WorldWorld History

மிக்கெயில் கோர்பச்சேவ் 1931-2022

மக்களிடம் ஒழுக்கத்தையும், பொறுப்புணர்வையும் கொண்டுவர நான் என்னாலான முயற்சிகளை மேற்கொண்டேன். அது எனது சித்தாந்த விருப்பு. ஆட்சியாளரின் அதிகார்ப் பசியையும், அதைகாரத் திமிரையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இருந்தது. சில விடயங்களை என்னால் சாதிக்க முடியாமல் போய்விட்டது ஆனாலும் எனது அணுகுமுறையில் தவறிருக்கிறதென நான் ஒருபோதும் நினைக்கவில்லை

மிக்கெயில் கோர்பச்சேவ்

இரு துருவ ஒழுங்கிலிருந்து உலகை மாற்றியவரும், சோவியத் குடியரசைத் தகர்த்தவரெனவும் உலக மக்களால் புகழப்படுபரும் அதே வேளை இகழப்படுபவருமான முன்னாள் சோவியத் தலைவர் மிக்கெயில் கோர்பச்சேவ் அவரது 91 ஆவது வயதில் மொஸ்கோவில் காலமானார். அவர் நீண்டகாலமாகச் சுகவீனமுற்றிருந்ததாகவும் கோவிட்-19 நோய்த்தொற்றின் ஆரம்ப காலத்திலிருந்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும் கூறப்படுகிறது.

வாழ்க்கை

1931 இல் தென் இரஸ்யாவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கோர்பச்சேவ் தனது பதின்ம வயதுகளில் கூட்டுப் பண்ணைகளில் பணி புரிந்தார். லோமனோசோவ் மொஸ்கோ பல்கலைக்கழககத்தில் சட்டக் கல்வி பயின்ற காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 1985 இல் அவர் சோயத் குடியரசின் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் பொதுச்செயலாளாராக நியமிக்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலத்தில் சோவியத் குடியரசின் நிலைகுலைந்து போயிருந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும், ஊழலை ஒழிப்பதற்காகவும், ஊதிப்பெருத்திருந்த பாதுகாப்புச் செலவீனத்தைக் குறைப்பதற்காகவும் நாட்டை நவீனமயப்படுத்துவதற்காகவும் அவசர மீள்கட்டுமான முயற்சியொன்றை முடுக்கிவிட்டார். ‘பெரெய்ஸ்ட்றோக்கா’ (perestroika) என அழைக்கப்பட்ட இத் திட்டம் 1986 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முயற்சியின்போது அமைச்சுகளும் அரச கட்டுப்பாட்டு நிறுவனங்களும் சுதந்திரமாக இயங்கக்கூடிய் நிலையும் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் போல ‘சுதந்திர சந்தை’யை அறிமுகப்படுத்தலும் உருவாகின. விளாடிமிர் லெனினின் 1920 ‘புதிய பொருளாதாரத் திட்டத்திற்குப்’ பிறகு சோவியத் குடியரசில் கொண்டுவரப்பட்ட பொருளாதார மாற்றம் இதுவாகவே இருந்தது.

இதைவிட, கோர்பச்சேவ் இன்னுமொரு முக்கியமான மாற்றத்தையும் சோவியத் குடியரசு ஆட்சியில் அறிமுகப்படுத்தினார். ‘கிளாஸ்நொஸ்ட்’ (glasnost) எனப்படும் இத்திட்டம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக் காலத்தில் இருந்த இருட்டு ஆட்சியைத் தவிர்த்து மக்களுக்கு சகல நடவடிக்கைகளையும் வெளிப்படையாக்கினார். பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஜனாதிபதி ஆட்சி முறைமையை மாற்றி மக்கள் பிரதிநிதிகள் சபை மூறைமையிலான ஆட்சிக்கு வழி செய்தார். 2,250 அங்கத்தவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல்கள் மார்ச் 15, 1990 இல் நடைபெற்றது. அதன் முதல் தலைவராக கோபர்ச்சேவ் தெரிவானார்.

றொணால்ட்றேகனுடன் மிக்கெயில் கோர்பச்சேவ் – Picture Credit: Sputnik

ஆப்கானிஸ்தான்

கோர்பச்சேவ் ஆட்சியின் முதல் வெளிநாட்டுக் கொள்கையிலான மாற்றம் ஆப்கானிஸ்தானில் ஆரம்பமாகியது. இதனால் மேற்கு நாடுகளுடனான உறவு மேலும் முன்னேற்றமடைந்தது. 1986 இல் ஆப்கானிஸ்தனிலிருந்து சோவியத் படைகள் வெளியேற ஆரம்பித்தன. ஆப்கானிஸ்தானில் மட்டும் 15,000 சோவியத் படைகள் உயிரிழந்திருந்தனர்.

