World

மினியாபொலிஸ் | கொலையாளியான பொலிஸ்காரரின் மனைவி விவாகரத்துக் கோருகிறார்!

மினியாபொலிஸ் நகரத்தில் வெள்ளை இனப் பொலிசார் ஒருவர் கறுப்பினத்தவர் ஒருவரைக் கைதுசெய்யும்போது கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துபோனதைத் தொடர்ந்து கடந்த மூந்று நாட்களாகப் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று மினியாபொலிஸ் நகர பொலிஸ் நிலையம் தாக்கி எரியூட்டப்பட்டிருந்தது.

ஃபுளோயிட் கைதாகும்போது
ஃபுளோயிட் (இடது) , ஷோவின் காலில்
மிதிபட்டிருக்கும் ஃபுளோயிட் ( வலது)

கைது செய்யும்போது மரணமடைந்த ஜோர்ஜ் ஃபுளோயிட் தொடர்பான காணொளி நாடெங்கும் ஏற்படுத்திவரும் எதிர்ப்பலைகளின் காரணமாக ஃபுளோயிட்டைக் கைது செய்த பொலிஸ்காரரான டெறெக் ஷோவின் மீது மூன்றாம் நிலைக் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இன் நிலையில் பொலிஸ்காரர் டெறெக் ஷோவினின் மனைவி கெலி, அவரது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக ஃபொக்ஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

“திரு ஃபுளோயிட் அவர்களின் மரணத்தினால் கெலி ஷோவின் மனமுடைந்துபோயுள்ளார். ஃபுளோயிட்டின் மரணத்தால் துன்புறும் அவரது குடும்பம், அவரை நேசிப்பவர்கள், அவரது இழப்பையுற்றுக் க்வலைகொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் தனது ஆழ்ந்த அஞ்சலியை அவர் தெரிவிக்கிறார்” என கெலி ஷோவினின் வழக்கறிஞர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது டெறெக் ஷோவினுடன் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ்காரர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை பதியப்படவில்லை.



அமெரிக்க விடுமுறை நாளான மெமோரியல் டே அன்று, கோர்ஜ் ஃபுளோயிட் போலி ஆவணம் தயாரித்தாரெந்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார். இன்நிகழ்வின்போது கைது செய்த பொலிஸ் அதிகாரியான டெறெக் ஷோவின் ஃபுளோயிட்டின் கழுத்தைத் தனது முழங்காலிலால் நிலத்தோடு வைத்து மிதித்துக்கொண்டிருப்பதும் அப்போது தன்னால் சுவாசிக்க முடியவில்லை என ஃபுளோயிட் கெஞ்சுவதும் காணொளியில் பதிவாகியிருந்தது. இச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் அவரை விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் 9 நிமிடங்களுக்கு மேல் ஷோவின் தன் பிடிக்குள் மரணமடைந்தவரை வைத்திருந்தார்.

அமெரிக்காவில் பொலிஸ் பயிற்சியின்போது இம் முறை கற்பிக்கப்படுகிறது. அதே வேளை இதே போன்ற கைதுகளின்போது முன்னரும் வேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொலிஸ்கார வெள்ளை இனத்தவராகவும், இறப்பவர்கள் கறுப்பினத்தவராகவுமே இருக்கிறார்கள். இப்படியான சம்பவங்களில் வெள்ளை இனப் பொலிசார் குற்றவாளிகளாகக் காணப்படுவது அரிது.

இச் சம்பவம் அமெரிக்காவின் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. சில வன்முறைகளாக வெடித்துள்ளன. கடைகள் உடைக்கப்பட்டுப் பொருட்கள் சூறையாடப்பட்டுமுள்ளன. “looting நிற்காவிட்டால் shooting ஆரம்பிக்கும் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.