மாவை சேனாதிராஜா: தமிழரின் விடிவுக்காக வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர்
பகீரதன் அமிர்தலிங்கம்

அண்ணன் மாவை சேனாதிராஜா அவர்கள் எம்மை விட்டு மறைந்துவிட்டார். தனது வாழ்வின் பெரும்பகுதியை ஈழத்தமிழரின் விடிவுக்காக உழைத்த இன்னும் ஒரு உயிர் நிரந்தரமாக விடைபெற்று கொண்டது.
அறுபதுகளில் தமிழரசு கட்சியின் சத்தியாக்கிரக போராட்டத்திலிருந்து, அண்மைய பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டங்களிலெல்லாம் கலந்து கொண்டவர். தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் நீண்ட கால தொண்டர், தலைவர். எழுபதுகளில் திருமதி பண்டாரநாயக்கா அரசினால் கைதாகி, சி.ஐ.டி பஸ்ரியாம்பிள்ளையின் சித்திரவதைகளுக்கெல்லாம் முகம் கொடுத்து பல ஆண்டுகள் சிறையில் வாடிய இளைஞர், இன்றைய தமிழரசின் தலைவர். பல சந்தர்ப்பங்களில் இராணுவ முகாமில் மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தவர்.
ஆயுதப் போராட்டம் மவுனிக்கப் பட்டபின் அரசியல் ரீதியாக பல நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டவர், அண்மைக்காலமாக பல விமர்சனங்களுக்கும் உள்ளானவர். அன்னார் தமிழர் விடுதலை கூட்டணி சென்னையில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு அங்கிருந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதன் அச்சாணியாக செயல்பட்டவர். அந்த அமைப்பின் அலுவலகத்தை பல இடர்களின் மத்தியிலும் சென்னையில் நடாத்தியவர். அரசியல் அடைக்கலம் தேடி உலகெல்லாம் சென்றவர்களுக்கெல்லாம் சலிக்காது அவர்களின் அரசியல் புகலிடத்திற்கான ஆவணங்களை, ஆதரவு கடிதங்களை எனது தந்தையூடாக பெற்று, அனுப்பி பலருக்கு அரசியல் புகலிடம் கிடைக்க அரும்பாடு பட்டவர் அவர்கள் வாழ்வை ஸ்திரப்படுத்தியவர்.
இன்று தன்னுடைய நிலையை தமிழரசுக்கட்சியில் ஸ்திரப்படுத்த தவறியதால், நேற்று கட்சியில் இணைந்து கொண்டவர்களாலும், சில பச்சோந்திகளாலும் விசமர்களாலும் தாக்கப்பட்டு மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகி அதனாலேயே பாதிக்கப்பட்டவர்.
அண்ணா நீங்களும் சோகமான எமது விடுதலை போராட்டத்தின் ஒரு அத்தியாயமே. சென்று வாருங்கள்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது மனைவி அக்கா பவானிக்கும் பிள்ளைகள் அமுதன், ஆரா, தாரகா மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் எமது ஆழ்ந்த அஞ்சலிகள்.
