IndiaNewsSri Lanka

மார்ச் 30 பிரதமர் மோடி இலங்கை வருகிறார்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வொன்றுக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பாரா?

இலங்கையில் நடைபெறவிருக்கும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Corporation) கலந்துகொள்ளும் பொருட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 30 இல் இலங்கை வரவுள்ளார். அதே வேளை இந்திய உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டிருக்கும் யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தையும் அவர் திறந்து வைப்பார் எனக் கூறப்படுகிறது. இக் காரணத்துக்காகவும், இந்திய-தமிழர் உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணத்துக்காகவும், பிரதமர் மோடி பலாலி விமானநிலையத்தில் முதலில் இறங்கி யாழ்ப்பாணத்திற்கு வருகையை மேற்கொண்டபின்னரே கொழும்பு செல்லவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

பிரதமர் மோடியின் வருகையின்போது 13 ஆவது திருத்தம் நடைமுறப்படுதுவது பற்றி அழுத்தம் ஏதாவது கொடுக்கப்படுமா என்பது போன்ற ‘தி ஃபெடெரல்’ ஊடகத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் “13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்துவது மட்டும் நாம் எதிர்பார்க்கும் தீர்வல்ல. நாம் எதிர்பார்ப்பது இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படலாம். 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பின் ஒரு அங்கமாக இருப்பதனால் அதை முதலில் முழுமையாக நடைமுறப்படுத்த வேண்டும். இரண்டாவது கட்டமாக நியாயமான அதிகாரப் பகிர்வொன்று தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டுமென்பதே எமது கோரிக்கை. இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் 13 ஆவது திருத்தம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கொடுக்கவில்லை. அது முற்றாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர் தமது சுயாட்சி உரிமையைத் தீர்மானித்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

“ஈழத் தமிழரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியம் என்பதை நாம் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறோம். சீனாவுடனான உறவை இலங்கை மிகவும் நெருக்கமாக்கிக்கொண்டு வருவது பற்றி நாம் எமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்திருக்கிறோம். தெற்கு மற்றும் மேற்கு பிரதேசங்கள் ஏற்கெனவே சீனாவின் கைகளுக்குச் சென்றுவிட்டது. வடக்கும் கிழக்கும் அதன் கைகளில் விழுந்துவிடக்கூடாது என்பதில் நாம் மிகவும் அக்கறையோடு செயற்படுகிறோம். அயலவர் என்ற நிலையில் இலங்கையில் அமைதியும் சமாதானமும் நிலைநாட்டப்படுவதில் இந்தியா அக்கறையுடன் செயற்படுகிறது. தமிழ் மக்கள் சுயாட்சியைப் பெறுவதை வெளிநாடுகளின் தலையீடு குழப்பிவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திரு சுமந்திரன், “அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவருவதில் இலங்கை அரசு அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை. இது எமக்கு இருக்கும் முக்கியமான சவால். அதே வேளை பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒப்பீட்டளவில் தமிழ் இளைஞர்களையே மிகவும் மோசமாகப் பாதிக்கிறது என்பதும் எமது இனம் எதிர்நோக்கும் இன்னுமொரு சவால். அதை முற்றாக நீக்கவேண்டுமென்று நாம் போராடிவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

அதே வேளை மார்ச் 15 அன்று இந்தியா சென்றிருந்த இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவசர தேவைகளுக்காக இந்திய உதவியாக 1பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். நிபநதனைகளுடனான இக் கடன் ஒப்பந்தத்தில் முக்கியமாக இழுபறியில் இருந்துவரும் திருகோணமலை எண்ணைக்குத அபிவிருத்தி, மன்னார் எண்ணை வயல் அகழ்வுகள் ஆகிய இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பும் மன்னாரில் 500 மில்லியன் டாலர்கள் செலவில் அதானி குழுமத்தின் தனியார் முதலீடான காற்றாடி மின்னுற்பத்தி திட்டமும் முக்கியமான அம்சங்கங்களாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத் திட்டங்கள் எல்லாம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மையம் கொண்டிருப்பதால் அவற்றின் பாதுகாப்புக்காக தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதும் இந்தியாவுக்கு அவசியமானதொன்றாக இருக்கும் என்றாலும் தனது முதலீடுகளுக்கே இந்தியா முதலிடம் கொடுக்குமெனவும் எதிர்பார்க்கலாம். (நன்றி: ‘தி ஃபெடெரல்’ / ‘சிலோன் ருடே’)