World

மாலைதீவு: ‘சர்வதேச யோகாசன நாள் நிகழ்வைக்’ குழப்பிய குண்டர்கள்

மாலைதீவு கலோல்ஹு உதைபந்தாட்டத் திடலில் இந்திய தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘யோகாசன நாள்’ நிகழ்வுகளை குண்டர்கள் சிலர் குழப்பியது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்) ‘சர்வதேச யோகாசன நாள்’ எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் முகமாக இந்திய தூதரக அதிகாரிகள் உதைபந்தாட்டத் திடலொன்றில் யோகாசன நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர். நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தடிகள், பொல்லுகளுடன் நுழைந்த காடையர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்களை மேர்கொண்டனர். சிறிது நேரத்தில் பொலிசார் தலையிட்டு காடையர்களைத் துரத்தியதன்பின் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றதாகத் தெரிய வருகிறது.

இது பற்றிப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சம்பவ இடங்களிலிருந்து பெறப்பட்ட தடயங்களை வைத்துப் பார்க்கும்போது இதன் பின்னால் எதிர்க்கட்சிக்காரர்களின் கைகள் இருப்பதாகப் பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.

இச் சம்பவம் மிகவும் மோசமான ஒன்று எனத் தான் கருதுவதாக மாலைதீவுகளின் ஜநாதிபதி இப்ராஹிம் மொஹாமெட் சோலி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக தான் உடனடி விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்குப் பொறுப்பானவர்கள் விரைவில் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீம் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியாவே காரணம் என்ற காரணத்தை முன்வைத்து ‘இந்தியாவே வெளியேறு’ என்ற போராட்டத்தை எதிர்க்கட்சியான மாலைதீவுகளின் முற்போக்குக் கட்சி (Progressive Party of Maldives (PPM) முன்னெடுத்து வருகிறது. சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் ‘யோகாசன நிகழ்வு என்பது ஒரு இந்து வழிபாட்டு முறை ஆகையால் இஸலாமிய நாடான மாலைதீவில் அதை அனுமதிக்கக்கூடாதெனவும் அதில் எவரும் பங்குபற்றக்கூடாது எனவும் கூறி பலவகையான சமூகவலைச் செய்திகள் பரப்பப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் செய்திகளின் மூலம் மதவெறி உணர்வுகளைத் தூண்டி பிரச்சினைகளை உருவாக்கச் சிலர் முனைவதாக ஜனாதிபதி சோலி தெரிவித்துள்ளார்.

யோகாசன நிகழ்வுகளின்போது பல ராஜதந்திரிகள், மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் மாலைதீவு பிரஜைகள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இவ்வேளையில் தடிகள் பொல்லுகளுடன் உள்நுழைந்த காடையர்கள் பொருட்கள், தளபாடங்களைத் தாக்கியழித்தும், பங்குபற்றியோரைத் தாக்க முற்பட்டும் பலவகையான இழிசெயல்களைச் செய்திருந்ததாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் ஈடுபட்ட காடையர்களுக்கும் எதிர்க்கட்சி அலுவலகத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக முதற்கட்டப் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உலக யோகாசன நாளை மாலைதீவுகள் 2015 இலிருந்து கொண்டாடி வருவதாகவும், ஜூன் 21, 2014 இல் ஐ.நா. வில் முன்மொழியப்பட்ட ‘சர்வதேச யோகாசன தினத்தின்’ 177 முன்மொழிவாள நாடுகளில் மாலதீவும் ஒன்று எனவும் இன்று நடைபெற்ற சம்பவத்தைத் தாம் முற்றுமுழுதாகக் கண்டிபதாகவும் ஆளும் கட்சியான மாலைதீவு ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.