மார்ச் மாதமளவில் வடக்கில் 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்

பலாலி, வலி-வடக்கு, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு பிரதேசங்களில் விரைவில் காணிகள் அடையாளமிடப்படும்

பலாலி உட்பட ஆறு வெவ்வேறு பகுதிகளில் இராணுவத்தின் கையிலிருக்கும் மொத்தம் 120 ஏக்கர் நிலங்களை பெப்ரவரி-மார்ச் மாதப் பகுதியில் விடுவிக்க முப்படையினரும் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னக்கூன் தெரிவித்திருக்கிறார். இதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டதெனவும் 40-50 நாட்களுக்குள் இக்காணிகள் அந்தந்த பிரிவுச் செயலகங்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விடுவிக்கப்படவேண்டிய காணிகளை விரைவாக அடையாளம் கண்டு அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண வரவின்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க பணித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனத் திணைக்களம் ஆகியவற்றினால் வர்த்தமானி அறிவிப்பின்கீழ் அபகரிக்கப்பட்ட 600 ஏக்கர் நிலங்கள் சிலவற்றில் மக்கள் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பலர் பல தலைமுறைகளாக வாழ்ந்துகொண்டிருந்த நிலங்களை போர் மற்றும் சுனாமி காரணமாகக் கைவிட்டுப் புலம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் சில பிரதேசங்களில் பாடசாலைகள், கோவில்கள், மசூதிகள் ஆகியவை இயங்கிவருகின்றன. இக்காணிகள் சில அரசுக்குச் சொந்தமானவையெனினும் பல உறுதிக்காணிகளாகவும் உள்ளன. இந்நிலங்களில் பல வருடங்களாக அவர்களது குடும்பங்கள் வாழ்ந்தமைக்கான போதுமான ஆதரங்கள் பலரிடம் உண்டு. இவற்றில் 30 ஏக்கர்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகத்துக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன.

வனவிலங்கு மற்றும் வனத்துறைத் திணைக்களங்களினால் வர்த்தமானி அறிவிப்புக்குள்ளாக்கப்பட்ட பல காணிகள் தற்போது பரிசீலனைக்குட்டௌத்தப்பட்டுள்ளன. இவற்றின் எல்லைகளைத் தீர்மானிக்கும் நடைமுறை மிகவும் நீண்டது. நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, பலாலி, வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் இப்படியான பல காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்காணிகளில் மக்கள் தொடர்ந்து வாழமுடியுமா எனத் தற்போது அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாகவும் இதைத் தொடர்ந்து இதர மாவட்டங்களுக்கும் இந்நடைமுறை விரிவுபடுத்தப்படும் எனவும் அறியப்படுகிறது. சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் யாழ்ப்பாணத்தில் இந்நிலங்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்குமிடையில் தற்போது சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.

“இம்மக்கள் மிக நீண்டகாலமாகத் துன்பங்களை அனுபவித்துவிட்டனர். அவர்களுக்கான அடிப்படை மனிதத் தேவைகளை நாம் கொடுக்க விரும்புகிறோம்” என தென்னக்கூன் தெரிவித்துள்ளார். திங்களன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வனவிலங்கு மற்றும் வனவள அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைகளுக்கமைய காணிகள் விடுவிப்பு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் இந்நடவடிக்கைகள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், பொலந்றுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்படுமெனவும் அறியப்படுகிறது.