Science & Technology

மின்சாரம்: யப்பானின் புதிய தொழில்நுட்பம்

20 அணு மின்னுலைகளுக்குச் சமமான மின்சாரத்தைத் தரும் ஒளித்தகடுகள்

2011 இல் யப்பானில் ஏற்பட்ட மிக மோசமான பூகம்பத்தைத் தொடர்ந்து ஃபூக்கிஷீமா அணு மின்னிலையத்தில் ஏற்பட்ட விபத்திலிருந்து யப்பான் இன்னும் முற்றாக விடுபடவில்லை. ஆனாலும் இவ்விபத்து முற்றிலும் புதிய, பாதுகாப்பான மின்பிறப்பாக்க வழிமுறைகளைத் தேடும் ஆராய்ச்சியை நோக்கி யப்பானை முடுக்கிவிட்டது. விளைவு, புதிய, வினைத்திறன் மிக்க, எளிய சூரிய ஒளித்தகடுகளை அது உருவாக்கியிருக்கிறது. 20 அணு உலைகளின் வினைத்திறனை மீறுமளவுக்கு இப்புதிய ஒளித்தகடுகள் மின்சாரத்தை வழங்கவல்லன என அது கூறுகிறது.

பெறோஸ்கைட் (perovskite) என்பது ஒரு செயற்கைக் கனிமம். பளிங்கு வடிவத்தில் உருவாக்கப்படும் இக்கனிமம் நிறைகுறைந்ததும், இலகுவில் வளையக்கூடியதும் அதேவேளை, தற்போது ஒளித்தகடுகள் செய்யபப்டும் மூலப்பொருளான சிலிக்கோனை விட மலிவானதுமாகும். அதை விட முக்கியமானது சிலிக்கோன் ஒளித்தகடுகளின் 29% வினைத்திறனைவிட அதைகமானது (43%). வினைத்திறன் என்பது 100 வீத ஒளிச்சக்தியைப் பெறும் ஒரு தகடு அதை 29% மின்சாரமாகச் சக்தி மாற்றம் செய்வது. அந்த வகையில் இப்புதிய கண்டுபிடிப்பு 100 வீத ஓளியை 43% மின்சாரமாக மாற்றுகிறது.


வினைத்திறனை விடவும் இங்குள்ள முக்கியமான அம்சங்கள்: ஒன்ற்: இவற்றை எந்தவொரு கரடு முரடான இடத்திலும் வளைத்து நெளித்து ஒட்டிக் கொள்ளலாம். இரண்டு: இவை மிகவும் மலிவானவை.

இந்த பெறோவ்ஸ்கைட் கனிமத் தயாரிப்பிற்கு அத்தியாவசியமான மூலகம் அயோடின். யப்பானில் அயோடின் மிதமிச்சமாகக் கிடைக்கிறது. எனவே 2040 மட்டில் யப்பானில் 20 கிகாவட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியுமெனவும் 2050 இல் மனித உற்பத்திகளினால் வெளியேறும் கரியமில வாயுவின் வெளியேற்றம் முற்றாக நிறுத்தப்படும் எனவும் அது எதிர்பார்க்கிறது. தற்போது ஒரு அணு மின்னுலை ஒரு கிகாவட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது, அதாவது வருடமொன்றுக்கு 900,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வல்லது.

யப்பானிய அரசுடன் இணைந்து செகிசூயி கெமிக்கல் (Sekisui Chemical) என்ற நிறுவனம் இப்புதிய தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளது. அடுத்த 10 வருடங்களுக்குள் இவற்றை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய அது திட்டமிட்டுள்ளது. அதி செறிவான மக்களைக் கொண்ட யப்பானில் 2104 வரை 1.9% மின்சாரம் மட்டுமே ஒளித்தகடுகள் மூலம் பெறப்பட்டது. அணு உலை விபத்தைத் தொடர்ந்து இப்போது 10% த்துக்கு அது உயர்ந்திருக்கிறது. இதற்கு இன்னுமொரு காரணம் இடமின்மை. தற்போதைய (சிலிக்கன்) ஒளித்தகடுகள் தட்டையாக இருப்பதனால் அதற்கான இடம் அதிகளவு தேவைப்படுகிறது. புதிய ஒளித்தகடுகளுக்கு இப்படியான கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் எந்த வளைவான தட்டையற்ற கூரைகளிலும் இவற்றைப் பொருத்திக்கொள்ளலாம். (Image Credit: Photo by American Public Power Association on Unsplash)