மின்னிணைப்பு இல்லாமலேயே மின்னேற்றம் செய்யக்கூடிய மின் வாகனம் – சீனா தயாரிக்கிறது!

மின்னிணைப்பு இல்லாமலேயே மின்னேற்றம் செய்யக்கூடிய மின் வாகனம் - சீனா தயாரிக்கிறது!

ஒரே மின்னேற்றத்தில் 615 கி.மீ. (382 மைல்கள்) ஓடக்கூடியது

இன்னும் சில வருடங்களில் அரேபியர்களைப் பிச்சை எடுக்கவைக்குமளவுக்கு உலகில் மின் வாகனத் தயாரிப்பு முன்னேற்றம் கண்டு வருகிறது. 20,000 பாகங்களைச் சுமந்துகொண்டு அதில் எம்மையும் ஏற்றித் திரிந்த எரிபொருள் வாகனங்கள் இனி ஓய்வுபெறப் போகின்றன. வெறும் 20 பாகங்களோடு ஓடும் மின்வாகங்களின் சகாப்தம் இது. யாழ்ப்பாணத்தின் குச்சொழுங்கையில் இருக்குமொரு தகரக்கடை ஒரு மின்வாகனத் தயாரிப்பு நிலையமாக மாறினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அவ்வளவு தூரம் எளிமையான தயாரிப்பாக வந்துவிட்டது மின்வாகனம்.

சீனர் ‘கொப்பியடிப்பதில்’ வல்லவர் என்பதிலிருந்து முன்னேறி இப்போது ‘கொப்பி றைட்’ உரிமையாளர்களாக மாறி வருகின்றனர். அவர்களது சிஜிஜி L7 (Zhijiji L7) மாடல் மின்வாகனம் பல புதுமைகளைக் கொண்டு வெளிவருகின்றது. பார்வையில் அழகாககவும் இளைய தலைமுறையின் கனவு வாகனமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ் வாகனத் தயாரிப்பின் பின்னணியில் சீனாவின் இலான் மஸ்க் – அவர் தான் அலிபாபாவின் ஒரே திருடரான ஜாக் மா – இருக்கிறார். அவருடைய நிறுவனம் தான் இதில் பெரும் முதலீட்டைச் செய்கிறது.

93 kWh மின்வலுவை வழங்கவல்ல மின்கலத்தைக் கொண்டு இயங்கும் 540 குதிரைவலுக் கொண்ட, சிஜிஜி L7, மணிக்கு 60 கி.மீ. வேகத்தை 3.9 செக்கண்டுகளில் எட்டுகிறது. அத்தோடு ஒரே மின்னேற்றத்தில் 615 கி.மீ. (382 மைல்கள்) தூரத்தைக் கடக்ககூடியது. அதே வேளை, இதுவரை காலமும் ஏனைய மின் வாகனங்கள், மின்வலு தீர்ந்ததும் அதற்கேயுரிய தனித் தன்மையான மின்னிணைப்பில் கொழுவி மின்னேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் சிஜிஜி மின்னிணைப்பு எதுவும் இல்லாமலேயே (wireless charging) மின்னேற்றப்படக் கூடியது. அதற்கான மின்னனுப்பிகளை (transmitters) வீடுகளிலோ அல்லது மின்னேற்றும் நிலையங்களிலோ (charging stations) பொருத்தியிருக்க வேண்டும்.

தற்போது பாவனையிலிருக்கும் மின்வாகனங்களின் பெரிய பிரச்சினை மின்கலம் (battery), மின்னேற்றம் (charging) ஆகியன. சொல்லப்பட்ட தூரத்துக்கு செல்லுமா அல்லது இடையில், மின்னேற்ற நிலையங்கள் இல்லாத இடங்களில் நின்றுவிடுமா என்நும் விடயங்கள் மக்களிடம் இன்னும் தயக்கத்தை ஏற்படுத்துகின்றன. காரணம் மின்வாகனங்களில் ஒரு குணாம்சம் பிரேக் பிடிக்கும்போது அவற்றின் மின்கலங்கள் மின்னேற்றம் பெறுகின்றன(regenerative braking) . அதனால் உள்ளூர் ஓட்டத்துக்கு அவை பரவாயில்லை. ஆனால் பெருந்தெருவில் பிரேக் பிடிக்காமல் ஒரேயடியாக ஓடும்போது அது மின்கலத்திலுள்ள மின்வலுவைப் பாவித்தே ஓடும். வாகனம் புதிதாக இருக்கும்போது தயாரிப்பாளர் குறிப்பிட்ட தூரத்துக்கு அது உங்களைக் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால்காலம் போகப்போக மின்கலத்தின் மின்வலுவின் கொள்ளளவு குறைந்துகொண்டு போகும். இதை நீங்கள் உங்கள் கைத்தொலைபேசியில் அனுபவப்பட்டிருப்பீர்கள். எனவே தயாரிப்பாளரின் வாக்குறுதிகளை இவ்விடயத்தில் நம்ப முடியாது.

இருப்பினும் அஞ்சற்க!. புதிய வழிகளில் அதிக கொள்ளளவைத் தரவல்ல மின்கலங்களைத் தயாரிப்பதில் விஞ்ஞானிகளும் முதலீட்டாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு உழைத்து வருகிறார்கள். ரெஸ்லாவின் முதலாளி மஸ்க்கும் பெருந்தொகையான பணத்தை இதில் கொட்டி வருகிறார். தற்போது பாவனையிலுள்ள லிதியம்-அயன் மின்கலத்தை விட அதைக வலுவைக் கொண்ட solid state மின்கலங்கள் சந்தைக்கு வரத் தொடங்கிவிட்டன.

சிஜிஜி L7 வாகனத்தை SAIC Zhangjiang Hi-Tech மற்றும் Alibaba Group இணைந்து தயாரிக்கின்றன. இப்போது இவ்வாகன மின்கலத்தின் கொள்ளளவு 93kWh ஆகவிருந்தாலும் விரைவில் அதை 118kWh ஆக உயர்த்தும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அது நிறைவேறும் பட்சத்தில் இவ் வாகனம் 1000 கி.மீ. (621 மைல்) ஓடுமென எதிர்பர்க்கப்படுகிறது.