கோர்பச்சேவின் வெளிநாட்டுக் கொள்கை மாற்றங்கள் படிப்படியாக அமெரிக்காவுடனான அதன் நெருக்கத்தை அதிகரித்தது. ஆயுதக் குறைப்பு, அணுவாயுத தவிர்ப்பு, அணுவாயுத பரீட்சை நிறுத்தம் என்ற பல நடவடிக்கைகள நடைமுறைப்படுத்தப்பட்டன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகள் மேம்படுத்தப்பட்டன. அவை சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டன. 1989 இல் பல கம்யூனிஸ்ட் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. 1990 இல் ஜேர்மன் சுவர் தகர்க்கப்பட்டு கிழக்கு மேற்கு ஜேர்மனிகள் மீண்டும் இணைந்து கொண்டன. இம்மாற்றங்களுக்குக் காரணமானவர் என்பதற்காக கோர்பச்சேவிற்கு 1990 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சோவியத் குடியரசின் உடைவு

கோர்பச்சேவின் ஜனநாயகமயமாக்கல் காரணமாக சோவியத் குடியரசின் 15 குடியரசுகளில் மக்களிடையே தேசிய உணர்வுகள் முன்னெடுத்தன. ரஸ்யாவுக்கு எதிரான சுதந்திரப் போராட்டங்கள் இக் குடியரசுகளில் முளைத்தன. அவற்றைக் கட்டுப்படுத்த அரசு படைகளைப் பாவித்தது. இதனால் மக்கள் போராட்டங்கள் மேலும் பலம் கொண்டன. இக்கொந்தளிப்புகளை அடக்க புதிய கூட்டாட்சி ஒன்றுக்கான ஒப்பந்தத்தை உருவாக்க கோர்பச்சேவ் முயன்றார். ஆனால் இதை எதிர்த்த சோவியத் குடியரசின் உயர் அதைகாரிகள் கோர்பச்சேவைப் பதவியிலிருந்து நீக்குவதற்காகச் சதியொன்றை முன்னெடுத்தார்கள். இச் சதி தோல்வி கண்டாலும் சோவியத் குடியரசின் கம்யூனிஸ் கட்சியின் மத்திய குழுவைக் கலைத்ததுடன் அனைத்து கட்சித் திணைக்களங்களையும் அரச கட்டுமானங்களையும் கோர்பச்சேவ் கலைத்து விடுவதற்கு இது காரணமாக அமைந்தது. ஒவ்வொரு குடியரசும் அடுத்தடுத்து தமது சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தின. இத்தோடு சோவியத் குடியரசின் இருப்பு முடிவுக்கு வந்தது.

1991 இல் ரஸ்ய, யூக்கிரெய்ன் மற்றும் பெலாருஸ் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் பெலருஸ்யாவில் சந்தித்து ‘பெலவேசா’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். சோவியத் குடியரசு உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது என்பதை இவ்வொப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.

கோர்பச்சேவின் வீழ்ச்சி

சோவியத் குடியரசின் ஒழிப்பு கோர்பச்சேவிற்கு மேற்கு நாடுகளில் புகழைத் தேடித் தந்தாலும் இறுதிவரை அவரது பெயர் அவரது சொந்த நாட்டில் அவமானப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. அவரது ஆயுதக் குறைப்ப்பு, ஜேர்மனியின் ஒருங்கிணைப்பு, இரும்புத் திரைக் களைவு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கியமை ஆகியன அவருக்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத் தந்திருந்தாலும் ரஸ்யாவைப் பலவீனப்படுத்தியமைக்காக அவர் தனது சொந்த நாட்டு மக்களால் எப்போதும் வெறுக்கப்பட்டவராகவே இருந்தார். சோவியத் இரணுவ, உற்பத்திப் பலத்தை முடக்கியதன் மூலம் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை தடுத்தி நிறுத்த முடியாத நிலையை அவர் உருவாக்க்கிவிட்டார் என்பது மன்னிக்க முடியாத குற்றமாக மக்கள் கருதிவருகிறார்கள்.

பதவி விலகியதைத் தொடர்ந்து ‘கோர்பச்சேவ் அறக்கட்டளை’ என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை அவர் நிறுவி உலகம் முழுவதும் சமாதானம், சூழல் போன்றன தழைக்க இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வந்தார். “மக்களிடம் ஒழுக்கத்தையும், பொறுப்புணர்வையும் கொண்டுவர நான் என்னாலான முயற்சிகளை மேற்கொண்டேன். அது எனது சித்தாந்த விருப்பு. ஆட்சியாளரின் அதிகார்ப் பசியையும், அதைகாரத் திமிரையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இருந்தது. சில விடயங்களை என்னால் சாதிக்க முடியாமல் போய்விட்டது ஆனாலும் எனது அணுகுமுறையில் தவறிருக்கிறதென நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என அவர் தனது நூலொன்றில் குறிப்பிடுகிறார்.