ஜனவரி 13 அன்று வெளிவரவிருக்கும் விஜயின் மாஸ்டர் திரைப்படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு சென்னை மற்றும் பல மாவட்டங்களிலும் நோய்த்தடுப்பு முயற்சிகளை உதாசீனம் செய்துகொண்டு ரசிகர்கள் திரையரங்கு வாசல்களில் முண்டியடித்து வருகிறார்கள். சிலர் நாட்கணக்காக வரிசையில் காத்திருக்கிறார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்ற வாரம், நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, கோவிட் தடுப்புத் தொடர்பாக தமிழக அரசு விதித்திருந்த ‘50% அனுமதி’ச் சட்டத்தை அரசு நீக்கி 100% அனுமதிக்கு இணங்கியிருந்தது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் மருத்துவ சமூகத்தின் பலத்த எதிர்ப்பு காரணமாகவும், சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசு ஆகியவற்றின் அழுத்தம் காரணமாகவும் தமிழக அரசு தனது உத்தரவை மீளப்பெற்றிருந்தது.
50% அனுமதியின் போதும் திரையரங்குகளில் நோய்த் தொற்று அதிகரிப்பதற்கான சூழல் இருக்கிறது; திரையரங்குகளுக்குள் மீள்சுழற்சிக்குள்ளாகும் காற்று நோய்க் கிருமிகளைக் காவிச் செல்லுமாதலால் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என மருத்துவ சமூகம் தெரிவிக்கிறது.
இருப்பினும் ரசிகர்கள், பெரும்பாலும் இளைஞர்கள் இவ்வாலோசனைகளை உதாசீனம் செய்து திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். ரசிகர்களைக் கட்டுப்பாட்டூக்குள் கொண்டுவர முடியாத பல திரையரங்குகள் காவற்துறையின் உதவியை நாடியும், சிலர் இணையவழியாக டிக்கெட்டுகளை விற்பனையை மேற்கொண்டும் வருகின்றன.