Sri Lanka

மாவீரர் நாளை அனுட்டித்தமைக்காக யாழ்ப்பாணத்தில் அருட் தந்தை பாஸ்கரன் கைது


யாழ். ஆயர் இல்லத்துக்கு முன்பாக மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கு செய்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போரில் இறந்த மாவீரர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோரின் படங்களையும், தீப்பந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட வளையங்களையும் கொண்டு ஆயர் இல்லத்துக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகளை அருட் தந்தை ஒழுங்கு செய்திருந்தார் எனவும் இதை யாரோ பொலிசாருக்குத் துப்புக் கொடுத்ததன் பேரில் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்வை ஒழுங்குசெய்தார் என்ற குற்றத்திற்காக 47 வயதுடைய அருட் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சமூகங்களுக்கிடையே இனக் குரோதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டதற்காக அவர்மீது வழக்குத் தொடரப்படுமெனவும் பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் றோஹண ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.