண்ணை அள்ளி விற்றுச் சம்பாதிப்பவர். சூழலியலாளர் கவனம் இதுவரை அவர் மீது திரும்பவில்லை. லித்தியத்தின் கதையும் இப்படித்தான். தொடரும்) (Image Credit:Photo by Precious Madubuike on Unsplash)