மீண்டும் தமிழரைக் கைவிடப்போகிறதா ஐ.நா.? – ஏமாற்றம் தரும் தீர்மானம்


ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தீர்மானத்தின் வரைவு மிகுந்த ஏமாற்றம் தருவதாகவும், ஆணையாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கையில் இருக்கும் உறுதி கொஞ்சம்கூட அதில் இல்லையெனெவும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உட்கட்டுமானம், கண்ணிவெடியகற்றல், காணிகளை மீளக் கையளித்தல், உள்ளக இடப்பெயர்வாளர்களை மீளக்குடியேற்றுதல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை நாம் வரவேற்கிறோம். இருப்பினும் அந்நாட்டில் போர் விட்டுச் சென்ற துன்பகரமான விடயங்களை நிவர்த்திசெய்து நீண்டகால அமைதியைக் கொண்டுவர மேலும் செய்யவேண்டியுள்ளது. மனித உரிமைகள் சபையின் இக்கூட்டத்தொடருக்காக இணைத்தலைமை நாடுகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

இணைத்தலைமை நாடுகள் சார்பாக – கனடா, ஜேர்மனி, வட மகெடோனியா, மலாவி, மொண்டிநீக்ரோ, பிரித்தானியா

அப்படி இருந்துங்கூட இவ்வரைவை நிராகரிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது எனவும் இதன்மூலம், இத் தீர்மானத்தை வாக்கெடுப்பு விட அது முயற்சிக்கலாம் என நம்பப்படுகிறது. வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக அதிக வாக்குகளைப் பெற சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நட்புநாடுகள் உதவிசெய்யுமென அது நம்புவதாகவும் தெரிகிறது.

இந்த தீர்மானத்தின் வரைவு, 2014 இல் முன்வைக்கப்பட்ட தீர்மானமளவுக்குக்கூட இல்லை எனவும் இது மனித உரிமை செயற்பாட்டாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. மனித உரிமைகள் சபை இலங்கைக்கு எதிராகத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும்படி கோரி உலகம் பூராவுமிருந்து மனித உரிமை ஆர்வலர்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

போர்க்குற்றங்கள், பிரச்சினைகளுக்குரிய வழக்குகள் தொடர்பாக இலங்கைக்கு எதிரான ஆதாரங்களைக் கண்டுபிடித்துச் சேமிப்பதில் மனித உரிமைகள் சபை அலுவலகம் கவனம் செலுத்தவேண்டுமென இத் தீர்மானம் கோருகிறது. மிக மோசமான குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளை நீதிக்கு முன் கொணரத் தேவையான சர்வதேச, பாரபட்சமற்ற, சுயாதீன பொறிமுறையொன்றைக்கூட அது கோரவில்லை. இப்படியான ஒரு பொறிமுறை சிரியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.எண்ணற்ற விசாரணைக் கமிசஷன்களை நியமிப்பதன்மூலம் மூலம், இலங்கையின் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கொண்டுவர எத்தனிக்கும் நீதிமுயற்சிகளுக்குத் தடங்கல்களை உருவாக்குகின்றார் எனவும் இதனால் அங்கு மனித உரிமைகள் பேராபத்தை எதிர்நோக்குகிறது எனவும் 46 வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஆணையாளர் பக்கெலெ தெரிவித்துள்ளார். அத்தோடு, போர்க்குற்றங்களையும், அட்டூழியங்களையும் புரிந்தமைக்காக இலங்கையை ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல உதவுமாறு அங்கத்துவநாடுகளிடம் கேட்டிருந்தார். அவரது 17 பக்க அறிக்கையில், மனித உரிமைகள் சபையுடனான உறவில் இலங்கை ஒரு திருப்புமுனையில் இருக்கிறதெனவும், போர்க்காலத்தில் அது இழைத்த குற்றங்களை நிவர்த்தி செய்யமுடியாத நிலையில் அது ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றிலிருந்து விலகிப்போகும் ஆபத்தை முன்னெச்சரிக்கையாகக் காட்டிநிற்கிறது எனவும் குறிப்பிடுகிறார். பாரதூரமான மனித அவலங்கள் ஏற்படுவதற்குமுன் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்ற ஐ.நா.வின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் விதமாக ஆணையாளரின் எச்சரிக்கை இருந்தது. 2009 இல், போரின் இறுதிக்காலத்தில் நடைபெற்ற மனிதப் பேரழிவைத் தடுக்க ஐ.நா. தவறியிருந்தது என்பதை உதாரணமாகக் கொண்டு, இப்படியான அவலங்கள் நடைபெறாது தடுக்க இனிவரும் காலங்களில் ஐ.நா. தடுப்பு நடவடிக்கைளில் முற்கூட்டியே ஈடுபடவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 2021க்கான தீர்மான வரைவு, ஆணையாளரால் முன்வைக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையையும்கூட உள்வாங்கவில்லை. இவ்வரைவு மேலும் திருத்தங்களுக்கு உள்ளாகலாமெனினும் அது மேலும் பலங்குறைக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகமுண்டு என செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர்.மனித உரிமை அமைப்புகளும், தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் இத் தீர்மானத்தில் காணும் பலவீனங்களுக்கு அப்பால், இலங்கை அரசு அதை நிராகரிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதோடு, அதன் மீதான வாக்கெடுப்பையும் நிகழ்த்துவதற்கு அங்கத்துவ நாடுகள் மீது அழுத்தங்களை மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரியவருகிறது.

ஆணையாளர் பக்கெலெவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள “பிற்காலத்தில் தொடரப்படும் குற்றவியல் நீதிமன்ற வழக்குக்காக, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டிச் சேமிக்கவேண்டும்” என்ற விடயத்தை முற்றாக நிராகரித்தது மட்டுமல்லாது, இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையில் இருந்து, 13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளை அமைப்பது பற்றிய குறிப்பை நீக்வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா போன்ற கடும் போக்காளர்கள் கோரும் மாகாணசபை முறைமை ஒழிப்பு தொடர்பாக 13வது திருத்தத்தைத் திருத்த கோதாபய ராஜபக்ச திட்டமிட்டு வருகிறார். இந்திய அரசு பாரதூரமான எதிர்ப்பைக் காட்டாதவரைக்கும், இன்னும் சில மாதங்களில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து 13 வது திருத்தத்தை முற்றாக நீக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.